

சாரதா மனதுக்குள் வருந்தினாள். இந்த முறையும் மகனுக்கு பெண் பார்க்க போகும்போது அவன் நண்பன் பிரவீனும் கூட வருகிறான் என்பதே வருத்தத்துக்கு காரணம். சாரதாவின் மகன் சுந்தர் கருப்பு நிறம். சராசரிக்கும் கீழே அழகு, ஆனால் அவன் நண்பன் பிரவீன் எலுமிச்சை நிறம், அசப்பில் நடிகர் அஜீத்தைப் போல் இருப்பான். பெண் பார்க்கப் போகும் போதெல்லாம் அவனையும் சுந்தர் தவறாமல் அழைத்துபோவான். பார்க்கும் பெண் எல்லாம் அவனையும் தன் மகனையும் ஒப்பிட்டுப் பார்த்து வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள், இது சுந்தருக்கு தெரியவில்லையே என்பதுதான் சாரதாவின் வருத்தம். மகனிடம் தன் குமுறலை வெளியிட்டாள்.
“சுந்தர் இந்த முறை பெண் பார்க்கப் போகும் போது நம்மகூட பிரவீன் வரவேண்டாம்பா?”
“அம்மா நீ ஏன் பிரவீன் வரவேண்டாம்னு சொல்லுறேங்கிறது எனக்குத் தெரியாம இல்லை, பிரவீன் கூட என்னை ஒப்பிட்டு பார்த்திட்டு பொண்ணுங்க என்னை புடிக்கலைன்னு சொல்லுறாங்க அதானே?. இன்னைக்கு என்னை புடிக்குதுன்னு சொல்லி கல்யாணம் பண்ணிட்டு கொஞ்சம் நாள் கழிச்சு என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டு போய்ட்டா என்னம்மா பண்றது?”
மகன் கேட்ட கேள்வியில் ஆடிப்போனாள் சாரதா. சுந்தர் தொடர்ந்தான்.
“அம்மா நான் வேணும்னேதான் ஒவ்வொரு தடவையும் பெண் பார்க்கப் போகும்போது என் நண்பன் பிரவீனை அழைச்சிட்டுப் போறேன், என்னோட அழகை மத்தவங்களோட ஒப்பிட்டு பார்க்காத வெளி அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காத ஒரு பொண்ணைத்தான் நான் தேடுறேன். அதுவரைக்கும் என் கூட பெண் பார்க்க என் நண்பன் வரத்தான் செய்வான்” என்றதும் அவன் அம்மா வாயடைத்துப் போனார்.