

நாடு முழுவதும் தேர்தல் ஜுரம் பற்றிக்கொண்ட நேரத்தில், மக்கள் தங்களின் கட்சிக் கொள்கைகளைப் பிடித்துக்கொண்டு விவாதம் செய்வதைப் பார்த்திருப்பீர்கள்.
கல்லூரி, அலுவலகம், பொது இடங்களில் அதிகம் பேசப்படும் டாபிக் அரசியலாகத்தான் இருக்கிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே வெவ்வேறு சித்தாந்தங்களைப் பின்பற்றுகின்றனர். அப்பா காங்கிரஸ் என்றால் மகள் பாஜக. அம்மா திமுக என்றால் மகன் அதிமுக. இந்தமாதிரியான சூழலில் நண்பர்களுக்கு இடையேயும் கொள்கை வேறுபாடுகள் இருக்குமல்லவா?
ஆனால் அரசியல் காரணமாக நட்பை இழந்துவிடக் கூடாது என்று கேரள இளைஞர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் கொடிகளை ஏந்தி கார் சவாரி செய்கின்றனர்.
இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ''வெவ்வேறு அரசியல் கொள்கைகளால் உங்களின் பிரியத்துக்குரிய நண்பர்களை இழந்துவிடாதீர்கள்!;; என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
'அரசியல் அப்புறம்; நட்புதான் முக்கியம்' என்பதை இந்தியர்கள் அனைவரும் உணர்ந்தால் சரி.