Published : 07 Feb 2019 11:40 AM
Last Updated : 07 Feb 2019 11:40 AM

பெண்ணின் வெற்றி அவ்வளவு சுலபமானது அல்ல; தலைவணங்குகிறேன்: ஆனந்த் மஹிந்த்ரா

பெண்ணின் வெற்றி அவ்வளவு சுலபமானது அல்ல; தலைவணங்குகிறேன் என ட்வீட் செய்து பெண்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா.

மஹிந்த்ரா நிறுவனத்தின் நிறுவனத் தலைவரான ஆனந்த் மஹிந்த்ரா தனது ட்விட்டரில் பதிவிட்ட ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

அதில் அவர் "கடந்த வாரம் முழுவதும் எனது பேரப் பிள்ளையை கவனித்துக் கொள்வதில் உதவியாக இருந்தேன். அப்போதுதான் ஒரு ஆழமான உண்மையை உணர்ந்தேன்.

அது எனக்கு இந்த சித்திரத்தை கண்முன் கொண்டுவந்தது. வேலைக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணையும் வணங்குகிறேன். அவர்களது வெற்றிக்கு ஆண் சகாவைவிட மிக அதிகமான முயற்சி தேவைப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மஹிந்த்ரா பகிர்ந்திருந்த அந்தப் படத்தில், ஓர் ஓட்டப்பந்தய மைதானத்தில் வேலைக்குச் செல்லும் ஃபார்மல் உடையில் ஆண்களும் பெண்களும் ஓடுவதற்கு தயார் நிலையில் இருக்க ஆண்களுக்கான பாதை தடையின்றியும் பெண்களுக்கான பாதையில் உலர்த்தப்பட்ட துணிகள், டிஷ்வாஷ், வாஷிங் மெஷின், அயர்னிங் டேபிள் போன்ற உபகரணங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

வீட்டையும் பார்த்து வேலைக்கும் செல்லும் பெண்களுக்கு இலக்கை அடைவதற்கான சவாலும் முயற்சியும் அதிகம் என்பதை உணர்த்தும் வகையில் காட்சி வரையப்பட்டுள்ளது.

தங்கள் உணர்வுகளுக்கு உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் வகையில் ஆனந்த் மஹிந்த்ராவின் ட்வீட் அமைந்திருப்பதாகக் கூறி ட்விட்டரில் பெண்கள் கொண்டாடி வருகின்றனர்.

ட்விட்டர் சமூகவலைதளத்தில் மட்டும் 9.5 லட்சம் பேர் இவரை பின் தொடர்கிறார்கள். சமூக வலைதளத்தை உலகளவில் அதிகம் பயன்படுத்தும் சி.இ.ஒ.க்களில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x