Published : 02 Apr 2019 12:47 PM
Last Updated : 02 Apr 2019 12:47 PM

நெட்டிசன் நோட்ஸ்: இயக்குநர் மகேந்திரன் - யதார்த்த சினிமாவின் பேராசான் மறைந்தார்

'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்த பிரபல இயக்குநர் மகேந்திரன், உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவு குறித்து அவரது ரசிகர்கள், எழுத்தாளர்கள் என பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Tamil Manavalan

மரணம் ஒரு மாபெரும் கலைஞனை இல்லாமல் செய்துவிட முடியாது தான். எனினும், இனி அவர் இல்லை என்னும் நிஜம் இழப்பின் வலியாய்...

தமிழ்த்திரை வரலாற்றில் தமக்குவமை இல்லாத, தனித்துவ திரைமொழியோடு காவியங்கள் படைத்த இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு எளிய இரசிகனின் இதய அஞ்சலி.

Kaalabairavan Arumugam

திரைக் கலையை கற்றுக்கொடுத்த எங்களின் உதிரிப்பூக்கள் மறைந்தது. ஆழ்ந்த அஞ்சலி.

Ananth Chakravarthy

இல‌க்கிய‌த்திற்கும் சினிமாவிற்கும் பால‌ம் அமைத்த‌வ‌ர், தென்ன‌க‌த்தின் ச‌த்ய‌ஜித்ரே, ர‌ஜினியின் ஸ்டைலுக்கும் மேன‌ரிஸத்திற்கும் கார‌ண‌மான‌வ‌ர்.

மாபெரும் முன்னோடி, வ‌ழிகாட்டி. இந்திய‌, த‌மிழ் திரைச் சமூக‌த்திற்கும், ர‌சிக‌ர்க‌ளுக்கும் ஈடுசெய்ய‌ முடியாத‌ இழ‌ப்பு. போய் வாருங்க‌ள் இய‌க்குந‌ரே!.

Ramesh Predan

உதிரிப்பூக்கள் என்னும் திரைப்படத்தை பதினான்கு வயதில் பார்த்தேன்; இன்று வயது ஐம்பத்தி நான்கிலும் அப்படத்துடன் ஒன்றி நிற்கிறேன். தமிழ்நாடு ஒரு கலைஞனை காயடித்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றதன் சமகால சாட்சி. மகேந்திரன் கேரளத்தில் பிறந்திருக்கவேண்டும். அவரும் ஓர் உதிரிப்பூ.

Srinivasan Solai

ஏய் இந்தப் பூங்காத்து தாலாட்ட

சின்னப் பூவோடு நீராட்ட

ராகம் இழுக்கும் காத்து

ஒரு தாளம் புடிக்கும் சேத்து

ரசிச்சுப் பாடுது பாத்து...

உதிரிப்பூக்கள் தந்த பூ உதிராமலே இருந்திருக்கலாம்.

Brindha Sarathy

மறையுமோ மகேந்திரம்

*

திரை மொழி என்பதன் அழகான அடையாளம்

உரையாடல் என்பதன்

உன்னத உதாரணம்

 

உடல் மொழி என்பதன்

எளிய இலக்கணம்

 

உலக சினிமா என்பது

அயல் நாட்டில் தேடுவதல்ல

நம் கண்ணெதிரில்

நிகழ்வனவற்றை கவனமாய் தேர்ந்தெடுத்தல்

 

எளிமையின் அழகை

உண்மையின் உயர்வை

அன்பின் கனிவை

அலங்காரமின்றி படைத்தல்

 

எத்தனை இப்படி வரிசைப்படுத்த...

 

ஒரு இலை துளிர்த்து வளர்வது போல் திரைக்கதை எழுதியவர்

 

கலை என்பது ஒப்பனையல்ல

ஒப்பனை கலைத்து உண்மையை அறிதல்

என்று அதிராத குரலில்

அமைதியாக உணர்த்தியவர்

 

அங்கு மகேந்திர ஜாலம் எதுவுமில்லை

மகேந்திரன் என்பது இயல்பு

மகேந்திரன் என்பது அன்பு

மகேந்திரன் என்பது உண்மை

 

ஒரு தலைமுறை இயக்குநர்களின் தந்தை

 

பொன்னை

உயர்வை

மகேந்திரனை இழந்தோம்.

 

புகழை இழந்திடோம்

பொத்தி வைத்துக் காப்போம் சார்

 

போய் வாருங்கள்.

*

Elakiyavendhan_Munusawmy_Durai

 

முள்ளும் மலரும், ஜானி, உதிரிப் பூக்கள்

இன்னும் நூறு வருடம்

வாழும் உங்கள் படைப்புகள்.

உமது புகழ் மறையாது.  #Mahendran

 

தமிழன்(Tamizhan)

 

#Mahendran தமிழ் அன்னையின் தவப் புதல்வர்களில் ஒருவர். உங்களுடைய படைப்புகள் அனைத்தும் உணர்வுப்பூர்வமானவை.. காலம் உள்ளவரை உங்கள் பெயரைச் சொல்லும்.

வாழ்க உன் புகழ்! உங்கள் ஆன்மா இறப்புக்கு முன்பே சாந்தியானது உங்களின் படைப்புகளால்!

тнαĻαραтну ѕυяєѕн

தமிழ் சினிமாவில்  முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருந்தார், அது மற்றொரு நிலைக்கு எடுத்தது.

சமாதானமான அமைதி மகேந்திரன் சர். தமிழ் சினிமாவுக்கு நீங்கள் ஒரு தவிர்க்கமுடியாத இழப்பு.

அருண்

கலைகள் என்றும் அழிவதில்லை அப்படித்தான் உங்கள் படைப்புகளும்.

ஆழ்ந்த இரங்கல் இயக்குநர் மகேந்திரன் சார்

Balaji Duraisamy

'அழகிய கண்ணே.. உறவுகள் நீயே' ️

யதார்த்த சினிமாவின் பேராசான் மகேந்திரன் மறைந்தார்!

putchutney Rajmohan

உதிரிப் பூ உதிர்ந்து விட்டது. ஆனால்  கட்டுமீசை ஜானியும், கண்ணாடி போட்ட விஜயனும், மெட்டி ஒலி சகோதரிகளும், பருவமே பாடலுக்கு ஜாக்கிங் ஓடிக்கொண்டே இருக்கும் சுஹாசினியும் திரையில் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள். RIP Director sir.

Gudu Basha

தமிழ் சினிமாவின் இலக்கியப் பூ உதிர்ந்து விட்டது.வரலாறு மறக்க முடியாத  இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த தமிழ் படைப்பாளி ஆசான் இயக்குநர் மகேந்திரன்.இதய அஞ்சலி சார்.#Mahendran #ripmahendran

adhithya ramanathan

மகேந்திரன் சார் நீங்கள் இறக்கலாம் ஆனால் உங்கள் படைப்புகள் சாகாவரம் பெற்று இருக்கிறது... உம் புகழை பாட     ❣️  

dennis

சென்று வா! செல்ல மகனே!

நீ ஒரு மலர்...

உதிரிப் பூக்களானாலும், வாடினாலும் உன் வாசம்,

இந்த மண்ணில் கசிந்து கொண்டுதான் இருக்கும்..,

என்றும் புகழ்,.' முள்ளிலும் மலர்ந்து கிடக்கும்!

சென்று வா! செல்ல மகனே

நெருஞ்சிமுள்

காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைத் தந்த.. ரஜினியால் நடிக்கவும் முடியும் என்று நிரூபித்துக் காட்டிய.. ஒரு படம் எடுத்து விட்டு அனத்தும் இயக்குநர்களுக்கு மத்தியில் எளிமையாய் வாழ்ந்து மறைந்த லெஜெண்ட் மகேந்திரனுக்கு அஞ்சலி...

CJ.SETTU

அளவான படைப்பு தந்து அளப்பரிய அன்பைப் பெற்ற...

தலைக்கனம் துளியும் இல்லாத ஒரு மகா கலைஞர் மறைந்து இருக்கிறார்...

அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...

abinesh lee

"நீங்கள் என்ன வேலை செய்தாலும், எதில் ஈடுபட்டு இருந்தாலும், உங்களைச் சுற்றி நடக்கிற எல்லாமே கதைகள்தான். சுற்றி இருக்கிற ஒவ்வொருவரும் பாத்திரங்கள்தான். அதைக் கவனிப்பதும் தேர்ந்தெடுப்பதும் மட்டும்தான் உங்கள் காரியம்.

Siva 1111

வலிகளுக்கு மத்தியில் உள்ள சுகம்தான் வாழ்க்கை.

ram

அந்த முள்ளும் மலரும், ஜானி படங்களை ஒரு முறை மட்டுமே பார்த்தவர் உளரோ தெரியவில்லை. ஆனால் எப்பொழுது வாய்ப்பு கிடைத்தாலும் பார்ப்பேன். அதே சுவாரசியம் குறையாமல். இதுவரை எத்தனை முறை பார்த்திருப்பேன் தெரியவில்லை.

அய்யா, மகேந்திரன் நீங்கள் அமரராக வாழ்வது எங்கே என எனக்குத் தெரியும்.

Soundara Raja Actor

நாவல்களை அழகிய காட்சி மொழியாக மாற்றி படைப்பிலக்கியத்திற்கு பக்கத்தில் திரையில் கொண்டு வந்தவர், உறவுகளின் எதார்த்தமான உணர்வுகளை திரைக்கதை,வசனம் மூலம் மக்கள் கொண்டாடும் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்தவர் இயக்குனர் மகேந்திரன் சார். இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 

partha

கண்ணுலேர்ந்து கண்ணீர் வராம எந்த ஒரு மகேந்திரன் சார் படத்தையும் பார்த்துர முடியாது.

Dhana sekaran Varadhan

தமிழ் கலைஉலகிற்கு புதிய ஸ்டைல் தந்தவர் இயக்குநர் மகேந்திரன் ஐயா...

ஆழ்ந்த வருத்தத்துடன்..

Vivek Gananathan

"இரண்டும் கையும் இரண்டும் காலும் இல்லன்னா கூட காளிங்கிறவன் பொழைச்சுக்குவான் சார்... கெட்டப்பையன் சார் இந்தக் காளி"

இயக்கத்துறையின் அந்தக் காளி சி.மகேந்திரன் !

சாமானியனுக்குள் இருக்கும் பிடிப்புணர்வு,அழுத்தம்,திமிர், ஆணவம், ஆதங்கம்,குரோதமே அசல் ஹீரோயிஸம் எனக்காட்டிய செந்தாழம்பூ !

Azhagappan Rasi

மக்களை நேசிக்கும் உண்மையான கலைஞர்கள் இப்படித்தான் தன் வாழ்நாளில் எளிமையாக இருந்து வாழ்ந்து சாதித்து மற்றவருக்கு பாடமாய் வாழ்ந்து செல்வார்கள் .

அவ்வகையில் இயக்குநர் மகேந்திரன் கலைஞர்களின் சிறந்த கலைஞனாய் இன்று உயர்ந்து மறைந்துள்ளார்.

அவர் மறையலாம். அவரின் திரைமொழியும் எளிய அன்பும் அவரை அறிந்தவர்கள் அறியாதவர்களுக்குக் கூட வழிகாட்டுதலாக இது என்றும் இருக்கும்.

மரணம் இயற்கையானது தவிர்க்க முடியாதது என்றாலும் இயக்குநர் மகேந்திரன் இன்னும் பல காலம் வாழ்ந்து கலையை வாழ வைத்திருக்கலாம் .

இயற்கை முரண்பட்டு விட்டது .

இன்றும் மறக்க இயலாது

வானம் எனக்கொரு போதி மரம்

நாளும் எனக்கது சேதி தரும்

இயக்குநர் மகேந்திரனுக்கு

எங்களின் இதய அஞ்சலி...

Vasantabalan

கதாசிரியராக இயக்குநராக அவரின் படங்கள் காலம் மூர்க்கமாக வீசுகிற அலைகளுக்கு முன் துருவேறாமல் அப்படியே நிற்கின்றன.

ஒரு கலைஞனின் இடையறாத ஆசையும் கனவு அது தானே.

தன் கனவு மெய்ப்பட்டதை கண்ட கலைஞன்.

நிறைவான பயணம்.

சென்று வாருங்கள் மகேந்திரன் சார்

G. Sundarrajan

தமிழ் சினிமாவின் வண்ணங்களை மாற்றியமைத்த வகையில் இயக்குநர் மகேந்திரன் ஒரு இயக்கம். அவர் பாய்ச்சிய ஒளி வரும் காலங்களில் பல இளைஞர்களுக்கு ஒளிகாட்டும்.

Mr.பழுவேட்டரையர்

சிரித்த முகம், ஏழைத் தாயை அரவணைக்கும் கைகள்,அன்பு கொஞ்சும் விழிகள், தத்துவப் பாடல்கள் என்று சமூகத்தைச் சீர்த்திருத்த புறப்பட்ட கதாநாயகர்கள் மத்தியில், வழக்கத்துக்கு மாறான கதாபாத்திரங்களை, நம் மனதில் மெல்ல மெல்ல மலரச் செய்தவர் மகேந்திரன்.

பூ.கொ. சரவணன்

தமிழ்த் திரையுலகை இயக்குநர் மகேந்திரன் வருகைக்கு முன், பின் எனப்பிரிக்கலாம். அதீத கொண்டாட்டம், நம்பமுடியாத பாசாங்குகள், நாயக வழிபாடு, தடுக்கி விழுந்தால் ஒரு பாடல் எனப் பயணித்த திரையுலகில் மாற்றுப்பயணத்தை மகேந்திரன் முன்னெடுத்தார். ஜோடனைகளை திரையிலும், வாழ்விலும் வெறுத்த அவர் இலக்கிய ரசனைமிக்க திரை அற்புதம். எளிய மனிதர்களின் உலகை முடிந்த வரை அப்படியே வார்த்த அவரின் மரணம் பேரிழப்பு. மகேந்திரனின் கைவண்ணம்பட்ட இலக்கியப்பிரதிகள் அப்படி சுவைத்தன. மீண்டும், மீண்டும் மனம் விம்மி அடங்குகிறது. பிரியா விடை ஐயா!

Antony Vasanth John Peter

சில படங்கள் பல பாடங்கள்-ரஜினிகாந்த் ஸ்டைலுக்காக மட்டும் ரசிக்கப்பட்டிருந்தால் இத்தனை ஆண்டுகாலம் நம்பர் ஒன் நடிகராக நிலைத்திருப்பாரா என்பது சந்தேகமே. ஆனால் அவருடைய நடிப்புத் திறனையும் அனைவரும் ரசித்திருந்ததால்தான் அவரை எல்லாரும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.

விசயம் என்னன்னாஅவரைஅறிமுகப்படுத்திய இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் ஒரு மேடையில் ரஜினியிடம் நீ,நடித்ததில் உனக்குப் பிடித்த படம் எது என்று கேட்டவுடன் சிறிதும் தாமதமின்றி 'முள்ளும் மலரும்' என்று சொன்னாரென்றால் அங்கு மகேந்திரன் என்ற மாபெரும் கலைஞன் சாதித்திருக்கிறார் என்றுதானேஅர்த்தம்..சென்று வாருங்கள் ஐயா..

ஈபன் வேதா மதன்

சினிமாவை வெறுத்து ஓடிய எனக்கு, என்றுமே எனக்கு அது காதல் திருமணமாக இருந்ததில்லை. சினிமா எனக்கு கட்டாயத் திருமணம்தான். அந்த உன்னதமான ஊடகத்தில் நான் நுனிப்புல் மேய்ந்தவன்.

ஒரே சமயத்தில் பலரைப் பார்த்துப் பேசிக்கொண்டே கைவிரல்களைக் கண்களாகப் பாவித்து அரிவாள்மனையில் காய்கறிகளைத் துண்டு போட்டு ஏதோ ஒரு அனுமானத்தில் சமையல் செய்யும் தாய்மார்களைப் போலத்தான் என்னுடையதும்.

மௌனத்தை விட சிறந்த மொழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அர்த்தங்களுக்கு ஏற்ப வார்த்தைகள் கிடைப்பதில்லை. அந்த சமயம் எண்ணங்களை மௌனங்கள் மட்டுமே வெளிப்படுத்தும். உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் போன்ற எனது படங்களில் மௌனம் அதிகமாக இருப்பதாகச் சொல்வார்கள். உண்மைதான், எனது படங்களுக்கு பெரும்பாலும் வசனங்கள் எழுதியது இளையராஜாதான்.

மௌனங்களை வசனங்களாக வடித்தார் மகேந்திரன். இசையால் அதன் ஒவ்வோரு இடத்தையும் நிரப்பினார் ராஜா.

சினிமாவை எனக்கு ரசிக்க கற்றுக்கொடுத்த என் மானசீக துரோணருக்கு மௌன அஞ்சலிகள்!

Saravana Kumar

பஞ்ச் டயலாக் என்ற விஷயமே இன்று காமெடியாகிவிட்டது...

ஒரு சாதாரணமான வசனத்தை என்றைக்குமான ஒரு பஞ்ச் டயலாக்காக மாற்றிய அற்புதம் இயக்குநர் மகேந்திரனால் நடத்தப்பட்டது..

முள்ளும் மலரும் படத்தில் , தன்னை வேலையை விட்டு நீக்கிய மேலதிகாரியான சரத்பாபுவை பார்த்து ,

" ரெண்டு கையும் ரெண்டு காலும் போனாக்கூட இந்தக் காளி பொழச்சுப்பான் சார்.....கெட்டப்பய சார் இந்தக் காளி " என்பார் ரஜினி..

Elango Kallanai

கலையமைதியை இலக்கணமாகச் சொன்ன மகேந்திரன் நான் படித்த கல்லூரியில் எங்களின் முன்னோடி.

கல்லூரியின் தமிழ்த்துறை விழாவில் 93 ஆம் ஆண்டு பேச வந்தார். அதற்கு முன்பு ஒரு வாரம் முழுவதும் அவரின் படங்களை திரையிட்டது அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறை. இளையராஜா இசையை திரைக்கதையாகவும் மகேந்திரன் திரைக்கதையை இசையாகவும் நிகழ்த்திய அற்புதமான அனுபவங்கள் அப்போது தான் கிடைத்தது.

தத்பித்தென்று அவரிடம் ஏதோ கேள்வி கேட்டுள்ளேன். சகலாகலா வல்லவன் முரட்டுக் காளை வரவில்லை என்றால் மகேந்திரன் வழிப் படங்களை நிறைய பார்த்திருக்கலாம்.

ஆழ்ந்த இரங்கல்.

Malathi Maithri

வைர விழா கொண்டாடிய தமிழ் சினிமா வரலாற்றில் யதார்த்தமான பெண் இருப்பை வாழ்வை திரைக்குள் நேர்மையாகக் கொண்டு வந்தவர் மகேந்திரன் மட்டுமே. மகேந்திரனின் இடத்திற்கு மகேந்திரனை மீற இனி ஒருவர் பிறந்து வரணும். சென்று வாருங்கள் தோழர்.....

Vetri Dhaasan

"பிரபல இயக்குநர் மகேந்திரன் காலமானார்" - ஒரு சினிமா ரசிகனின் வாழ்வை மிக எளிதில் வெறுமையாக்க முடிகிற வார்த்தைகள்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x