

பேருந்துக்காக மணிக் கணக்கில் காத்திருப்பது கொடுமை என்றால் அதைவிடக் கொடுமை நிறுத்தத்தில் இருந்து தள்ளி நிற்கும் பேருந்தை ஓடோடிச் சென்று பிடிப்பது.
பள்ளிக் குழந்தைகள், கைக்குழந்தையுடன் காத்திருக்கும் பெண்கள், வயதானவர்கள் என பாரபட்சமின்றி அனைவருக்குமே ஓடித் திரிந்து பேருந்தை பிடித்த கசப்பான அனுபவம் இருக்கும். அவர்களுக்கு எல்லாம் இந்த செய்தி ஒரு ஆறுதல்.
பேருந்துகளை அவற்றிற்கான நிறுத்தங்களில் இருந்து தள்ளி நிறுத்துவதாக, மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு பயணிகளிடம் தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து 100 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மாநகர் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களில் பயணிகளிடம் இத்தகைய புகார் தொடர்பான தகவல்களை சேகரிப்பர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: "பேருந்துகளை ஸ்டாப்பிங்கில் இருந்து தள்ளி நிறுத்துவதாக பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக, அண்ணா சாலை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பேருந்து நிலையம், ஜெனரல் பேட்டர்ஸ் சாலை பேருந்து நிலையம், நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மைய பேருந்து நிலையங்களில் இதுபோன்று அதிக அளவில் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே, கண்காணிப்புக் குழு அமைத்துள்ளோம். அவர்கள் அளிக்கும் தகவலின்படி சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
பேருந்துகளை ஸ்டாப்பிங்கில் ஓட்டுநர்கள் ஏன் நிறுத்துவதில்லை என்பது குறித்து பயணி வி.கே.ரங்கநாதன் கூறுகையில், "ஒரே நேரத்தில் வரிசையாக பேருந்துகள் வருவதாலேயே இது நடைபெறுகிறது. உதாரணத்திற்கு 2ஏ பேருந்து தொடர்ச்சியாக இரண்டு வந்தால் அதில் ஒன்று ஸ்டாப்பிங்கில் நிற்பதில்லை. இதனால், அந்த ஒரு பேருந்திலேயே அனைத்து பயணிகளும் ஏறி நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டியிருக்கிறது" என்றார்.
இதுகுறித்து எம்.டி.சி. ஓட்டுநர் கூறுகையில், "பேருந்துகளை நிறுத்த ஒதுக்கப்பட்டுள்ள 'பஸ் பே' பலவும் மிகவும் குறுகலாக இருக்கின்றன. இதனால் பேருந்துகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. பரபரப்பான சாலைகளில் இப்படி வரிசை கட்டி நின்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதனை தவிர்க்கவே நிறுத்தத்தில் இருந்து சற்று தள்ளி பேருந்தை நிறுத்துகிறோம்" என்று தன் தரப்பு வாதத்தை வைக்கிறார்.
இப்படி காரணங்கள் பல கூறினாலும், பேருந்துகளை தள்ளி நிறுத்துவதால் ஓடிச் சென்று ஏறும் பயணிகள் பல நேரங்களில் தங்கள் உயிரை பணயம் வைக்க வேண்டியிருக்கிறது.