Published : 06 Mar 2019 10:33 am

Updated : 06 Mar 2019 10:33 am

 

Published : 06 Mar 2019 10:33 AM
Last Updated : 06 Mar 2019 10:33 AM

100க்கு 40 பெண்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு; ஆண்களும் உஷார்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்

100-40

சம்பவம்-1

ரேஷ்மாவுக்கு 19 வயது. மேல்தட்டுக் குடும்பத்துப் பெண். பணத்துக்குக் குறைவே இல்லை. ஒருநாள்... ஆர்வத்துடன், சேவை மனப்பான்மையுடன் ரத்ததானம் செய்ய வந்தபோது பரிசோதனை செய்ததில் ஹீமோகுளோபின் குறைபாடு என்று நிராகரித்தார்கள். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்புதான் அவள் ரத்த தானம் செய்திருந்தாள். ஹீமோகுளோபின் அளவு குறைந்ததில் அவளுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.


உடல் ஸ்லிம்மாக இருக்கக் கடுமையான உணவுக் கட்டுப்பாடுதான் அவளது உடலில் இருந்த சத்துக்களை உறிஞ்சியிருக்கிறது என்பதை அவளிடம் பேசித் தெரிந்துகொண்ட மருத்துவர் அடுத்த முறையும் இதே அளவு இருந்தால் உனக்கே ரத்தம் ஏற்ற வேண்டிய நிலை வரும் என்று எச்சரித்தார்.

சம்பவம் -2

 சங்கருக்கு வயது 46. வலுவான உடலுடன் இருந்தவருக்கு நாளடைவில் காரணமே இல்லாமல் உடல் இளைக்கத் தொடங்கியது. நடக்கும் போது கால்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டன. எந்நேரமும் சோர்வுடன் இருந்தவருக்கு சுகர், பி.பி. இல்லை.

தலைமை மருத்துவரிடம் சென்ற போது, பார்த்ததுமே கடுமையான ரத்த சோகையாக இருக்கலாம் என்றார். பரிசோதனையில் ஹீமோ குளோபினின் அளவு 3.2 பாயிண்ட் மட்டுமே இருந்தது. 5 மி.கி. அளவு இருந்தாலே உயிர் பிழைப்பது அசாத்தியம் எனும் போது, 4 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டு மருத்துவர்களது தீவிரக் கண்காணிப்பில் இருந்தும் ஹீமோகுளோபின் குறைபாட்டில் இருந்தும் மீண்டுவிட்டார் சங்கர்.

”சமீப காலமாக ரத்த தானம் செய்ய கல்லூரி மாணவ மாணவிகளிடம் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, பெண்கள் மிகத்துடிப்புடன் இருக்கிறார்கள். ஆனால் 60 பெண்கள் ரத்ததானம் கொடுக்க வந்தால் அதில் 10 பெண்கள் மட்டுமே தகுதியானவர்களாக இருக்கிறார்கள்.

பொதுவாக குழந்தைகள் பெண்களுக்கு மட்டும்தான் ஹீமோகுளோபின் குறைபாடு இருந்தது. தற்போது ஆண்களில் சரிபாதியினரும் ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள்” என்று வருத்தத்தோடு கூறினார் அரசு மருத்துவர் ஒருவர்.. 

மனிதன் ஆரோக்கியமாக நடமாட அவசியமானது ஹீமோ குளோபின். ஹீமோகுளோபின் நமது உடலில் சிவப்பு ரத்த அணுக்களில் உள்ள இரும்புச் சத்து நிறைந்த புரதம். நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்லும் பொறுப்பு இந்தப் புரதத்துக்கு உரியது. ஆரோக்கியமாக சுறு சுறுப்பாக இருப்பதற்கு ஹீமோகுளோபின் சரியான அளவில் இருப்பது ரொம்பவே முக்கியம்.

வயது வந்த பெண்களுக்கு -12-16 மி.கி. அளவிலும், ஆண்களுக்கு 14-18 மி.கி. அளவிலும் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். இந்த அளவில் மிகச்சிறிய மாறுதல்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடாதுதான். ஆனால் 8 கிராமுக்கும் கீழே குறையத் தொடங்கும்போது உடலில் பல்வேறு பாதிப்புகளையும், நாளடைவில் கடுமையான ரத்த சோகையையும் கூட ஏற்படுத்துகிற அபாயம் உண்டு.

உடல் சோர்வு, அசதி, அதிக களைப்பு, தலைவலி, களையிழந்த வெளிறிய சருமம், மயக்கம், உடலில் வலுவே இல்லாதது போன்ற உணர்வு, பசியின்மை இப்படியான அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தொடர்ந்து இருந்தால் கூட ஹீமோகுளோபின் அளவை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

உதாரணத்திற்கு, சாலையில் செல்லும் 100 நபர்களை பரிசோதனை செய்தால் 70 நபர்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு இருக்க வாய்ப்பிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ரத்தம் சம்பந்தமான பிரச்சினைகள் அதிக ரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

ஹீமோகுளோபின் அளவு குறைவதற்கு இரும்புச்சத்து குறைபாடு பொதுவான காரணம் என்று நேஷனல் அனீமியா ஏஷன் கவுன்சில் கூறியுள்ளது.

பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஹீமோகுளோபின் அளவில் சிறிதான அளவில் மாற்றம் இருக்கும். தற்போது மாதவிடாய்க் காலமும் (நாட்கள்) அதிகரித்து ரத்தப் போக்கும் அதிகரித்துவருகிறது. மேலும் கர்ப்பகாலம், அடிக்கடி கருச்சிதைவு, மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான ரத்த இழப்பு சிலருக்கு ஹீமோகுளோபின் குறைபாட்டுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன.

ஆண்கள் குடும்ப பொருளாதாரம், பணியிடத்தில் மன உளைச்சல், எப்போதும் ஒருவித பதட்டம் என்று உணவில் ஈடுபாடின்றி வளைய வருவது இப்போது அதிகரித்திருக்கிறது. இதுஒருகட்டத்தில், ஆரோக்கியக் குறைபாட்டில் கொண்டுபோய் நிறுத்தும்போதுதான், லைஃப் ஸ்டைலில் உள்ள தவறுகளைப் புரிந்து உணருகிறார்கள்.  அதனால் இரும்புச்சத்து, பி 12 வைட்டமின் சி.. இன்னபிற குறை பாடுகளும் கூட ஹீமோகுளோபின் அளவை படிப்படியாக குறைத்துவிடுகின்றன. இதுதவிர அறுவை சிகிச்சை, மூலநோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் இழக்கும் ரத்தம், மலம் கழிக்கும் போது மறைமுகமாக வெளியேறும் ரத்தம், நீரிழிவு, அல்சர், சிறுநீரக பிரச்சினை, வயிற்று புற்றுநோய், எலும்பு மஜ்ஜையில் பிரச்சினை முதலானவை கூட ஹீமோகுளோபின் குறைவதற்குக் காரணமாக இருக்கலாம்.

எப்படிச் சுற்றிவந்தாலும், மாறிவரும் உணவுப் பழக்கமே ஹீமோகுளோபின் குறைய முக்கிய காரணம் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். உணவால் ரத்தம் உற்பத்தியாவதில்லை என்றாலும் உணவில் இருக்கும் இரும்புச்சத்துகள் ரத்தத்தை உற்பத்தி செய்கின்றன.

30 வருடங்களுக்கு முன்பு உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களையும் சரிவிகித முறையில் சரியான காலங்களில் எடுத்துக்கொண்டதால் அனைவருமே ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அன்றாடம் ஒரு பழம் என்பதெல்லாம் இப்போது மறந்தே போன காலமாகிவிட்டது. இன்று மூன்று வேளை உணவு என்பது சுருங்கி பெரும்பாலான நேரம் நொறுக்குத் தீனிகள், சாட் வகைகளுடன் உணவை முடித்துவிடுகிறார்கள்.

ஹீமோகுளோபின் அதிகரிக்க என்ன செய்யலாம்?

வாரத்துக்கு மூன்று நாள் முருங்கைக்கீரை (சூப்) இதர கீரை வகைகள், பீட்ரூட், கருப்புப் பேரீச்சம்பழம், கருப்பு உலர் திராட்சை ( முன் தினம் இரவு ஒரு தம்ளர் நீரில் 10 திராட்சைகளை ஊறவைத்து மறுநாள் மூன்று வேளையும் சிறிது தண்ணீருடன் மூன்று திராட்சைகளை மென்று சாப்பிடவேண்டும்) உலர்ந்த அத்திப் பழம் தினம் -1, பாதாம், மாதுளம் பழம், கொய்யாப்பழம், எலுமிச்சைச்சாறு, நெல்லிக்காய்சாறு (ஒரு நெல்லிக்காய் நான்கு ஆப்பிளுக்குச் சமம்) முளைகட்டிய தானியங்கள், பால், அசைவம் சாப்பிடுபவர்கள் என்றால் இறைச்சி வகைகள், ஆட்டின் ஈரல், முட்டை முதலானவற்றைப் பட்டியலிட்டு தினம் ஒன்றாக சாப்பிட வேண்டும். ஒரு மாதத்துக்குப் பிறகு பரிசோதனை செய்யும் போது ஹீமோகுளோபினின் அளவு 1 மி.கி உயர்ந்திருக்கும்.

ஹீமோ குளோ பின் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து ஒருவருட காலத்துக்கு மருத்துவர்களால் கண்காணிக்கப்படுவார்கள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஹீமோகுளோபினின் அளவும் பரிசோதிக்கப்படுகிறது. 

ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள்தான் இவற்றையெல்லாம் சாப்பிட வேண்டும் என்பதில்லை. அனைவருமே உரிய முறையில் தினம் ஒன்றாகச் சாப்பிட்டு வந்தால், ஹீமோகுளோபின் அளவில் குறைவே இருக்காது. உடலில் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் தடையின்றி வேகமாக செல்லும்போது உடலும் உற்சாகத்துடன் ஒத்துழைக்கும். சோர்வு, மன உளைச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு முழு முதற்காரணமே... இந்தச் சோர்வும் உளைச்சலும்தான்!

ஹீமோகுளோபின் இன்றி அமையாது உடலும் உயிரும்!

30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் முதல்கட்டமாக, ஹீமோகுளோபின் அளவை பரிசோதித்து அறிந்துகொள்வது, அவசியம்.



ஹீமோகுளோபின் இரும்புச்சத்து குறைபாடு இரத்த அளவு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x