

கு
ழந்தை பிறந்த பிறகு ஏற்படுகிற மன அழுத்தத்துக்கு மருத்துவரீதியாக ஒரு பெயர் இருக்கிறது என்பது இந்தத் தலைமுறையில்தான் தெரியத் தொடங்கி யிருக்கிறது. இப்படி ஒன்று இருப்பது தெரியாமல் ‘பேஸ் தடித்து’ இருப்பவர்களைப் பேய் பிடித்ததாகச் சொல்லி வேப்பிலை அடித்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன... நடக்கின்றன. நானே ஆவணப் படம் ஒன்றில் பணியாற்றும்போது இதுபோன்ற நிகழ்வுகளைப் பதிவுசெய்திருக்கிறேன்.
உண்மையிலேயே இந்த மனஅழுத்தத்தைக் கண்டுகொள்ளாமல் மனப்பிறழ்வுக்குள் சிக்கிக்கொண்டு வேப்பிலை அடிக்கு ஆளாகும் நிலையிலிருந்து பலரும் நூலிழையில் தப்பித்திருக் கிறோம். குழந்தை வளர்ப்பென்பது ஒரு பொறுப்பு. ‘குழந்தை பிறப்பதற்கு முன்பே அது தெரிந்ததுதானே’ என்று சந்தேகம் எழும். எனக்கும் எழுந்திருக்கிறது. அதற்கு அப்போது என்னிடம் விடையில்லை. பிரசவத்துக்குப் பின்பான சமயத்தில் நான் முழுதுவதுமாக இழந்திருந்தது நம்பிக்கையை. ஏதேனும் கட்டுரையை டைப் செய்ய உட்கார்ந்து கீபோர்டில் உள்ள எழுத்துகளை சும்மாவேனும் வெறித்துப் பார்த்தபடி இருப்பேன். ‘எழுத வராது, அவ்வளவுதான்’ என்று முற்றிலுமாக என்னை நானே ஒதுக்கிவைத்திருந்த காலகட்டம். என்னுடைய குடும்ப மருத்துவர் வெங்கட்ராமன், மகப்பேறு மருத்துவர் அன்ஸு பன்சால் இவர்கள் இருவரும் ‘இது சகஜம்தான்’ என்று தேற்றினார்கள்.
என் மகள் மயூரா பிறந்தபோது மிகவும் எடை குறைவாக இருந்தாள். 24 மணி நேரமும் அவளுக்கு எங்களுடைய நெருக்கம் தேவைப்பட்டது. அவளுக்கு சிறு தொற்றும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஒரு குகைக்குள் வாழ்கின்ற பறவை கள் போல் இருந்தோம். மெல்ல மீண்டு வர நான் முதன்முதலில் செய்தது வாசிப்பைத் தொடங்கியதைத்தான். தீவிர வாசிப்பு. அதி தீவிரமாய். மூன்று மாத காலம் எதையும் எழுதாமல் வாசிப்பை மட்டுமே கொண்டிருந்தேன். உடலும், மனமும், மயூராவும் ஒன்றாய்த் தேறினார்கள். பாதியில் விட்டிருந்த ‘ஒளி வித்தகர்கள்’ மொழிபெயர்ப்பைத் தொடங்கினேன்.
எழுத்து, வாசிப்பு, இசை: இவை மூன்றும்தான் என்னை மீட்டெடுத்தவை. இவைதான் எனக்கான உந்துசக்திகள் என்று சொல்லிக்கொண்டே இருந்ததோடு, அதற்கான சூழலை ஏற்படுத் திக் கொடுத்தது கணவர் அய்யப்பன்தான். மனம் என்பது நாம் பிடிக்கும் களிமண்தான் என்று உணர வைத்த தருணங்கள்தான் இப்போது வரை என்னை செலுத்திக்கொண்டிருக்கின்றன. குழந்தைகளுக் கான நேரம் என்பது வேறு எதற்கானதும் அல்ல என்ற தீர்மானம் கொண்டிருக்கிறேன். அவர்கள் உறங்கியபின், விழிப்பதற்கு முன்பு என்பதுதான் எனக்காக எடுத்துக்கொள்ளும் நேரம். கொஞ்சம் சிரமம்தான். ஆனாலும் உற்சாகமாக இருக்கிறது.
இதையும் மீறி ஏற்படும் மனஅழுத்தத்தை என்ன செய்ய? ஒன்றும் செய்ய வேண்டாம்.. அப்படியே அனுமதிக்க வேண்டியதுதான். அது தானாகக் கடந்து போய்விடும்!
- ஜா.தீபா, எழுத்தாளர்.