Last Updated : 10 Feb, 2019 04:19 PM

 

Published : 10 Feb 2019 04:19 PM
Last Updated : 10 Feb 2019 04:19 PM

பிரெஞ்சு நாடகக் கலைஞர் மாலியெருக்கு மரியாதை: மாறிக்கொண்டேயிருக்கும் கூகுள் டூடுள் காட்சிகள்

புகழ்பெற்ற பிரெஞ்சு நகைச்சுவை நாடக நடிகர் மாலியெரின் நாடக எழுத்துகள், மற்றும் நடிப்புக் கலை போன்றவற்றைக் கொண்டாடும் விதமாக இன்றைய கூகுள் டூடுளில் அவரது முக்கியமான நாடகக் காட்சிகள் 3டி ஓவியங்களில் கவுரவம் செய்யப்பட்டுள்ளது.

இந்நாடகக் கலைஞனின் உண்மையான பெயர் ஜான் பாப்டிஸ்டே போகுலின், பிறந்து வளர்ந்தது ஒரு மரத்தச்சர் குடும்பம்தான் என்றாலும அக்குடும்பம் நீதிமன்றங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு மரச்சாமான்களை செய்துகொடுக்கும் மிகப்பெரிய தொழில்துறையைச் சார்ந்த குடும்பமாகவும் இருந்தது.

மிகப்பெரிய வணிகர் குடும்பத்தில் பிறந்த மாலியெர் பாரீஸ் நகரின் புகழ்பெற்ற கிளார்மோண்ட் கல்லூரியில் (தற்போது லூயி லி கிராண்ட் கல்லூரி) பயிலும் வாய்ப்பைப் பெற்றார்.

அவரது கல்வி, தங்கள் பாரம்பரிய குடும்பத் தொழில், வணிகம் சார்ந்த அறிவுக்குப் பயன்படும் என்று நம்பிய குடும்பத்தாரின் எண்ணங்களை நிறைவேற்றாமல் அவர்  கல்லூரியிலிருந்து வெளியே வரும்போது ஒரு நாடக ஆசிரியராகவே வெளியே வந்தார்.

அதுமட்டுமின்றி, கவிதைகள், நாடகப் பிரதிகள் என்பதைத் தாண்டி அவரே மிகச்சிறந்த நகைச்சுவை மேடைக் கலைஞராகவும் திகழ்ந்தார்.

அவரது நாடகங்கள் பாரீஸ் அரங்கங்களைத் தாண்டி உலகம் முழுவதும் புகழ்பெறத் தொடங்கின. அவரது இலக்கிய மற்றும் மொழி ஈடுபாடு காரணமாக பிரெஞ்சு மொழியில் அவர் பல்வேறு நவீன மாற்றங்களைக் கொண்டுவந்தார். அவர் செய்த சுத்திகரிப்புப் பணிகளால் பிரெஞ்சு மொழிக்கு மாலியெர் மொழி என்ற பெயரும் உருவானது.

இன்றைய கூகுள் டூடுளில் எப்படி திரை விலகினால் காட்சிகள் தோன்றுமோ அதுபோல அவரது புகழ்பெற்ற நாடகக் காட்சிகள் மாறிக்கொண்டேயிருப்பதுபோல வடிவமைத்துள்ளனர். கிளிக் செய்தால் மாறிக்கொண்டேயிருக்கும் மேடைக் காட்சிகள் அவரது நாடகங்களிலேயே புகழ்வாய்ந்த காட்சிகளாகும்.

இவரது முக்கியமான நாடகங்களாக டார்ச்சுப்பே; தி மிசான்த்ரோபே, தி லியர்ண்ட் உமன், தி ஸ்கூல் ஸ்கூல் ஆப் ஒய்வ்ஸ்; லா போன்றவற்றைச் சொல்லலாம். அவரது நாடகங்கள் பெரும்பாலும் மன்னராட்சியையும் அதிகார மையங்களையுமே கிண்டலடித்து வந்தன. இதனால் அவர் பல இன்னலுக்கும் ஆளானார்.

தனது நகைச்சுவையினாலும் அவலச் சுவையினாலும் ரசிகர்களைக் கட்டிப் போட்ட மாலியெர் நுரையீரல் காசநோயினால் 51 வயதிலேயே இவ்வுலகைவிட்டு மறைந்தார். காசநோய் அவரைத் துன்புறுத்திய நிலையிலும் மறைவதற்கு முன்வரைகூட அவர் தனது சிரிப்புமூட்டும் அங்கசேட்டைகளால் ரசிகர்களை நகைச்சுவை வெள்ளத்தில் தத்தளிக்கவைத்தார்.

நுரையீரல் தொற்று காரணமாக மேடையில் நடித்துக்கொண்டிருக்கும்போதே கீழே விழுந்தார். சிலமணிநேரங்களில் அவரது உயிர் பிரிந்தது. அவர் நடித்த கடைசி நாடகமான 'இமேஜினரி இன்வேலிடு' என்ற நாடகம் உள்ளிட்ட இன்னும் சில நாடகக் காட்சிகள்தான் இன்றைய கூகுள் டூடுளில் நாம் காண்பது.

1622, ஜனவரி 15 அன்று பிறந்த மாலியெர் 1673 பிப்ரவரி 17-ல் மறைந்தார். பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் ஒருநாளில் இந்த டூடுள் கொண்டாட்டம் அவரை மிகச்சரியாக நினைவுகூர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x