Published : 22 Mar 2018 04:05 PM
Last Updated : 22 Mar 2018 04:05 PM

ரஜினி அரசியல்: 40-காவிரி போராட்டத்தின் பின்னணி சக்திகள்

அதில் விஜயகாந்த் மட்டும்தான், 'உண்ணாவிரதத்தை ஒருநாள் தள்ளி வையுங்கள். நடிகர் சங்கத்தில் பிளவு வேண்டாமே!' என்று கோரிக்கை வைத்திருந்தார். அதன் எதிரொலியாகவே விஜயாந்திடம் கருணாநிதியை சந்திக்கும் கோரிக்கையை வைத்திருக்கிறார் ரஜினி. 'நான் கலையுலகத்துக்கு எதிராகப் பேசுபவன் அல்ல. உங்கள் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை ஒரு நாள் தள்ளி வைக்கத் தயார்தான். ஆனால் அதற்கு முன்பு கருணாநிதியைப் பார்த்து ஒரு வார்த்தை பேசி விடுங்கள்' என்றிருக்கிறார்.

நெய்வேலி பேரணி, ரஜினி உண்ணாவிரத விவகாரங்களில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கும் எண்ணம் விஜயகாந்துக்கு இல்லவே இல்லை. ரஜினியின் வற்புறுத்தலுக்காகவே கடைசி நேரத்தில் அதைச் செய்தார். ஆளுங்கட்சி அதிமுக மனக்கசப்புக்கு ஆளானால் விளைவுகள் சரியானதாக இருக்காதே என்ற யோசனையோடுதான் கருணாநிதியை போய்ப் பார்த்தார் விஜயகாந்த். 'பாரதிராஜா பெரிய ஆள் ஆவதற்கு நீங்கள் எதற்கய்யா பல்லக்கு தூக்குகிறீர்கள்?' என்று கருணாநிதி பச்சை மிளகாய் காரத்தோடு கேட்டுமிருக்கிறார்.

இத்தனை அரசியலுக்கும் பின்னணியில் டான்சி வழக்கு தீர்ப்பும், அதனால் தமிழகத்தில் ஏற்படும் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதே ரஜினியின் உத்தேசம். அதற்கு வியூகம் வகுத்துக் கொடுப்பது மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக என்றெல்லாம் அந்த காலகட்டத்தில் முன்னணிப் புலனாய்வு இதழ் கட்டியம் கூறியிருந்தது. காவிரி பிரச்சனைக்கான உண்ணாவிரதம் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்தபோது ரஜினி அணிந்திருந்த காவி பனியனையும் அதற்கு அரசியல் குறியீடாக சுட்டிக் காட்டியிருந்தார் கழுகார்.

அதே சமயம் இன்னொரு புலனாய்வு இதழில் 'வம்பானந்தா' இதே அரசியலை சற்றே வேறு விதமான ஹேஸ்யங்களுடன் கலந்து கட்டியிருந்தார்.

'பாமகவும், அதிமுகவும் நெருங்கி வருவதாக அரசியல் வட்டாரம் கூறுகிறது. 'பாபா' படம் வந்த போது ரஜினியை எதிர்த்து டாக்டர் ராமதாஸ் குரல் கொடுத்த போதே, 'டாக்டர் ஐயா என்ன இருந்தாலும் தைரியசாலி. யாரும் தொடப் பயப்படும் ரஜினியை இப்படி போட்டுத் தாக்குகிறாரே!' என்று தன் கட்சி இரண்டாம் கட்ட தலைகளிடமே ஜெயலலிதா பாராட்டி இருக்கிறார். டாக்டர் ஐயாவுக்கும் அந்தச் செய்தி எட்டியிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் தமிழக அதிகாரிகளுடன் டெல்லி சென்றபோது மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தியை சந்தித்துள்ளார். அப்போது 'நாங்களே உங்கள் பக்கம் வர இருக்கிறபோது எங்கள் ஆட்களை ஏன் இழுக்கிறீர்கள்?' என்று கேட்டாராம்.

அது மட்டுமல்ல, தமிழக முதல்வரை சந்திக்க ஏ.கே.மூர்த்தி விடாமல் நேரம் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது எல்லாம் அரசியலில் கூட்டிக் கழித்துப் பார்க்க வேண்டிய சமாச்சாரங்கள். ரஜினி உண்ணாவிரதப் போராட்ட மேடைக்கு பின்னே, 'சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு-ஆண்டவன் தீர்ப்பு' என்று மட்டும் வாசகம் பெரியதாக எழுதி இருந்தது. இது காவிரி பற்றிய வார்த்தை அல்ல. வரப்போகும் டான்சி வழக்குத் தீர்ப்பையும் சேர்த்தே இப்படி பொதுவாக ரஜினி குறிப்பிட்டிருக்கிறார் என்று திமுகவினர் தமாஷாக டிஸ்கஸ் செய்தனர்.

ரஜினிக்கு ஆதரவு கொடுப்பதில் என்ன காரணத்தாலோ பாஜக தயக்கம் காட்டி இருக்கிறது. காங்கிரஸ் - திமுக இடையில் ரஜினி மீடியேட் செய்கிறாரோ என்ற திடீர் சந்தேகம் அவர்களுக்கு. அது மட்டுமல்ல. ஏற்கெனவே ரஜினி மீது பாரதிராஜாவுக்கு கோபம் என்று உளவுத்துறை ஜெயலலிதாவுக்கு செய்தி அனுப்பி இருக்கிறது. தன் படம் ஒன்றில் நடிப்பதற்கு ரஜினியிடம் கால்ஷீட் கேட்டாராம் பாரதிராஜா. 'பாலசந்தர் சார் கூடக் கேட்கிறார். அவருக்கே தரவில்லை. பிறகு பார்க்கலாம் என்று சொல்லி மறுத்துவிட்டாராம் ரஜினி. கோபமடைந்த பாரதிராஜா, 'பாபா' படம் வெற்றி பெறாத போது, விநியோகஸ்தர்களை ரஜினிக்கு எதிராக தூண்டி விட்டதாகவும், அது ரஜினிக்கும் தெரியும் என்றும் உளவுத்துறை செய்தி கூறுகிறது!' என நீள்கிறது அந்த ஹேஸ்யச் செய்திகள்.

இதேபோல் மேலும் பல ரஜினி உண்ணாவிரதம்- அரசியல் சம்பந்தப்பட்ட ஹேஸ்ய செய்திகள் தமிழகத்தை வலம் வந்தபடிதான் இருந்தன. அவற்றில் சில:

காவிரி விவகாரம் பரபரப்பானதும் ரஜினி சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களுக்கும் தமிழக அரசு போலீஸ் பாதுகாப்பைப் பலப்படுத்தியிருந்தது. பாதுகாப்பை காரணம் காட்டி ரஜினியின் செயல்பாடுகளை ஒவ்வொரு அங்குலமாக கண்காணிப்பதற்காகத்தான் தமிழக அரசு இந்த வேலையில் இறங்கியிருக்கிறது என குடும்பத்தினரே சிலர் ரஜினியிடம் சொல்லியிருக்கின்றனர்.

''அதற்கெல்லாம் நாம் ஒன்றும் செய்ய முடியாது. எனது நடவடிக்கைகள் எல்லாமே வெளிப்படையாக இருக்கும். மடியில கனமிருந்தால்தான் வழியில் பயம்? யார், யார் என்னைக் கண்காணித்து என்ன ஆகப் போகிறது? என்னைக் கண்காணிக்க வரும் போலீஸ்காரர்களை நம்மைச் சார்ந்தவர்கள் யாரும் எதுவும் செய்து விடக்கூடாது என்பதுதான் என் கவலையே. தேவையானால் அவர்கள் கேட்கும் தகவல்களை தாராளமாகச் சொல்லுங்கள். அவர்கள் கஷ்டப்படாமல் அதை சேகரித்துச் செல்லட்டும்!'' என்று அட்வைஸ் கொடுத்தார் ரஜினி.

பிரதமரை சந்திக்கச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு டெல்லி பறந்தார் ரஜினி. அவரால் பிரதமரை சந்திக்க முடியவில்லை. தொடர்ந்து அவர் ரிஷிகேஷ் சென்றதாக தகவல்கள் பரப்பப்பட்டன. ரஜினியும் பாபாஜி குகைக்கு சென்று வந்ததாகவே கூறினார். ஆனால் இதற்கிடையே இன்னொரு அரசியல் விஷயம் நடந்தது. ரஜினியின் அரசியல் ஆலோசகர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தையும், பாஜக தலைவர்களில் ஒருவரான முன்னாள் சட்ட அமைச்சர் அருண் ஜேட்லியையும் சந்தித்து விட்டுத் திரும்பினாராம் ரஜினி.

'பாபா' படம் வெளியான சமயத்தில் ரஜினியின் துணைவியார் லதாவின் கையே ஓங்கியிருந்தது. அப்போது ரஜினி மன்ற பொறுப்பாளர் சத்தியநாராயணா டம்மி ஆக்கப்பட்டிருந்தார். உண்ணாவிரதப் போராட்டத்திலோ அந்த நிலைமை தலைகீழ். காவிரி பிரச்சனை தொடர்பாக ரஜினி எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளிலுமே சத்தியநாராயணாவே முன்னிலை வகித்தார். ரஜினியின் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள வெளிமாவட்டங்களிலிருந்து கிளம்பத் தயாராக உள்ள ரசிகர்களின் வாகனப்படைகள் பற்றி சத்தியநாராயணாவிடம் பதைபதைப்புடன் விவரித்திருக்கிறார்கள் தமிழக உளவுப் பிரிவு போலீஸார். அவ்வளவு கூட்டமும் வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் சிக்கல் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

உடனே இதை ரஜினியிடம் டிஸ்கஸ் செய்த சத்தியநாராயணா மாவட்ட மன்றப் பொறுப்பாளர்களை டெலிபோன் அழைத்து தனியாக யாரும் வாகனம் பிடித்து சென்னை வர வேண்டாம் என்று உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார். அந்த வகையிலேயே மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஊர், ஊராக திடீர் உண்ணாவிரதத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதையும் மீறி பல மன்றங்கள் வாகனம் பிடித்து சென்னைக்கு வந்து விட்டதாம்.

உண்ணாவிரதத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு சென்னை, எழும்பூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் விடுதலைப் புலிகள் ஆதரவுக்கூட்டமொன்று நடந்திருக்கிறது. பழ. நெடுமாறன் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் வீராவேசமாக பேசியவர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அந்தப் பேச்சுக்காக பாரதிராஜாவை 'பொடா' சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று அரசுக்கு தூபம் போட்டார்களாம். என்ன காரணத்தாலோ, அரசு அப்படியொரு நடவடிக்கையில் இறங்கவில்லை. அதற்கு பிரதியுபகாரமாகத்தான் காவிரி விஷயத்தில் ரஜினியை எதிர்த்து பாரதிராஜா போர்க்கொடி தூக்கியிருக்கிறார் என்றும் ஹேஸ்யச் செய்திகளை சில ரஜினி ரசிகர்களே வாசித்தனர்.

ரஜினி 2002 நேரடியான செய்திகளாக இருந்தாலும், ஹேஸ்யச் செய்திகளாக இருந்தாலும் அதில் அரசியல் சுவாரஸ்யங்களே ததும்பின. அதற்குள் முழுக்க ரஜினியே வந்தார் என்பதுதான் ஆச்சர்யமே. இத்தோடு நின்றதா ரஜினியின் காவிரி அரசியல் என்றால் அதுதான் இல்லை. ராமாயணத்தின் ஆரண்ய காண்டம் போல் பல திருப்பங்களைக் கண்டது. தமிழகத்தின் முன்னணி அரசியல் தலைவர்களை திரும்பிப் பார்க்கவும் வைத்தது.

- பேசித் தெளிவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x