Last Updated : 15 Sep, 2014 10:53 AM

 

Published : 15 Sep 2014 10:53 AM
Last Updated : 15 Sep 2014 10:53 AM

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் திருமணம், மகப்பேறு உதவித்தொகை

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராவதற்கான தகுதி, அடையாள அட்டை பெறும் முறை, வழங்கப்படும் உதவித் தொகை குறித்து பார்த்தோம். உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையைப் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை, யாரிடம் விண்ணப்பம் செய்வது என்பது குறித்து சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

# உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகையைப் பெற விண்ணப்பிப்பது எப்படி?

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராக உள்ளவர்களின் மகன், மகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி முதல் கல்லூரி படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. 10-ம் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த உதவித்தொகையைப் பெற உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை நகல், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் பரிந்துரை, கிராம நிர்வாக அலுவலர் சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

# கல்லூரியில் படிப்பவர்கள் இந்த உதவித்தொகையைப் பெற எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு படிப்பவர்கள் என்றால் உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை நகல், கிராம நிர்வாக அலுவலர் சான்று, கல்வி நிறுவன முதல்வர் பரிந்துரைக் கடிதம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். சட்டம் படிப்பவர்கள் மேற்குறிப்பிட்ட 3 ஆவணங்களுடன் சட்டக் கல்வி இயக்குநர் அல்லது அவரால் அதிகாரம் வழங்கப்பட்ட அலுவலருக்கும், பொறியியல் படிப்பவர்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்குநருக்கும், மருத்துவ மாணவர்கள் மருத்துவக் கல்வி இயக்குநருக்கும், கால்நடை மருத்துவம் படிப்பவர்கள் சென்னை கால்நடை மருத்துவப் பல்கலை.யின் பதிவாளருக்கும், விவசாயக் கல்வி பயில்பவர்கள் கோவையில் உள்ள தமிழ்நாடு விவசாய பல்கலை.யின் பதிவாளருக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

# திருமண உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?

உழவர் பாதுகாப்பு திட்ட உறுப்பினர் மற்றும் அவரது மகன், மகளுக்கு திருமண உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதைப் பெற உறுப்பினர் அடையாள அட்டை நகல், திருமணப் பத்திரிகை, கிராம நிர்வாக அலுவலரின் சான்று ஆகியவற்றை இணைத்து அந்தந்த வட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

# மகப்பேறு உதவித்தொகை எவ்வளவு? இதற்கு யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?

உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உறுப்பினர் மற்றும் உறுப்பினரின் மகன், மகளுக்கு ரூ.6 ஆயிரம் மகப்பேறு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதைப் பெற உழவர் பாதுகாப்பு திட்ட உறுப்பினர் அடையாள அட்டை நகல், கிராம நிர்வாக மற்றும் கிராம சுகாதார செவிலியர் சான்று, மருத்துவர் சான்று ஆகியவற்றை இணைத்து வட்டார அல்லது ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x