Last Updated : 18 May, 2019 12:50 PM

 

Published : 18 May 2019 12:50 PM
Last Updated : 18 May 2019 12:50 PM

விபத்தில்லா தேசம்; சாலை விழிப்புணர்வுக்காக மாற்றுத்திறனாளியின் மாறுபட்ட பிரச்சாரம்

தமிழகத்தில் கடந்த ஆண்டு 63,920 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 12,216 பேர் உயிரிழந்தனர். இதில், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட விபத்துகள் நெடுஞ்சாலைகளில் நடந்துள்ளன. ஓராண்டில் சாலைகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை இழப்பது வேதனையானது.  இந்நிலையில் பாதுகாப்பான பயணத்தின் அவசியம் உணர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார் மாற்றுத்திறனாளி வீரமணி சேகர்.

இருசக்கர வாகனமாக இருந்தால் தலைக்கவசமும், நான்கு சக்கர வாகனமாக இருந்தால் சீட் பெல்ட் அணிவதும் கட்டாயம் அவசியம் என்பதே வீரமணி சேகர் முன்வைக்கும் பிரச்சாரம். சாலை விதிமுறைகளைக் கடைபிடித்து விபத்துகளைக் குறைத்திடுவோம் என்று துண்டுப் பிரசுரம் மூலமாகவும், மைம்  மூலமாகவும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.

வீரமணி சேகர் யார்?

வீரமணி சேகர் வாய்பேச முடியாத காது கேட்காத மாற்றுத்திறனாளி.  பெற்றோர், மனைவி, குழந்தைகள் என கூட்டுக்குடும்பத்தில் வசிக்கும் இவர் தொடர்ந்து தனது சமூக அக்கறையை வெளிப்படுத்தி வருகிறார். சென்னை அம்பத்துர் தாங்கல் ஏரிப் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒரு பிளாஸ்டிக் பொருள் கூட இல்லாத நிலையை ஏற்படுத்தினார்.

சமூக மாற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட வீரமணி சேகர் தற்போது தோழன் அமைப்புடன் இணைந்து சாலை பாதுகாப்புக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். தோழன் -  கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு பேரைக்கொண்டு சென்னையில் தொடங்கப்பட்ட அரசு சாரா அமைப்பு. இந்த அமைப்பானது ஆரம்ப காலகட்டங்களில் தலைக்கு ரூபாய் 25 கொடுத்து அன்பு இல்லங்களுக்கு உதவிசெய்யத் தொடங்கியது. பின் வரும் நாட்களில் வளர்ச்சியடைந்து சமூக மாற்றத்திற்கான பேச்சுப் பயிலரங்கு, ரத்ததானம், உடலுறுப்பு தானம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் என பல சமூகப்பணிகளில் களம் இறங்கி இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பின் முக்கிய நபர் வீரமணி சேகர்.

வீரமணி சேகர் குறித்து தோழன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,  ''விபத்தில்லா தேசம் என்ற முழக்கத்தை முன்வைத்து 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் தி.நகரில் உள்ள பர்கிட் சாலை சிக்னலில் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான தொடக்கப்புள்ளி வைத்தோம். அப்பொழுதுதான் தோழர் வீரமணி சேகர் எங்களை முகநூல் மூலம் தொடர்பு கொண்டார்.

மற்றவர்களின் பேச்சுகளை உதட்டசைவின் மூலம் மிகத் துல்லியமாகத் தெரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவர் வீரமணி சேகர். அவர் மைம் கலைஞரும் கூட. ஒருநாள் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த இவரின் மீது நன்கு  ஒரு நபர் இருசக்கர வாகனத்தில் வந்து மோதி விபத்தை ஏற்படுத்தினார். அந்த பாதிப்பே வீரமணி சேகர் பிரச்சாரம் செய்வதற்கான தொடக்கப்புள்ளி.

மைம் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு செய்யலாமா என்று என்னிடம் கேட்டார்.  நான் தாராளமாகச் செய்யலாம் என்று ஊக்கம் கொடுத்தேன். தொடர்ந்து சென்னையிலுள்ள ஒவ்வெரு சிக்னல்களிலும் மைம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

மாதம் இரண்டுமுறை சிக்னல்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடர்ந்த வீரமணி சேகர்,  அம்பத்தூர் புதுமார்க்கெட்டில் ஞாயிறு தோறும் மைம் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து வருகிறார். வாழ்நாள் முழுவதும் சாலை விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய அளவில் எந்த அமைப்புகளும் செய்திடாத சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சென்னையிலுள்ள அனைத்து சிக்னல்களிலும் 60 நொடிகளில் பிரச்சாரம் செய்து சாதனை படைத்துள்ளது தோழன் அமைப்பு.

2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் முறையாக 100 சிக்னல்களில் 100 இளைஞர்களை நிறுத்தி சாலை பாதுகாப்புப் பிரச்சாரத்தைத் தொடர்ந்தோம். 2015- லும் தொடர்ந்து 2016- ம் ஆண்டில் செய்த விழிப்புணர்வு பிரச்சாரமானது இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டில் இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சாரம் எனப் பதிவாகியுள்ளது. இதுபோன்ற பல சாதனைகளுக்கு தோழர் வீரமணி சேகரின் பங்கும் அளப்பரியது'' என்கிறார் ராதாகிருஷ்ணன்.

வீரமணி சேகரின் சமூகப் பணி தொடர நாமும் வாழ்த்துவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x