Published : 14 Mar 2019 04:45 PM
Last Updated : 14 Mar 2019 04:45 PM

பொள்ளாச்சி கொடூரம்: புதுமைச் சரித்திரம் எழுதுங்கள் பெண்களே!

பெண்ணுக்கு எதிரான கொடுமையும் கொடூரமும் இதைவிட உண்டா எனும் அளவுக்கு, அளவுக்கு மீறிப் போயிருக்கிறது... பொள்ளாச்சி விவகாரம். நினைத்தாலே நெஞ்சு பகீரென்கிறது. அதைப் பற்றிப் பேசும்போதே, மன ஆழத்தில் இருந்து சோகமும் கோபமும் ஆர்ப்பரிக்கின்றன.

இன்று இல்லையேனும் ஒருநாள், மனசாட்சி உறுத்தும் என்பார்கள். ஆனால் பெண்களை போகத்துக்கும் ஏகபோகமாய் வாழ பணத்துக்குமாகவே பார்த்த இந்தப் படுபாவிகளுக்கு, ஒருநாளில், ஒருபொழுதேனும், ஒருநிமிடமேனும் ‘செய்வது மகாபாவம்’ என்று தோன்றவே இல்லையே... ஏன்?

சமூக வலைதளத்தின் மூலமாக நட்பாகி, அன்பாகி, நம்பிக்கைக்கு உரியவர்களாகி... வலையில் சிக்கிக்கொண்டதும், நட்புமில்லை, அன்புமில்லை, நம்பிக்கை துரோகமும் செய்துவிட... குறுகிப் போயிருக்கிறவர்கள், கூனிக்கிடக்கிறவர்கள், பெண்கள்தான்!

வலையில் சிக்கவைப்பதும் சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி காரியம் சாதித்ததும் ‘அண்ணா, விட்டுடுங்கண்ணா’ என்கிற கெஞ்சலையும் கேட்காமல், இரக்கம் என்ன விலை என்று கேட்டுவிட்டு, அரக்கத்தனமாக சதைவெறிகொண்டு சீரழித்தவர்களும் அவர்களின் குடும்பங்களும்தான் கூனிக்குறுக வேண்டும். நாணிப் பதுங்கவேண்டும்.

இப்படியொரு சம்பவம்... இனியும் நடக்காமலிருக்க, நடந்ததையெல்லாம் மென்று முழுங்கிவிடாதீர்கள் பெண்களே! அவற்றை தைரியமாக சட்டத்துக்கு முன்னே துப்பிவிடுங்கள்.

பொள்ளாச்சி சம்பவங்கள்தான் பெண்கள் மீதான வன்கொடுமையின் முற்றுப்புள்ளி என்பதாக இருக்கவேண்டும். அந்தப் பெண்களுக்கு இந்த சமூகமாகிய நாம் கொடுக்கும் ஆதரவுதான், இப்போதைய அவர்களின் கண்ணீர்க்கறைகளுக்கான கைக்குட்டை.

சீறி வந்த அசுரப் புலியை முறத்தால் அடித்துத் துரத்தியதெல்லாம் இருக்கட்டும். அறத்தால் அடித்து துவம்சம் செய்வோம், ஈனபுத்தியில் சதையாட்டம் போட்டவர்களை அறச்சீற்றத்தால் வெல்வோம்; புதுமைச் சரித்திரம் எழுதுங்கள், பெண்களே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x