

நாடாளுமன்றத்தில் புதன்கிழமையன்று ராகுல் காந்தி ரஃபேல் ஒப்பந்தத்தில் நடந்த ஊழல்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.
ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவதத்தில் எனது கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் தனது விவதத்தை முன் வைத்தார்.
இதில் ரஃபேல் ஒப்பந்தத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு அனில் அம்பானிக்கு ஆதரவாகச் செயல்பட்டது குறித்து ராகுல் பேசும்போது, மக்களவை சபாநாயகர் சுமித்ர மகாஜன் ராகுல் காந்தியை இடைமறித்து, ”அனில் அம்பானி நாடாளுமன்ற உறுப்பினர் கிடையாது. இது நாடாளுமன்ற விதிமீறல்” என்று கூறினார்.
அதற்கு ராகுல், ”மேடம் அனில் அம்பானி பாஜகவின் உறுப்பினரா?” என்று கேட்க சுமித்ரா மகாஜன் ”இல்லை” என்றார், பிறகு அவரை நான் AA என்று குறிப்பிட்டுப் பேசுகிறேன் என்று சுமித்ரா மகாஜனுக்கு ராகுல் பதில் அளித்து விவாதத்தை தொடர்ந்தார்.
ராகுலின் இந்தப் பேச்சுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கரவொலி எழுப்பினர்.
ராகுல் விவாதித்த இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் குறித்து மக்களவையில், பிரதமர் மோடியை கடுமையாகச் சாடியுள்ள நிலையில், இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் 4 கேள்விகளை ராகுல் முன் வைத்துள்ளார்.