Published : 14 Mar 2019 07:21 PM
Last Updated : 14 Mar 2019 07:21 PM

பொள்ளாச்சியைப் போலவே 9 ஆண்டுகளுக்கு முன் வெடித்த வீடியோ விவகாரம்: படுகொலை செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் செயலாளர்

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூரம் குறித்த வீடியோ விவகாரம் போலவே நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் 9 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததோடு, அது படுகொலையிலும் முடிந்தது. அதில் நடந்த சம்பவங்கள் எல்லாமே எப்பேற்பட்டவரையும் நடுங்க வைப்பவை.

பள்ளிபாளையத்தில் ஒரு கந்துவட்டிக்காரரிடம் ஒரு பெண் கடன் பெற்றார். அதை அவரால் செலுத்த முடியவில்லை. அதற்காக அவரை மிரட்டிய கந்துவட்டிக்காரர் அப்பெண்ணின் மகளைக் கடத்திக் கொண்டு போய் தன் குடோனில் வைத்திருந்தார். அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அந்தக் கயவன், சாடிஸ்ட் மனப்பான்மையோடு தன்னிடம் வேலை பார்க்கும் ஒருவனை அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்து வீடியோவும் எடுத்தான். அதை பாலுணர்வை தூண்டும் வெப்சைட்டிலும் வெளியிட்டான்.

அந்தப் பெண் பின்னாளில் திருமணம் செய்து கொண்டு கணவனோடு இருந்து கர்ப்பமும் தரித்த நிலையில் அவளின் அம்மாவைப் பார்த்த ஒரு கணினி மையத்தின் உரிமையாளர், ''உன் பொண்ணோட அசிங்கமான படம் இதுல இருக்கு. எப்படி வந்தது. அவ வாழ்க்கையே பாதிச்சுடுமே?'' எனக் கேட்டார்.

இதனால் அந்தத் தாயும் பயந்து, ''அந்த கந்து வட்டிக்காரன்தான் இப்படியெல்லாம் செஞ்சிருக்கான்!'' என்று கதறியிருக்கிறார். கணினி மைய உரிமையாளர்,  ''அந்த கந்துவட்டிக்காரன் இது போல நிறைய செஞ்சிருக்கான். ஏகப்பட்ட பொண்ணுகளை சீரழிச்சிருக்கான். எதுக்கும் போலீஸில் புகார் செஞ்சு வை. பாதுகாப்பா இருக்கும்!'' என்று சொல்லியிருக்கிறார். கூடவே வெப்சைட்டில் இருந்த வீடியோவை பேக் அப் செய்தும் தந்திருக்கறார்.

பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் செய்யப் போக போலீஸார் தேள் கொட்டினது போல் அலறினர். ''நீ சொல்ற ஆள் மகா கேடி. கொலை பாதகன். அவன் மேல நிறைய வழக்கு இருக்கு. எங்களாலேயே ஒண்ணும் செய்ய முடியலை. சினிமா படமெல்லாம் எடுத்திருக்கான். அவனுக்கு நிறைய அரசியல்வாதிக பழக்கம். இதை வெளியே சொல்லாதே. ஓடிடு!'' என்றும் கருணை பொங்கக் கூறினர்.

இருந்தாலும் பயத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அருகில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அப்பெண் நடந்ததைக் கூறியிருக்கிறார். அதைக் கேட்ட தோழர்கள் கொதித்துப் போய் மாதர் சங்கம் மூலம் புகாரைக் கொண்டு சென்றனர். அப்போதும் புகார் உதாசீனம் செய்யப்பட நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தந்தனர்.

இதனால் வேறு வழியில்லாது உள்ளூர் போலீஸார் பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவள் தாயையும் அழைத்து தைரியம் கொடுக்காமல், இந்தப் புகார் கொடுப்பதால் எந்த மாதிரியான பாதிப்புக்கெல்லாம் உள்ளாவீர்கள் என கவுன்சிலிங் செய்தனர். இதனால் பெண் தரப்பு புகாரே தராமல் சென்று விட்டது.

இந்த அளவு இவ்விவகாரத்தைக் கொண்டு போனவர் அங்கிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் வேலுச்சாமி. அவருக்கு கொலை மிரட்டல் வந்தது. அவரும் போலீஸில் புகார் செய்தார். ''இந்த கந்து வட்டிக் கும்பலிடம் பாதுகாப்பு வேண்டும்!'' என்றும் கோரிக்கை வைத்தார். போலீஸ் அதை அலட்சியம் செய்தனர். மறுபடி ஒருநாள் வேலுச்சாமி வீட்டிலேயே வந்து இரண்டு பேர் மிரட்டிச் சென்றனர். அதையும் அன்றிரவே புகாராக எழுதி காவல் நிலையத்தில் கொடுத்திருக்கிறார். அப்படி அவர் தந்து விட்டு மொபட்டில் வந்தவரை வழிமறித்த ஒரு கும்பல் பல்வேறு ஆயுதங்களால் தாக்கி வெட்டிக் கொன்றது. இந்தச் சம்பவம் 2010-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி நடந்தது.

''இந்தக் கொலைக்குக் காரணம் அந்த கந்துவட்டி மாஃபியாவே. போலீஸ் கண்டு கொள்ளாததால்தான் இந்த விபரீதம் நடந்திருக்கிறது. கொலை செய்த கூலிப்படை பின்னால் உள்ளூர் போலீஸ் அதிகாரிகளும் உள்ளனர்'' என்று சொல்லி கடையடைப்பு, விசைத்தறிகள் வேலை நிறுத்தம் செய்து மக்கள் போராட்டம் செய்தனர்.

உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்பது போல் இந்தக் கொலைக்கு குறிப்பிட்ட நபரேதான் காரணம் என்பதை முழுமையாக அறிந்தும் இந்தக் கொலையாளி மற்றும் கூலிப்படை விஷயத்தில் பத்துப்பேரைப் பிடித்து விசாரணை என்கிற கண்துடைப்பு நாடகமே நடந்தது. மக்கள் சிபிசிஐடி, சிபிஐ விசாரணை கேட்டும் போராடினார்கள்.

மேற்படி வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ஒருவர் சிறையிலும், இன்னொருவர் ஜாமீனில் வெளியிலும் இருக்க இன்னமும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆக, இந்த மாதிரி சம்பவங்கள் மூலம் காலம் நமக்கு நிறைய பாடங்கள் கற்றுக் கொடுத்துக் கொண்டுதானிருக்கிறது. நம் போலீஸும் ஆட்சியாளர்களும்தான் தங்களை மாற்றிக் கொண்ட வழியைக் காணோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x