Last Updated : 16 Feb, 2019 05:17 PM

 

Published : 16 Feb 2019 05:17 PM
Last Updated : 16 Feb 2019 05:17 PM

சண்டே: தூக்கம் தூக்கம் தூக்கமா?

சண்டேன்னாலே சந்தோஷம்தான். அஞ்சு மணிக்கு அலாரம் வச்சு அலாரத்துக்கு முன்னாடி எழுந்து வேலையை முடிச்சு, வேகவேகமா கிளம்பி, டிராஃபிக் நீந்திப் போனா.. ஆஃபீஸ்ல இருக்கிற பஞ்சிங் மிஷன் 2 நிமிஷம் லேட்டுனு பல் இளிக்கும்.  அதுக்கப்புறம் ஆஃபீஸர்ஸ்கிட்ட வாங்கிக் கட்டிக்கிறது தனிக்கதை. ஆனா சண்டே, இந்த கலாட்டா களேபரங்கள் இல்லாத அற்புதமான நாள். கதிரவனுக்கு முன்னாடி எந்திரிக்க வேணாம் (காலைல 10 மணிக்குதான் விடியும்). சண்டையேயில்லாம சண்டேவக் கொண்டாட ஆரம்பிப்போமே! 

சரி... சண்டேன்னா  என்ன செய்யணும்?

காலையில மறந்து போய் அலாரம் வெச்சாலும் 9 மணிக்கு குறைஞ்சு எந்திரிக்கக்கூடாது. சாவகாசமா எழுந்து ஃபில்டர் காஃபியை ( பாலும் நல்லால்ல.. காபித்தூளும் நல்லால்ல) ரசிச்சபடி  இன்னிக்கு என்ன செய்யலாம். குடும்பத்துல இருக்கிற நண்டுசிண்டுலேர்ந்து கேட்டுட்டு (அப்புறம் நாம்  ஏற்கெனவே முடிவு பண்ணதை செய்திட்டு அசடு வழிவோம்) கூட ஒரு அரைமணி நேரம்  பொழுதை கழிச்சு..  ஓடறது நீந்தறது.. நடக்கிறதுன்னு எல்லாத்தையும் வாங்கி விதவிதமா சமைக்கணும்னு முடிவு பண்ணி கடைசியா இதுல ஒண்ணை மட்டும் உடம்பு நோகாம பண்ணிட்டு  கிடைக்கிற மீதி நேரத்துலயும் கும்பகர்ணன் மாதிரி செலவழிச்சுட்டு..  ஐயையோ மணி 6 ஆச்சா.. இன்னிக்கு துணி துவைக்கணுமேன்னு பதறி வீட்ல இருக்கிறவங்களைக் குதறக் கூடாது.

நாள் முழுக்க  வேலை செய்யணுமா?

இல்ல. ஆனா முதல்ல சண்டேன்னா சும்மா இருக்கறதுது கிடையாதுங்கறதை மனசில வெச்சிக்கங்க. நிதானமா ஆனா நேரத்துக்கு சமைக்கலாம். கிணத்துல நீர் இறைச்சி துணிக்கல்லில வீரத்தைக் காண்பிக்கிற  நிலைமை  இன்னிக்கு இல்ல. இருக்கவே இருக்கு டாப் லோடு வாஷிங்மெஷின். மொத்த லோடையும் உள்ள  திணிச்சா திவ்யமா நறுமணமா வந்து விழுகுது. அதனால இதுலயும் டென்ஷனில்லை. முட்டி போட்டு கீழ உட்கார்ந்து காட்டன் துணியை நனைச்சு வீட்டை சுத்தம் பண்ணணும்னு அவசியமில்ல. குனியவே விடாம நம்ம உயரத்துக்கு மேல இருக்கிற குச்சியை இரண்டு பக்கமும் திருப்பினா வீடு பளபளன்னு மின்னுது. இயந்திரத்தின்  உதவியோடு இயன்றளவு வேலையை சுருக்கிக்கிட்டதால  வேலையும் சுருங்கிடுச்சுன்னு தான் சொல்லணும்.

என்ன செய்யலாம்?

நான் நறுக்கினாதான் காய் வெட்டுமா? நீங்க  வெட்டினாலும்வெட்டும்னு கணவன்கிட்ட மல்லுக்கு நிக்காதீங்க பெண்களே! காய் வாங்கிட்டு, அப்படியே உங்க ஃப்ரெண்ட்ஸ்ங்களையும் பாத்துட்டு வாங்கன்னு சொல்லுங்க. கூடவே அவங்க நீங்க வந்ததுக்கு அப்புறம்தான்  மதிய சமையல்னு சொல்லிடுங்க. அசைவப் பிரியரா இருந்தா அதை வாங்கறதையும்  அவர் தலையிலேயே கட்டிடுங்க.

வீட்டைப் பெருக்கும் போதே ஆங்காங்கே ஜன்னல், இண்டு இடுக்குல இருக்கும் தூசிகளை லேசாத் தட்டிவிடுங்க. ஜன்னல் ஸ்க்ரீனையும், படுக்கை  விரிப்புகளையும் 15 நாளைக்கு ஒருமுறை மிஷினில் போட்டு வெயிலில் காயவிடுங்க.  பருப்பு, புளி, மிளகாய்னு அப்பத்தா கொடுத்த அத்தனைப் பொருள்களையும்  வெயில்ல வையுங்க. அரைக்க வேண்டிய பொருள்கள் இருந்தால் அதையும் செய்துவிடுங்கள்.

குழந்தைங்களை டிவியை பாத்துக்கிட்டே மிக்ஸி, கிரைண்டரை துடைச்சிக் கொடுக்கச் சொல்லுங்க.  இப்படியே வாரத்துக்கு அரை மணி நேரம் மட்டும் ஒதுக்கி, ஒரு வாரம் ஜன்னல், கதவு.. ஒரு வாரம்... அவங்க  புக் செல்ஃப் , ஒரு வாரம் காலணி ஸ்டாண்டுன்னு அடுக்கச் சொல்லுங்க. கூடவே  இன்னிக்கு உங்களுக்குப் பிடிச்ச காலிஃப்ளவர் பக்கோடான்னு சொல்லிடுங்க.

ஃப்ரிட்ஜ்ல இருக்கிற காலாவதியான பொருள்களை எடுத்து வெளிய போடுங்க. காய்களை எடுத்து வைக்கறதுக்கு முன்னாடி  பழசுக்கு பை சொல்லுங்க. காய்கறிகளை வாரம் மொத்தத்துக்கு நறுக்கிவெக்காம அன்னிக்கி என்ன செய்யலாம்னு மட்டும் முடிவு செய்யுங்க. புளிக்குழம்பு, வத்தக்குழம்பு கூட  மாதத்துக்குன்னு இல்லாம வாரத்துக்கு தயார் செய்றது தான் சரி.

மக்கர்  செய்ற அடுப்பு, ஆபீஸ் போற அவசரத்துல இருக்கும் போது எத்தனை தடவை டார்ச்சர் கொடுத்திருக்கும். இதோ... சண்டேயும் அதுவுமா மறக்காம  சரி பண்ணுங்க. குழந்தைகளோட  சாக்ஸ், ஷூவை அவங்களே சுத்தம் செய்யப் பழக்குங்க.

இது எல்லாமே திட்டமிட்டு ஒவ்வொருவாரம் ஒரு வேலைன்னு ஒதுக்கி செய்தா ஒரு மணி நேர வேலைகள் தான்.

கண்டிப்பாக செய்யுங்க!

வீட்டில் எலக்ட்ரீஷியன் வேலை, ப்ளம்பர் வேலை ஏதேனும் இருந்தால் அன்றைய தினத்தில் (அன்றைக்குத்தான் பந்தா செய்வார்கள்)  கட்டாயம் முடித்துவிடுங்கள். ஏசி, ஃபேன், தண்ணீர்த்தொட்டியை வாரம் ஒன்று என்று சுத்தம் செய்யுங்கள். அலுங்காமல் குலுங்காமல் ஆஃபீஸ்க்கு போக ஆபத்பாந்தவனாக  இருக்கும் வாகனங்களைக் கொஞ்சம் கழுவி க்ளீன் பண்ணுங்களேன்!

முக்கியமா... அன்றைய நாளில், எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுங்களேன்.

குழந்தைகளுடன் அந்த வாரம் முழுக்க பள்ளியில் நடந்த கதைகளையும், உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.  வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களுக்கும் நேரம் ஒதுக்குங்கள். மதிய உணவுக்குப் பிறகு குட்டித்தூக்கம் போட்ட கையோடு டிவிக்கு பை சொல்லி குழந்தைகளுடன் கிரிக்கெட்டோ அல்லது கேரம் போர்டோ விளையாடுங்கள். பெரியவர்களும் இணைந்து விளையாடினால் சுவாரஸ்யம் கூடும்.

மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையாவது மாலை நேரங்களில் குடும்பத்துடன் வெளி யில் சென்று வாருங்கள். அது இன்னும் இன்னும் புத்துணர்ச்சியையும் குடும்பத்தில் இன்னும் இன்னும் அந்நியோன்யத்தையும் அள்ளி அள்ளித் தரும்! 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x