Last Updated : 08 Mar, 2019 12:07 PM

 

Published : 08 Mar 2019 12:07 PM
Last Updated : 08 Mar 2019 12:07 PM

அத்தை, பாட்டிக்கு கிடைச்ச உரிமைகள்! - மகளிர் தின ஸ்பெஷல்

இன்று சர்வதேச மகளிர் தினம். பெண்கள் பெருமைமிக்க பொக்கிஷங்கள்... பெண்களின்றி அமையாது உலகு. பெண்கள் ஆண்களுக்கு  குறைந்தவர்கள் அல்ல. சொல்லப்போனால் ஆண்களை விட மனதளவில்  பன்மடங்கு தைரியசாலிகள். கடுமையான சூழ்நிலைகளிலும் பாந்தமாய் பொருந்திக்கொள்ளும்  பொறுமைசாலிகள்.

இயற்கை நியதியின் படி ஆண் என்பவன் பெண்ணைச் சார்ந்திருப்பதும் பெண் என்பவள் ஆணைச் சார்ந்து இருப்பதும் இயல்பானது.

பெண்கள் ஆண்களை சார்ந்துதான் வாழ வேண்டும்  என்ற முப்பாட்டன் காலத்தை சற்றே ஒதுக்கி வைத்து பார்ப்போம். பெண் விடுதலை என்றால் என்ன என்பதை!   

அன்று.. 1970- 1980 களில்.: 

உத்தியோகம் புருஷ லட்சணம் என்று சொல்வார்கள்.  படிக்காத அம்மாக்கள்தான் வீட்டு நிர்வாகத்தை அழகாய் கையாண்டார்கள்.  மளிகைப் பொருட்களுக்கு கணவர் கொடுத்த தொகையில் இருந்து ஆபத்துசம்பத்துக்கு உதவும் என்று  சிறு தொகையை ஒதுக்கி  அஞ்சறைப் பெட்டிக்குள்  பாதுகாப்பாய் வைத்தார்கள். இப்படி  சிறுகச் சிறுக சேர்க்கப்பட்ட தொகை ஒரு கட்டத்தில் மனை வாங்கவும், நகை வாங்கவும்  பயன்படுத்தப்பட்டது ஆச்சரியமானது.

அம்மா, சித்தி, அத்தை, பெரியம்மா என்று அத்தனை உறவுகளும் கணவனைச் சார்ந்து ஆனால் கணவனோடு இணைந்து  குடும்பத்தை அழகாக்கினார்கள்.  குடும்பத்தைத் தாண்டிய செலவுகளுக்கு தோட்டம், துறவு, வீடு, திருமணம், சுப நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் வீட்டுப் பெரியவர்களிடம் ஆலோசித்து  திட்டமிட்டார்கள். வேலைக்காக டவுனுக்கு குடியேறியவர்கள் அவசியமானதையும் பெரியவர்களிடம் ஆலோசித்தே வாங்கினார்கள்.

 உன்னை சார்ந்து நான்  இருக்கிறேன் என்று பரஸ்பரம் இருவருக்குள்ளும் ஆழமான அன்பு இருந்தது.  விட்டுக்கொடுத்தலும், புரிதலான நம்பிக்கையும், பலரது குடும்பங்களில் இருந்தன. பெண்கள் வேலைக்குப் போகவில்லை. ஆனாலும் குடும்பத்தைச் சிறப்பாக நிர்வாகம் செய்தார்கள். முக்கியமான காலகட்டங்களில் முடிவெடுக்கும் போது ஆண்கள் அவர்களது அபிப்ராயங்களுக்கும் செவிசாய்த்தார்கள். குடும்பங்களை நேர்த்தியாக ஓட்டிச்செல்லும் லகான்கள் பெண்களிடமே பெரும்பாலும் இருந்தன. அங்கு  பெண் விடுதலை என்பது  கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவே இருந்தது. பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாக நடந்த நிகழ்வுகளும் நடந்தேறின.

அடுத்த கட்டம்  1980-க்கு பிறகு 2000 வரை:

ஆண்களை விட பெண்கள் திறமைசாலிகள் என்பதை பள்ளிப்பருவத்திலேயே நிரூபிக்க தொடங்கிய காலகட்டம் இதுதான். காரணம்... படிப்பிலும் மதிப்பெண்ணிலும் பெண்கள் ஸ்கோர் செய்ததுதான் காரணமாகச் சொல்லப்பட்டது.

அன்று வளரத் தொடங்கிய பெண்களின் வேகம் இன்று வரை குறையவில்லை என்பதற்கு  அரசு பொதுத்தேர்வு முடிவுகளையே சாட்சியாக சொல்லலாம். சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை சாளரம் வழியாக மட்டுமே எட்டிப் பார்த்த பெண்கள்  ஒரு கட்டத்தில் வீதியில் வலம் வந்தார்கள். அடுத்தகட்டமாக, அவர்க ளையே தலைநிமிர பார்க்கச் செய்தார்கள். இப்படித்தான் பெண்களின் வளர்ச்சி விஸ்வரூபமாயிற்று. இதற்கெல்லாம் சமூகமும் சுற்றமும் அவர்களுக்கு துணை நின்றது.

 பெண்கள்  அனைத்துத் துறைகளிலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். உயர்வாக பார்க்கப்பட்டார்கள். பொருளாதார ரீதியாக  யாருடைய ஆதரவும் இன்றி தன்னிச்சையாக செயல்படவும் முடியும் என்பதை  உணர்ந்துகொண்டார்கள். உதாரணமாய் நின்றார்கள். தங்கள் விடுதலையையும் சுதந்திரத்தையும் சுகமாக  சுவாசித்தார்கள். பெண் விடுதலை என்பது சமூகத்தை சீர்கேட்டுக்கு உள்ளாக்காது. வீட்டையும், நாட்டையும் முன்னேற்றுவதற்கான பலம். சமூகத்தின் விடுதலை என்பதையெல்லாம் சிரமேற்கொண்டார்கள். சித்தம் தெளிந்தார்கள். தனது சுயத்தை இழக்காமல் பயணித்தார்கள்.

இத்தகைய சுதந்திரத்தை கடும் போராட்டத்துக்கு பிறகே கைப்பிடித்தார்கள் என்பதை மறுக்க முடியாது. பெண்ணாக இருப்பதாலேயே பல இடங்களில்  பல சூழ்நிலைகளில் அவரகளுக்கான உரிமைகள்  மறுக்கப்பட்டிருக்கின்றன. கல் உடைக்கும் இடமாக இருந்தால் என்ன.. கணினித் துறையாக இருந்தால் என்ன?   பெண்களை பலவீனமாக்கும் முயற்சிகள் இப்போது வரை தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றை மன உறுதியோடு எதிர் கொண்டு எதிரிகளை பலமிழக்க   பகீரத பிரயத்தனப்பட்டிருக்கிறார்கள்.

சடங்கு, சம்பிரதாயம், மூடநம்பிக்கைகள் அனைத்தும்  எங்களுக்கு மட்டுமா என்று கேள்விக்  கணைகளை வீசும் அளவுக்கு கல்வியும் அனுபவமும் அவர்களை  மெருகேற்றின. ஒளியேற்றின. பெண்களுக்கான  அமைப்புகளை உருவாக்கினார் கள். முடங்கிக் கிடக்கும் பெண்களை தட்டியெழுப்பினார்கள் வீட்டில் பெண்களுக்கான கொடுமைகள் குறைந்தன. உரிமைகள் கிடைத்தன. கல்வியால்  கம்பீரத்தையும், சம்பாத்தியத்தால் தைரியத்தையும் பெற்றனர். பெண் விடுதலை  கெஞ்சியோ, அஞ்சியோ பெறுவதல்ல என்று  தலை நிமிர்ந்து பேசினார்கள்.  உலகில் ஆணுக்கு நிகராக தங்களை நிரூபித்தது இக்காலகட்டத்தில்தான். 

2000 க்கு பிறகு:

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாயனது  பெண் விடுதலை, முட்கள் நிறைந்த பாதையிலும் கவனமாக கடந்து வந்த பெண்கள் கவனக் குறைவாக திசைதிரும்பிய போதுதான் பெண் விடுதலை என்பது தவறான புரிதலை ஏற்படுத்தி விட்டது.

ரேஷ்மாவும், சந்தோஷும் இளம்தம்பதிகள். இருவருமே பொறுப்பு மிக்க பதவியில் இருந்தார்கள்.  இருவருமே இன்றைய காலத்துக்கேற்ப டிஸ்கொதே,  பார்ட்டி என்று சந்தோஷமாக அனுபவித்தார்கள்.. நான் கார் லோன் கட்டுகிறேன். நீ  வீட்டு லோன் கட்டு என்று பரஸ்பரம் பிரித்துகொண்டு  சுதந்திரமாய் உணர்ந்தார்கள். கட்டுப்பாடின்றி  அமைந்த லோன்கள்  நாளடைவில் சுமையாகின. இருவருமே பரஸ்பரம் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டத் தொடங்கினார்கள். நானும் உனக்கு இணையாக சம்பாதிக்கிறேன். அடங்க வேண்டியதில்லை என்று  ரேஷ்மாவும். நான்தான் குடும்பத்தில் தலைவன் என்று சந்தோஷும் முறைத்துக்கொண்டதன் விளைவு இன்று டைவர்ஸ் வேண்டி கோர்ட்டுக்கு வெளியே காத்திருக்கிறார்கள்.

கேளிக்கைகளும், கொண்டாட்டங்களும், கட்டுப்பாடற்ற வாழ்க்கையும்    பெண் சுதந்திரங்களில் ஒன்று என்றாகிவிட்டன.   உச்சக்கட்டமாக மது குடிப்பதும், புகை விடுவதும் கூட சில பெண்களின் தனிப்பட்ட உரிமை என்ற கேலிக்கூத்துகளும், மேல்தட்டு கலாச்சாரமாகவே பார்க்கப்படுகிறது.

பிடித்தால் வாழலாம்.. பிடிக்கும் வரை வாழலாம் என்ற லிவிங் டு கெதர் வாழ்க்கை கூட  அர்த்தமற்றதாகப் போய்க்கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தால், பொருளாதார விடுதலையால், அவர்கள் பெற்றிருக்கும் இந்தச் சுதந்திரம் எங்கு போய் முட்டிக்கொண்டு நிற்குமோ தெரியவில்லை.

ஆண்களின் துணையின்றி வாழலாம் என்பதும் தன்னிச்சையாய் வாழ்வதே சுதந்திரம் எனும் போக்கும், அதிகரித்து வருகின்றன. திருமணக் கட்டமைப்புகள், குலைந்து வருகின்றன. குறைந்தும் வருகின்றன. பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம் என்பது நாட்டுக்கு மட்டுமல்ல இன்றைய பெண்களுக்கும் பொருந்துவதாகவே இருக் கும். 

இது ஒருபுறம்...

பெண்களுக்கான உரிமைகளையும் சுதந்திரத்தையும் இம்மியளவும் குறையாமல் கொடுத்துவருகிறோம் என்று மார்தட்டிக்கொள்ளும் சமூகம் பெண்களுக்கான பாதுகாப்பை 100 % உறுதி செய்திருக்கிறதா என்பது  கேள்விக் குறிதான்.

உலகில் எங்கோ ஓர் மூலையில்  நிமிடத்துக்கு நான்கு பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இத்தகைய கொடூரங்கள் பெண்களை கொடுத்த சுதந்திரத்தை பறித்துக்கொள்ளும் அபாயமாகத்தான் பார்க்கப்படுகின்றன. சுதந்திரமாக வெளியே சென்று கொண்டிருந்த பெண்களின் சுதந்திரம் இந்த இடத்தில் மட்டும் இன்றும் கேள்விக்குறியாகவே இருக்கின்றன.

பெண் விடுதலை  கேள்விக்குறி. அதேசமயம் எல்லை மீறுதல் என்கிற பார்வையும் இங்கே உண்டு. ஆனால் அதேநேரம் சுயத்தை இழக்காத பெண்கள் உரிய  சுதந்திரத்தை பெற்று சுயமாக வாழ்வதும் போற்றப்படுகிறது.

பெண் விடுதலை என்பது  அடங்க மறுப்பதா? இல்லை. அடக்கியாள்வதா? அதுவும் இல்லை. ஆளுமையுடன் இருப்பதா? நிச்சயமாக இல்லை. உரிமையுடன் இருப்பதும் உரிமை மீறாமல் இருப்பதும் மிக மிக முக்கியம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x