Published : 28 Mar 2019 10:22 AM
Last Updated : 28 Mar 2019 10:22 AM

‘ஸ்பிரிட் ஆஃப் த கேம்’ 2வது முறையாகவும் தூக்கி எறியப்பட்டது: 4 ரன் ஓவர் த்ரோவுக்காக நடுவர்கள் மீதே தாக்கம் செலுத்திய அஸ்வின்

இந்த ஐபிஎல் கிரிக்கெட்டை தன் சுயவிளம்பரத்துக்காக அஸ்வின் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகின்ற 2வது செயலை நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராகவும் அஸ்வின் அரங்கேற்றினார்.

ஐபிஎல் கிரிக்கெட்டை இம்முறை தன் ஸ்டண்ட்களை அரங்கேற்றும் ஒரு நாடக அரங்கமாக அஸ்வின் மாற்றி வருகிறார்.

அன்று ஜோஸ் பட்லரை அவர் அவுட் செய்த விதம் அது குறித்த பொதுஜன கருத்துக்களை பிளவுபட வைத்தது. விதிப்படி சரிதான், ஸ்பிரிட் படி தவறு என்ற முடிவுறா வாதம் இன்னமும் போய்க் கொண்டிருக்கிறது.

விதிப்படி சரியே என்று பெரும்பாலான ரசிக கும்பலின் மவுட்டிக கருத்துகளை ஆதரித்த எம்.சி.சி. திடீரென பல்ட்டி அடித்து ஆக்‌ஷனை பூர்த்தி செய்வது போல் வந்து விட்டு பிறகு நிறுத்தி பட்லர் கிரீசை விட்டு வெளியேறும் வரை நைச்சியமாகக் காத்திருந்து  வெளியேறியவுடன் ரன் அவுட் செய்தது ஸ்பிரிட் ஆஃப் த கேம் படி தவறு என்று ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தற்போது எம்.சி.சி கூறியுள்ளது. அவுட் விதிப்படிதான், ஆனால் செய்கை நெறிப்படி அல்ல என்கிறது எம்.சி.சி. ஆனால் எம்.சி.சி கிரிக்கெட் அண்ணாவி என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. டான் பிராட்மேனை வீழ்த்த பாடிலைன் பவுலிங்கை உருவாக்கிய இங்கிலாந்து பிறகு மே.இ.தீவுகள் பவுலர்களால் அதே வதையை அனுபவிக்க பவுன்சர் விதிமுறைகளைக் கொண்டு வந்து பவுலர்களை நசுக்கியதுதான் எம்.சி.சி.  ஆகவே விதிப்படி சரிதான் என்று அஸ்வினுக்கு வால் பிடிப்பவர்கள் எம்.சி.சியை உதாரணம் காட்டினால் அதே எம்.சி.சி. இன்று பல்ட்டி அடித்ததையும் கவனிக்க வேண்டும் என்பதே நம் வேண்டுகோள். அதே வேளையில் எம்சிசி சொன்னால் சரிதான் என்றும் நாம் பார்க்க வேண்டிய தேவையில்லை என்பதற்கான உதாரணம்தான் அவர்கள் பவுலர்களை நசுக்கும் விதிமுறைகளைக் கொண்டுவந்ததும்.

நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக இந்தச் சர்ச்சைகளினாலோ என்னவோ ஆட்டத்தில் கவனம் செலுத்தாத அஸ்வின் வட்டத்துக்குள் 3 பீல்டர்களையே நிறுத்தினார், இதனால் ஷமி பந்தில் ரஸல் பவுல்டு ஆனது மாற்றப்பட்டு நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது, 3 பீல்டர்களை வேண்டுமென்றே அவர் நிறுத்தினாரா? யார் பார்த்து விடப்போகிறார்கள் என்று நினைத்தாரா அல்லது தெரியாமல் அப்படி நிகழ்ந்ததா என்பது பற்றி நமக்குத் தெரியாது, ஆனால் அந்த நோ-பாலினால் கிங்ஸ் லெவன் தோல்வி அடைந்தது அதனால்தான்.

இந்த சம்பவத்துக்குப் பிறகே அஸ்வினுக்கு தன் தவறு பிடிபட்டிருக்குமோ என்னவோ. இதற்கு அடுத்தபடியாக கிங்ஸ் லெவன் இலக்கை விரட்டும்போது 6வது ஓவரில் ஒரே குழப்பம், ஆட்டம் தடைபடுகிறது, அஸ்வின் எல்லைக்கோட்டருகே அங்கும் இங்கும் அலைந்தபடியே மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் காணப்பட்டார். நடந்தது என்னவெனில் கிங்ஸ் லெவன் பேட்ஸ்மேன் ஒரு ரன் எடுத்தார். அந்த பந்து பீல்ட் செய்யப்பட்டு சில நொடிகள் கழிந்தது, பேட்ஸ்மேனும் 2வது ரன்னுக்காக முயற்சி எதுவும் செய்யவில்லை, பந்து அங்கேயே டெட் பால் ஆகிவிட்டது, அப்போது ராபின் உத்தப்பா அடுத்த பந்தை பவுலர் வீசுவதற்காக மிட் ஆஃபில் ரஸலிடம் பந்தை பாஸ் செய்தார்.

அப்போது மைதான ஒளிவெள்ள வெளிச்சம் கண்ணை மறைக்க ரஸல்  பந்தை பார்க்க முடியாமல் குனிய பந்து பவுண்டரிக்குச் செல்கிறது. இது ஏற்கெனவே டெட் பால்தான், ஆனால் டெட்பாலா இல்லையா என்பதை நடுவர்தான் தீர்மானிக்க வேண்டும். நடுவரும் அதை டெட் பால் என அங்கீகரிக்கவில்லை என்ற அளவில் அது சரிதானா என்பது வேறு ஒரு விவாதம். ஆனால் பந்து பவுண்டரிக்குப் போனவுடன் டக் அவுட்டில் இருந்த அஸ்வின் நேராக எழுந்து சென்று 4வது நடுவரிடம் போய் அது 4 ரன்கள் ஓவர் த்ரோ என்று வலியுறுத்தினார். அவரும் ஏற்க 4வது நடுவர் களநடுவருக்கு  அது ஓவர் த்ரோ என்று தெரிவிக்க களநடுவர் பவுண்டரி என்று சிக்னல் செய்கிறார். பந்து டெட் பால் இல்லையா? நடுவர்களுக்கு இந்த கேள்வியே எழவில்லை, அஸ்வின் நடுவர்கள் தீர்ப்பிலும் தாக்கம் செலுத்தத் தொடங்கியதற்கான செயலாகும் இது.

இதுவும் சரிதான், தவறுதான் என்ற விவாதங்கள் ஒரு புறம் இருக்கட்டும். இங்கும் நடுவர் தீர்ப்பின் மீது, முடிவின் மீது, அல்லது நடுவர் முடிவையே தீர்மானிக்கும் செல்வாக்கு செலுத்தியதன் மூலம் அடுத்தடுத்து இருமுறை ஸ்பிரிட் ஆஃப் த கிரிக்கெட்டை தூக்கி கடாசியுள்ளார் அஸ்வின்.  அது ஓவர் த்ரோவா இல்லையா என்பதை நடுவர் முடிவுக்கு விட்டு விட வேண்டியதுதானே. இப்படியே போனால் 2008 தொடரில் கங்குலிக்கு ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கே அவுட் கொடுத்தது போல் இந்த ஐபிஎல் தொடரில் அஸ்வினே எதிரணி பேட்ஸ்மென்களுக்கும் அவுட் கொடுத்து விடுவாரோ என்று பயமாகத்தான் இருக்கிறது.

எல்லாம் வணிக மயமாகி விட்டது அதனால் ஸ்பிரிட் ஆஃப் த கேமெல்லாம் செத்துவிட்டது என்று சுடுகாட்டு வேதாந்தப் பார்வையும், இவையெல்லாம், இந்த மீறல்களெல்லாம் கிரிக்கெட்டை மேலும் சுவைப்படுத்துகிறது, பார்வையாளர்களை குஷிப்படுத்துகிறது, வணிக மதிப்பை அதிகரிக்கிறது என்ற பார்வை ஒரு பாசிவிட்டிஸ்டிக் அணுகுமுறையும் அறரீதியான அணுகுமுறைக்கு ஒவ்வாது, நமது அணுகுமுறை கிரிக்கெட் என்பது ஒரு ஆட்டம் அதன் தூய கருத்தியல் அடிப்படையில், இங்குதான் ஸ்பிரிட் வருகிறது. ஸ்பிரிட்டை பேசவில்லையெனில் அது மட்டையடி வணிகவாதம், வெகுஜன மிகு உணர்ச்சி, வெறியையும், சுயநலத்தையும், சுயநலமிகளையும் பெருக்குவதாகத்தான் முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x