

கேரளத்தின் புகழ்பெற்ற பத்திரிகையாளர்களுள் ஒருவர் ஸ்வதேஸாபிமானி கே. ராமகிருஷ்ண பிள்ளை. 1878-ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நெய்யாற்றின் கரையில் பிறந்தவர். இளம் வயதிலிருந்தே நாளிதழ்களையும் பத்திரிகைகளையும் வாசிப்பதில் ஈடுபாடு கொண்டிருந்த அவர், கேரளா ‘தர்பணும்’ என்ற நாளிதழின் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார்.
சமூக அக்கறையும் ஊழல் எதிர்ப்பும் அவரது எழுத்தில் தீவிரமாக இடம்பெற்றன. தனது சொந்த வாழ்விலும் புரட்சிகரமான செயல்களை மேற்கொண்டார். கேரளத்தின் போற்றி குலத்தைச் சேர்ந்த அவர், நாயர் குடும்பத்துப் பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார்.
அந்தக் காலகட்டத்தில், வைக்கம் மவுல்வி என்று அழைக்கப்படும் அப்துல் காதர் மவுல்வி, ‘ஸ்வதேஸாபிமானி’ (தேசபக்தன்) என்ற நாளிதழை நடத்திவந்தார். 1906-ல் அந்த நாளிதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார் ராமகிருஷ்ண பிள்ளை. வைக்கத்தில் செயல்பட்ட அந்த நாளிதழ், 1907-ல் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது.
திருவிதாங்கூர் திவானாக இருந்த பி. ராஜகோபாலாச்சாரியைக் கடுமை யாக விமர்சனம் செய்து எழுதிவந்தார். “அரச வம்சத் தினர், கடவுளின் பிரதிநிதிகளாகத் தங்களைக் கருதிக் கொண்டு, மக்களையும் அவ்வாறே நம்பவைக்க முயல் கின்றனர்” என்று விமர்சித்தார். அவரது செயல்பாடு களால் கோபமடைந்த அரசு, 1910-ல் இதே நாளில் அவரைக் கைதுசெய்தது. அத்துடன் ஸ்வதேஸாபிமானி நாளிதழுக்கும் சீல் வைக்கப்பட்டது.
உச்சகட்டமாக, திருவிதாங்கூரில் நுழையத் தடைவிதிக்கப்பட்டு, திருநெல்வேலிக்கு நாடுகடத்தப்பட்டார். சில ஆண்டுகள் திருநெல்வேலியில் இருந்த அவர் பின்னர், சென்னையில் குடியேறினார். எனினும், அவர் தொடர்ந்து எழுதிவந்தார். காரல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றை மலையாளத்தில் எழுதினார். இந்திய மொழிகளிலேயே காரல் மார்க்ஸின் வாழ்க்கையைப் பற்றி முதலில் நூல் எழுதியவர் ராமகிருஷ்ண பிள்ளைதான்.