

தூத்துக்குடியில் அப்போதெல்லாம் மொத்தமே நான்கு திரையரங்குகள்தான். இருந்ததிலேயே சார்லஸ் திரையரங்கம்தான் பெரியது. என் பால்யகாலக் கனவுகளின் சமுத்திரம் அது. மறக்கவே முடியாத சம்பவங்களுடன், தமிழ்நாட்டைப் புரட்டிப்போட்ட அரசியல் நிகழ்வுகளையும் சுமந்துநின்ற கட்டிடம் அது.
1960-ல் கட்டப்பட்ட அந்த அரங்கின் கட்டிட அமைப்பு, அழகியலின் உச்சம் என்று சொல்லலாம். விஸ்தாரமான நிலப்பரப்பில், பச்சைப் புல்வெளிகள், நீரூற்று என்று கம்பீரமான புறத்தோற்றம். அகண்ட திரையும், விசாலமான பால்கனியும், வட்டவடிவமான பக்கவாட்டுப் பால்கனிகளும், தூண்களே இல்லாததால் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்ட திரையும் பிரமிப்பூட்டும். டிக்கெட், பெஞ்ச் டிக்கெட், பால்கனி என்ற பலதரப்பட்ட பார்வையாளர்களின் வகுப்புகள், Dukes, Viscount, Marquess and King's Circle என்று பெயரிடப்பட்டிருந்தன. 1,000-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து பார்க்கக்கூடிய அளவுக்கு விசாலமான திரையரங்கம் அது.
சாய்வான முன்னமைப்பில் வளைந்து நெளிந்து போகும் படிக்கட்டில் மேலேறி னால், முதல் மாடி. அங்கிருந்து நோக்கினால் வெளியே வீ.இ. சாலை தெரியும். மதுரை தங்கம் திரையரங்கத்துக்கு அடுத்து, இந்தி யாவிலேயே மிகப் பெரிய திரையரங்கம் என்று பெயர்பெற்றிருந்தது.
அந்த சார்லஸ் திரையரங்கில்தான் எம்ஜிஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் 1973 மே 11-ல் திரையிடப்படவிருந்தது. நீண்ட நாட்களாகவே கடனில் தத்தளித்துக் கொண்டிருந்ததாகச் சொல்லப்பட்ட அந்த அரங்கின் உரிமையாளருக்கு, முன்பணம் எதுவும் வாங்காமல் அந்தப் படத்தை எம்ஜிஆர் கொடுத்ததாகத் தகவல் உண்டு.
அப்போது, எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்த நேரம். தமிழ்நாடு எங்கும் அவரது பழைய படங்களைக்கூட மீண்டும் திரையிட முடியாத அளவுக்கு அச்சுறுத்தல் இருந்த காலம். அறிவிக்கப்பட்ட தேதியில், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ சார்லஸ் திரையரங்கில் திரை யிடப்படவில்லை. காரணம், உள்ளூர் அரசியல்வாதிகளின் மிரட்டல், உருட்டல் என்று சொல்லப்பட்டது.
அலைஅலையாய்த் திரண்ட எம்ஜிஆர் ரசிகர்கள், பக்கத்து ஊரான திருநெல்வேலிக்கும் வசதியான ரசிகர்கள் 3 மணி நேரம் பயணித்து மதுரைக்கும் சென்று படம் பார்த்தார்கள். இன்னும், செல்வச் செழிப்புள்ள ரசிகர்கள், சென்னைக்குச் சென்று தேவிபாரடைஸில் பார்த்ததாகச் சொல்வார்கள். படம் வெளியான அன்று சென்னை அண்ணாசாலையே ஸ்தம்பிக்கும் அளவுக்குக் கூட்டம் இருந்ததாம்.
சுவரொட்டி விளம்பரம் தடைசெய்யப் பட்டதால், நாளேடுகளில் ஒரு பக்க விளம்பரம் மட்டுமே வந்திருந்தது. கறுப்புக் கண்ணாடியும் கோட்டும் சூட்டும் சூட்கேஸும் கொண்ட எம்ஜிஆர் என்ற ஒற்றை மனிதனின் கம்பீரமான உருவம் மட்டுமே அந்த விளம்பரத்தில் இருந்தது.
இணையம் இல்லை; ஃபேஸ்புக் இல்லை; செல்போன் இல்லை. ஏன், சுவரொட்டிகள்கூட இல்லை. ஆனால், அரங்குக்கு வெளியே கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூடிநின்ற அதிசயம் இன்று சாத்தியமா தெரியவில்லை.
சார்லஸ் திரையரங்கில், படம் மூன்று நாள் கழித்துத் திரையிடப்பட்டது. படம் திரையிடப்படுவதைத் தடுக்க, அரை கிலோமீட்டர் அகலம் கொண்ட வாயில் வெளியில் சிலர் காத்திருந்தனர்.
கவுன்ட்டரில் டிக்கெட் கொடுக்க ஆரம்பித் தாகிவிட்டது. நீ....ண்ட வரிசைகள். வரிசை களைத் தாண்டி, தலைகளில் நடக்கும் சாமர்த்தியமான கால்கள்; சத்தங்கள்; சர்ச்சைகள்; ஆரவாரங்கள்; ஆர்ப்பாட்டங்கள்!
11 வயது நிரம்பிய நானும், அண்ணன் மணியும், மச்சினன் பிரபாவும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி, மூச்சு வாங்க, அதிகாலையில் இருந்தே காத்துக்கிடந்த மயக்கம் தலையைச் சுற்ற, போராடி கவுன்ட்டரில் கையை விட்டு டிக்கெட் எடுத்தபின் வந்த வெற்றிக்களிப்பு மறக்க முடியாதது.
“ஏலே! படம் போட்டாம்லே; படம் போட்டாம்லே'' - திடீரென்று பதற்றமான குரல்கள் சுற்றிலும் அதிர்வலைகளை உருவாக்கின. வாசலில் நின்றிருந்த ‘தடுக்கும் படையாளர்கள்' அதிர்ச்சி ஆனார்கள். அரங்கத்தின் உள்ளிருந்து சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலில் பாட்டு வரிகள் காற்றின்மீது போர் தொடுத்து அதிரடியாய் வெளிவந்தது: “நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்''.
எப்படி ரீல் பெட்டி உள்ளே போனது என்ற ரகசியம் சற்று நேரத்தில் தெரியவந்தது. சற்றுமுன் உள்ளே போன பஸ்ஸின் இன்ஜின் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்தது ரீல் பெட்டி.
“அத்தான்! படம் போட்டான்.... படம் போட்டான்'' என்ற பதற்றத்துடன், அண்ணன் வாங்கிக்கொடுத்த கண்ணாடி டீ டம்ளரைக் கீழே தவற விட்டான் மச்சினன் பிரபா. மணி அண்ணன் மடமடவென்று கூட்டத்தின் உள்நுழைந்து இன்னொரு டீயும் சமோசாவும் வாங்கிக்கொடுக்க, அவற்றைக் காய்ந்த வயிற்றுக்குள் அனுப்பி விட்டு, மூவரும் திமுதிமு என்று ஓடிய கூட்டத்துக்குள் நுழைந்து அரங்கத்தில் ஒருவாறு இடம்பிடித்தோம்.
மாலைகளும் பூக்களும் கற்பூர ஆரத்திகளும் ரசிகர்களின் வெறிபிடித்த ஆரவாரங்களும் விஞ்ஞானி எம்ஜிஆரின் மின்னல் ஆராய்ச்சிக் காட்சிகளை மறைத்துக் கொண்டிருந்தன.
படம் முடிந்து பசியும், களைப்பும் பின்னியெடுக்க, கூட்டத்தோடு கூட்டமாய் வெளியே வருகையில், அடுத்த காட்சிக்குத் திரண்டிருந்த கூட்டம், “டிக்கெட் கிடைக்குமா, கிடைக்காதா'' என்ற கவலையோடு நின்றதை, இறுமாப்பும் கர்வமும் கலந்த ஏளனப் பார்வையோடு பார்த்தது இன்னும் ஞாபகக் குகையில் ஒளிந்திருக்கிறது.
இன்று அந்த சார்லஸ் திரையரங்கம் இல்லை. அந்த இடத்தில் ஷாப்பிங் மால் வந்துவிட்டது. பழமையைப் பின்தள்ளிவிட்டு, புதுமை அரசாள்கிறது.
அன்று சார்லஸ் திரையரங்கில், ‘தங்கத் தோணியிலே…’ பாட்டுக்கு, திரைமுன் இருந்த பிரத்தியேகமான வட்டவடிவ, அகலத் திண்டில் பூக்களைத் தூவி, சட்டை, லுங்கியோடு பாடி ஆடிய இளைஞர்கள், இன்று அந்த நினைவுகளை அசைபோட்டபடி சாய்வுநாற்காலியில் அமர்ந்திருக்கலாம். சிலருக்கு அந்த நினைவே இல்லாமலும் இருக்கலாம். காலமும் ஆடுமல்லவா நடனம்!
- மஹாரதி, தொடர்புக்கு: lakshmison62@gmail.com