Published : 13 Mar 2019 10:55 am

Updated : 13 Mar 2019 10:55 am

 

Published : 13 Mar 2019 10:55 AM
Last Updated : 13 Mar 2019 10:55 AM

பொள்ளாச்சீ..! - பாலியல் வக்கிரம்... மீள்வது எப்போது?

பொள்ளாச்சி அவலம் கொடுத்திருக்கும் கேவலமும் தலைக்குனிவும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு ஆறாத வடுவென இம்சித்துக்கொண்டே இருக்கும்.

ஒரு தவறு தொடர்ந்து நடக்கும்போது பொளேரென அறைந்து பல உண்மைகளை நமக்கு உணர்த்தும். ஆனால் ஒவ்வொரு முறையும் பாடம் கற்கிறோமா என்பதுதான் கேள்வி.

பொள்ளாச்சீ..! இணையத்தில் உலா வரும் வீடியோக்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் அலறல் நம் வீட்டுப் பெண்களின், உலகின் ஒட்டுமொத்தப் பெண்களின் குரலாய் ஒலிக்கிறது நம் செவிகளில்! பசுத்தோல் போர்த்திய புலியாய் வக்கிர மனிதர்கள் காதல் முலாம் பூசி, அமில அவமானத்தை இந்த சமுதாயத்துக்கு வழங்கியது கொடுமையிலும் கொடுமை. இரண்டுமணி நேர சினிமாவில், இரண்டு நிமிடங்கள் இப்படியொரு காட்சியைக் காட்டினாலே பதைபதைத்து, நெஞ்சம் பிடித்துக் கதறுகிற நம்மால், இந்த ஜென்மத்துக்கும் பார்க்க முடியாதபடி, மறக்கவே முடியாதபடி, உக்கிரமான காட்சிகளை நிஜத்தில் செய்திருக்கிறவர்களை என்ன சொல்வது? என்ன செய்வது?

காதலில் கட்டுண்ட பெண்களை நயவஞ்சகமாய் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். காதலனாய் தேன் சொட்ட பேசியவன்.. அதட்டி மிரட்டி அவளை ஆக்கிரமிக்கிறான். நண்பர்களுடன் கூட்டாக! மனிதாபிமானமே இல்லாத டெக்னாலஜி ஆண்ட்ராய்டு போன்கள், மானத்தை வலைதளத்தில், இணையதளத்தில் ஏற்றுவதற்கு பதிந்து கொண்டிருக்கிறது.

பெண் போராளிகளை வீழ்த்தி அவர்களது பிறப்புறுப்பில் துப்பாக்கியைச் செருகி உச்சகட்ட வன்மத்தை செய்த கொடூரர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? உடல் இச்சைக்காக, பணத்துக்காக, கூட்டுப் பாலியல் வன்முறை செய்கிறார்கள். ஆடை இல்லாமல் இருக்கிற படுக்கையறைக் காட்சிகளை பகிர்ந்துவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள். இப்படி, ஒன்றிரண்டு பெண்களை மட்டுமில்லை. இந்த 7 வருடங்களாக 200க்கும் மேற்பட்ட பெண்களின் கற்பை வேட்டையாடி, உடலைக் கொண்டே உடலையும் பணத்தையும் பிடுங்கிக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.

முன்பெல்லாம், ஏதோவொரு தெருவில், மரத்தடியில், பார்க் பெஞ்ச்சில் பையனும் பெண்ணும் இருந்தால், ‘யாரு நீங்க? எந்த ஏரியா? உம் பேரென்னம்மா? அப்பா என்ன பண்றாரு?’ என்று ஆயிரம் கேள்விகளை யார் வேண்டுமானாலும் கேட்பார்கள். காலையில் ஒரு பையன் ஒரு பெண்ணுடன் சுற்றித்திரிந்துவிட்டு மாலையில் வீட்டுக்குச் செல்லும்போது அந்த விஷயம், அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்கும் தெரிந்திருக்கும். இப்போது அப்படியெல்லாம் யாரும் யாரையும் கேட்டுவிடமுடியாது.

’’பெற்றோர்களுக்குப் பணிச்சுமையும், உடல் சோர்வும், பொருளாதாரப் பிரச்சினையும் அதிகரித்துவிட்டன. இதனால், கணவன் மனைவிக்குள் இருக்கிற லேசான இடைவெளிக்குள், யாரோ ஒருவர் புகுந்துகொள்கிறார். அதேபோல பெற்றோருக்கும் குழந்தைகளுக்கு நடுவே இருக்கிற இடைவெளியை, டெக்னாலஜி நிரப்பிவிடுகிறது. ஒருகட்டத்தில், தவறுக்குள் நுழைகிறார்கள் மூவருமே. தவறு, தவறில் இருந்து தவறு, அடுத்தகட்ட தவறு என்று மீளமுடியாமல் போகிறவர்களும் உண்டு’ என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

ஃபேஸ் புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்… ஆப்கள் அந்நிய ஆண்களின் அறிமுகத்தை பெண்களுக்கு எளிதாக்குகின்றன. அன்புக்கு ஏங்கும் இந்தப் பெண்களில் சிலர், யாரோ ஒருவரின் ‘இந்தப் புடவைல நீங்க அழகா இருக்கீங்க’ என்பதான கமெண்ட்டுகளுக்கு, தங்கள் மனதைப் பறிகொடுக்கிறார்கள். ஒருகட்டத்தில், சமய சந்தர்ப்பங்கள் பார்த்து, பெண்களின் உடலைப் பறித்துக்கொள்கிற ஆண்களும் உண்டு.

வேஷமிக்க அன்பு எப்போதுமே பலவீனப்படுத்திவிடும். நம்மை மனரீதியாகவும் பதம் பார்த்துவிடும். பலவீனமான மனம், மேலும் மேலும் பலமிழக்கும். எங்கோ, யாரிடமோ, தங்களை இழந்து, பிறகு இழந்ததற்கான ஆதாரங்களைக் காட்டி, இன்னும் இன்னுமாக நிம்மதியையும் அமைதியையும் இழந்துகொண்டே இருக்கிறார்கள். ஒரு புகைப்படத்தை எவனோ ஒருவன் பதிவிட்டதற்காக, சேலத்தில் ஒருபெண் தற்கொலை செய்துகொண்டது நினைவிருக்கிறதா? 

வக்கிரமிக்க ஆண்கள், பொறுப்பற்ற பெற்றோர்களால் உருவாக்கப்படுகிறார்கள். கடுமையான பொருளாரதார நெருக்கடியிலும் மகனுக்கென்று தனி அறை. ஏசி, வை-பை வசதியுடன் லேப்டாப், லட்சக்கணக்கான விலையில் பைக். ஆப்பிள் ஐ ஃபோன்... டெபிட் கார்டு நிறைய காசு.. கூடவே கிரெடிட் கார்டு.. இப்படி எல்லாமே திகட்ட திகட்டக் கிடைப்பதால், பெண், செக்ஸ் என்பதெல்லாமும் ஈஸியாகக் கிடைத்துவிடும் என நினைத்துவிடுகிறார்கள் இளைஞர்கள் சிலர். அப்படி முரண்டுபிடிக்கும் போது, டெக்னாலஜி உறுதுணையாக இருக்கிறது அவர்களுக்கு!

ஆண் பிள்ளைகளைத் தனித்து விடும்போது ஏக்கமும், கூடா நட்பும் கேடாய் முடிகிறது என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

பெண்களே உஷார்!

நெருப்பு சுடும் என்று சூடு பட்டவர்கள் சொன்னாலும் யாருக்கும் புரிவதில்லை. பட்டுத் தெரிந்துகொண்ட பிறகுதான் கதறுகிறார்கள். காலங்கள் வேகமெடுத்தாலும் பெண்கள் படிப்பு, அதிக மார்க், நல்ல வேலை என பொருளாதாரம் உட்பட சகலத்திலும் முன்னேறிக் கொண்டிருந்தாலும், உடல் என்கிற விஷயத்தில், செக்ஸ் எனும் நிலையில், எப்படியோ அடிமைப்படுத்தி விடுகிறார்கள் வக்கிர ஆண்கள் சிலர்!

1. இரண்டு கண்களுடன் ‘சந்தேகக்கண்’ கொண்டு பார்ப்பதையும் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

2. புதிய நட்புக்கு ஃபில்டர் வைத்துக் கொள்ளுங்கள்.

3. வார்த்தையில் உள்ள பொய்யையும் உண்மையும் கண்டறியுங்கள்.

4. நாம் உண்மையாய் இருந்தால், பொய்யை மிக எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

5. நல்லுறவோ கள்ள உறவோ... விழிப்புணர்வு மிக அவசியம்.

6. பொது இடங்கள், எதிராளியின் இடங்கள் என்று செல்லும்போது எச்சரிக்கை உணர்வு இன்னும் தேவை.

7. கையில் உள்ள செல்போனில், இந்த உலகில் ஏமாற்றப்பட்டவர்களின் கதைகளும் பதிவாகியிருக்கின்றன. அவற்றை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

8. விதம்விதமாக, ரகம் ரகமாக ஏமாற்றுகிறவர்களின் உலகம் அதைவிட பிரம்மாண்டம். டெக்னாலஜித்தனமாக வில்லத்தனம் காட்டுபவர்களையும் அதில் தெரிந்துகொள்ளலாம்.

9. தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசே மேல் என்பார்கள். கூடுமானவரை, குடும்பத்துக்குள் இருக்கிற பாசத்தையும் நேசத்தையும் பெறுவதற்கான வழியை யோசியுங்கள்.

10. ஆண் பெண் சமம்தான். ஆனாலும் ஆணின் உலகம் வேறு. பெண்ணின் உலகம் வேறு. ’பெண் வெறும் போகம்’ எனும் நிலை மாறுவதற்கு எத்தனை நூறு ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை. அமைதி அவசியம்.

11. பழகும் ஆணுடன் செல்ஃபி எடுத்துக்கொள்கிற காரியங்கள் வேண்டவே வேண்டாம். நீங்கள் உங்களை எடுத்துக்கொள்கிற செல்ஃபி உள்ளிட்ட படங்கள், சமூக வலைதளங்களில் பதிவிட்டால், அதை மார்ஃபிங் செய்கிற புத்தி கொண்டவர்கள் இருக்கிற உலகில் நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்.

12. அவர்களின் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.

13. அப்படி அவர்களின் இடங்களுக்குச் செல்லும்போது கவனமாக இருக்கவேண்டும்.

14.அந்த மாதிரியானவர்களையும் சூழலையும் முற்றிலும் தவிர்ப்பது இன்னும் புத்திசாலித்தனம்.

 

பொள்ளாச்சி பாலியல் கொடுமைபொள்ளாச்சி பயங்கரம்பொள்ளாச்சி அவலம்உச்சக்கட்ட வன்மம்பெற்றோர்களுக்கு பணிச்சுமைஆண்களின் அறிமுகம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x