Published : 16 Sep 2014 11:53 AM
Last Updated : 16 Sep 2014 11:53 AM

இயேசு சொன்ன போதனைக் கதைகள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், இறை மைந்தன் இயேசு பாலஸ்தீன நாட்டில் வாழ்ந்தபோது, மக்கள் நலமுடன் வாழ வழிவகுக்கும் நல்ல போதனைகளைக் கூறினார். இவற்றை ஏழைப் பாமர மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம், இனிய கதைகளின் மூலம் போதித்தார். அவற்றில் ஒன்றை இன்று பார்ப்போம்.

மனம் திருந்திய மைந்தன்

ஒரு செல்வந்தர் தன் இரு குமாரர்களுடன் வாழ்ந்து வந்தார். அவரது மூத்த மகன் தன் தந்தையின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, வயல் வேலைகளையெல்லாம் செய்து வந்தான். இளையவனோ, தந்தையின் சொத்துக்களில் தனது பங்கைப் பிரித்துத் தரும்படி வற்புறுத்திப் பெற்றான். பின்னர், தந்தையை விட்டுப் பிரிந்து, தூர தேசம் சென்று துன்மார்க்கமாய் வாழ்ந்து, தன் ஆஸ்தி அனைத்தையும் அழித்துப்போட்டான்.

அப்போது அந்த தேசத்தில் கொடிய பஞ்சம் உண்டானது. உண்ண உணவுமின்றித் தவித்த அவன், வேலை தேடி அலைந்தான்.

அந்த தேச.குடிமகனான ஒருவன், தன் பன்றிகளை மேய்க்கும் வேலையை அவனுக்குக் கொடுத்தான். பசியின் கொடுமையால் அந்த பன்றிகள் தின்ற தவிட்டையாவது சாப்பிட்டுத் தன் வயிற்றை நிரப்ப அவன் ஆசைப்பட்டான். ஆனால் அது கூட அவனுக்குக் கிடைக்கவில்லை.

தனது பரிதாப நிலையை உணர்ந்த அவன், “ என் தகப்பனுடைய கூலிக்காரர்கள் அநேகர் உண்டு. அனைவருக்கும் நிறைவான உணவு உண்டு. நானோ பசியினால் சாகிறேனே” என வேதனையோடு புலம்பினான்.

மனம் வருந்திய அவன், ஒரு நல்ல முடிவுக்கு வந்தான். “நான் எழுந்து, என் தகப்பனிடம் சென்று, ‘தந்தையே, கடவுளுக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன். இனிமேல், உம்முடைய குமாரன் என்று சொல்லப்பட நான் தகுதி உள்ளவனல்ல. எனவே, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்’ என்பேன்” என்று கூறினான்.

மனம் திருந்திய அம்மைந்தன், எழுந்து புறப்பட்டுத் தன் தகப்பனிடத்தில் வந்தான்.

அவன் தூர வரும்போதே, அவனுடைய தந்தை அவனைக் கண்டு, மனதுருகி, ஓடிவந்து, அவன் கழுத்தைக் கட்டி, அணைத்துக்கொண்டு, அவனை முத்தம் செய்தார்..

இளைய மகன் தகப்பனை நோக்கி, “தந்தையே, கடவுளுக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன். இனிமேல், உம்முடைய குமாரன் என்று சொல்லப்பட நான் தகுதியுள்ளவனல்ல.” என்றான்.

ஆனால், அவன் மீதியைச் சொல்லி முடிப்பதற்குள், அவனுடைய தந்தை தன் வேலையாட்களை நோக்கி, “நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தை கொண்டுவந்து இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்கு காலணிகளையும் போடுங்கள்.

நல்ல விருந்து தயாரியுங்கள். நாம் விருந்துண்டு, மகிழ்வுடன் இருப்போம். ஏனெனில், என் குமாரனாகிய இவன் கெட்டழிந்து போனான். இப்போதோ, புது வாழ்வு பெற்றான். காணாமற்போனான். மீண்டும் வந்துவிட்டான்.” என்றார்.

அப்படியே அவர்கள் அனைவரும் மகிழ்வுடன் கொண்டாடத் தொடங்கினார்கள்.

இந்நிலையில், வயலில் வேலை செய்து முடித்த மூத்த மகன், வீடு திரும்பினான். கீத வாத்தியங்கள் முழங்கும் சத்தம் கேட்ட அவன், “இது என்ன?” என வேலையாள் ஒருவனை விசாரித்தான். நடந்தவற்றை அறிந்தபோது, அவன் கோபமடைந்து, வீட்டிற்குள் போக மனதில்லாதிருந்தான்.

இதையறிந்த அவன் தந்தை, வெளியில் அவனிடம் வந்து, அவனை வருந்தி அழைத்தார். அப்போது, மூத்த மகன் தந்தையை நோக்கி. “இதோ! இத்தனை ஆண்டுகளாய் நான் உமக்கு ஊழியம் செய்து வருகிறேன். உம் வார்த்தையை மீறாது நடந்து வரும் எனக்கு, என் சிநேகிதரோடு நான் மகிழ்வுடனிருக்க, நீர் ஒருமுறைகூட, ஓரு ஆட்டுக்குட்டியைக்கூட, எனக்குக் கொடுக்கவில்லை. ஆனால், வேசிகளிடத்தில் துன்மார்க்கமாய் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட, உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே, பெரிய விருந்தை ஆயத்தம் செய்தீரே” என்றான்.

அப்போது, அவன் தந்தை அவனை நோக்கி,”மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய். என்னிடமுள்ள அனைத்தும் உன்னுடையது தானே! உன் சகோதரனான இவனோ, கெட்டழிந்துபோனான். இப்போதோ, புது வாழ்வு பெற்றான். காணாமற்போனான். மீண்டும் வந்துவிட்டான். எனவே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாய் இருக்கவேண்டுமே” என்றார்.

இயேசுவின் போதனை:

இக்கதையின் மூலம் இயேசு நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ன?

1. கதையின் தந்தையைப் போல, நம்மைப் படைத்த இறைவனும் நம் அனைவரையும் அளவில்லாமல் நேசிக்கிறார். அவருக்குச் சொந்தமான நாமோ, கெட்டுப்போன இளைய மைந்தனைப்போல, அவர் தரும் நல் வாழ்வின் வழிமுறைகளை விட்டு விலகி, தவறான வழியில் சென்று, நம்மையே கெடுத்துக்கொண்டோம். இதின் விளைவாக, இறைவன் அழகாய்ப் படைத்து, நமக்களித்த, இவ்வுலகத்தையும் கெடுத்து விட்டோம். நாமும், வருத்தம், வியாதி மற்றும் வேதனைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்நிலையிலிருந்து விடுபட்டு, நாம் மீண்டுமாக நல்வாழ்வு பெற, இறைவன் விரும்புகிறார், இதற்கு, நாம் இறைவனிடம் மீண்டும் ஒப்புரவாக வேண்டும், அவர் காட்டும் நல் வழியைப் பின்பற்ற வேண்டும், இவ்வாறு நன்மக்களாக மகிழ்ந்து வாழ, இக்கதையின் இளைய மைந்தனைப்போல, நம் வாழ்வை மாற்றும் நல்லதொரு தீர்மானத்தை, இன்று எடுப்போமா?

2. இறைவன் மனிதர் அனைவரையும் தமது சாயலிலே அழகாகப் படைத்திருக்கிறார். அனைவரையும் நேசிக்கிறார். தீய வழியில் செல்பவர்களையும் அவர் நேசிக்கிறார். அவர்களும் திருந்தி நல்வாழ்வு பெற விரும்புகிறார். எனவே, அவர் வழியில் செல்லும் நாமும், இப்படிப்பட்டவர்களை நேசிக்க வேண்டும். அவர்கள் நல் வாழ்வு பெற, உதவி செய்ய வேண்டும். நாம் இக்கதையின் மூத்த குமாரனைப்போல, நேர்வழியில் நடந்தாலும்கூட, அது போதாது. அன்பில்லாதவ்ர்களாக, சுய நல எண்ணத்துடன் வாழக்கூடாது. எனவே இறைவனின் அன்பை உள்ளத்தில் கொண்டவர்களாய், அனைவர் மீதும் பாசமுள்ளவர்களாய் வாழுவோமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x