இன்று அன்று | 1914 செப்டம்பர் 22: சென்னை மீது எம்டன் தாக்குதல்

இன்று அன்று | 1914 செப்டம்பர் 22: சென்னை மீது எம்டன் தாக்குதல்
Updated on
1 min read

‘எம்டன் வந்துட்டான்’ என்று யாரேனும் சொன்னால், சற்றுக் கவனமாக இருப்பது நல்லது. ஏனெனில், எதிர்பாராத தருணத்தில் அந்த எம்டன் ஆசாமி ஆபத்தை விளைவித்துவிடக் கூடும். தமிழர்களின் உரையாடலில் தவிர்க்க முடியாத இடம்பிடித்துவிட்ட அந்த எம்டன், ஜெர்மானியப் போர்க் கப்பல். முதல் உலகப் போர் தொடங்கி, மூன்றே மாதங்கள்தான் ஆகியிருந்தது. அப்போது எம்டன் மிகவும் பிரசித்தி பெற்ற பெயராக இருந்தது. பல பிரிட்டன் கப்பல்களைத் தந்திரமான வழிமுறைகளில் தகர்த்தெறிந்து, அட்டகாசம் செய்து வந்த அந்தக் கப்பல், சென்னையில் குண்டு வீசும் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் மாதம் இதே நாள் இரவு, இந்தியக் கடல் பகுதியில் சென்னை அருகே வந்துவிட்டது. கரையிலிருந்து 2,250 மீட்டர் தொலைவில் நிலைகொண்ட பின்னர், இரவு 9.30 மணிக்கு எம்டன் கப்பலின் கேப்டன் கார்ல் வான் முல்லர், தாக்குதலுக்கு ஆணையிட்டார். இரவு உணவு அருந்திக்கொண்டிருந்த பிரிட்டன் கப்பல் படை அதிகாரிகள், பலத்த வெடிச் சத்தம் கேட்டுத் திகைப்படைந்தனர். அவர்கள் சுதாரிப்பதற்குள் 100-க்கும் மேற்பட்ட குண்டுகளை வீசி, சென்னை துறைமுகத்தில் இருந்த, பிரிட்டிஷாருக்குச் சொந்த மான பர்மா எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய்க் கிடங்குகளை வெடிக்கச் செய்தது எம்டன்.

தூங்கிக்கொண்டிருந்த சென்னை மக்கள் பதறியடித்துக்கொண்டு நகரை விட்டு வெளியேறினர். இந்தத் தாக்குதலில் சென்னை உயர் நீதிமன்றத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியும் தகர்க்கப்பட்டது. வந்த வேலையை முடித்துக்கொண்டு உடனடியாக உத்தரவு வாங்கிக் கொண்டது எம்டன். ‘எம்டன் வந்துட்டான்’ என்று பல நாட்களுக்கு சென்னையில் பீதி நிலவியதாம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in