Last Updated : 21 Mar, 2019 04:45 PM

 

Published : 21 Mar 2019 04:45 PM
Last Updated : 21 Mar 2019 04:45 PM

மக்களவைத் தேர்தலும் கைது அரசியலும்-மல்லையாவுக்கு கிடைத்த ஜாமீன் நீரவ் மோடிக்கு கிடைக்காதது ஏன்?

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்தும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த வழக்கிலும் வைர வியாபாரி நீரவ் மோடி சிக்கியுள்ளார். அவரைக் கைது செய்து இந்தியா அழைத்து வர சிபிஐ நடவடிக்கை எடுத்து வந்தது. பல நாடுகளுக்கு போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் பயணம் செய்த நீரவ் மோடி, இறுதியாக லண்டனில் தஞ்சம் புகுந்தார்.

தற்போது லண்டனில் வாழும் நீரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி இந்த மாத தொடக்கத்தில் இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சஜித் ஜாவித்திடம் மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு ஆங்கில நாளேடு வெளிட்ட செய்தியில், லண்டனில் வெஸ்ட் என்ட் பகுதியில்  ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் நீரவ் மோடி வசிப்பதாக செய்தி வெளியானது. மேலும், அந்த நாளேட்டின் நிருபர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்காமல் நீரவ் மோடி சென்றார்.

இதன் பிறகு நீரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நாடியது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில்  நீரவ் மோடியை நாடு கடத்த அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இதையடுத்து, அவரைக் கைது செய்ய லண்டன் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. அதன்படி நீரவ் மோடி கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

இதேபோல், இந்திய வங்கிகளில் ரூ. 9,000 கோடி அளவில் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்ற விஜய் மல்லையாவும் கைது செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. எனினும் அவரை இந்தியா அழைத்து வர சிபிஐ தொடர்நது நடவடிக்கை எடுத்து வருகிறது.

வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் இருவரையும் பிரிட்டன் நீதிமன்றங்கள் வெவ்வேறு விதமாக நடத்துது பற்றிய கேள்விகள் எழுகின்றன. ஆனால் இரண்டும் வெவ்வேறான வழக்குகள் என கூறப்படுகிறது. அதுபோலவே விஜய் மல்லையா பிரிட்டன் பாஸ்போர்ட் வைத்துள்ளார்.

அவர் முறைப்படி அந்நாட்டில் வசித்து வருகிறார். அவர் லண்டனில் வசிப்பதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் இந்தியா அழைத்து வர வேண்டும் என்ற சிபிஐயின் கோரிக்கை மீதே நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.

ஆனால் நீரவ் மோடி வெவ்வேறு நாடுகளில் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்ததும், லண்டனில் கூட முறையான ஆவணங்கள் இன்றி அவர் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 15 நாடுகளில் போலி கம்பெனிகள் மூலம் பணம் கையாளப்பட்டதையும் அமலாக்கத்துறை சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி மோசடியில் நீரவ் மோடியின் சொத்துகள் முடக்கப்பட்டதையும் நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் தெரிவிக்கப்பட்டது. இதையேற்ற லண்டன் நீதிமன்றம் நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்கவில்லை.

இதைத்தொடர்ந்து, நீரவ் மோடியை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் அவசரமாக லண்டன் சென்றுள்ளனர். நீரவ் மோடியை அழைத்து வருவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை லண்டனில் இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களவைத் தேர்தல்: ‘நீரவ் மோடி அரசியல்?’

நீரவ் மோடியை உடனடியாக இந்தியா அழைத்து வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் நீரவ் மோடியை இந்தியா கொண்டு வந்து சிறையில் அடைத்து அதனை சாதனையாக்க பாஜக திட்டமிடுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

தேர்தலில் ஒருவேளை வெற்றி பெற்றால் நீரவ் மோடியை மீண்டும் வெளிநாட்டுக்கே அனுப்பி வைத்து விடுவார்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கிண்டல் செய்துள்ளார். ஏற்கெனவே விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வர தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவருக்காக மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அறையும் ஒதுக்கப்பட்டு விட்டது.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் ஒப்புக் கொண்ட போதிலும் தற்போது மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருக்கிறது. எனினும் தேர்தலுக்கு முன்பாக அவர் அழைத்து வரப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோலவே நீரவ் மோடியும் அழைத்து வரப்பட்டால் அது பிரதமர் மோடியின் சாதனையாக பார்க்கப்படும் என்பது பாஜகவின் எண்ணம்.

நீரவ் மோடியை வைத்தும் பாஜக அரசியல் செய்வதாக காங்கிரஸ் மட்டுமின்றி ஆம் ஆத்மி உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகளும் விமர்சித்துள்ளன. எனினும் பிரிட்டனில் நீரவ் மோடியை இந்தியா அழைத்து வர பல்வேறு சட்ட நடைமுறைகளை சிபிஐ தாண்ட வேண்டிய சூழல் உள்ளது.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x