Last Updated : 05 Dec, 2018 04:23 PM

 

Published : 05 Dec 2018 04:23 PM
Last Updated : 05 Dec 2018 04:23 PM

புத்தருடன் ஒரு காலை நடை: 18 - மனித மனங்களின் விழிப்புணர்வு வழிகாட்டி

*** **** ****

மனிதன் :  ''என்னைப்  படைத்தவரைப்  பார்ப்பதில்  மகிழ்ச்சி!''

கடவுள்:     ''என்னை   உருவாக்கியவனைச்  சந்திப்பதில்  எனக்கும் மகிழ்ச்சி!''

*** *** *** ***

புத்தி புகட்டுபவர், அறிவுரை செய்பவர், உபதேசம் செய்பவர், போதனைகளைப் போதிப்பவர்... போன்ற எந்த அடைப்புக் குறிகளுக்குள்ளும் புத்தரை எவரும் அடக்கிவிட முடியாது. அவர், மனித மனங்களின் விழிப்புணர்வு (Awareness)வழிகாட்டி.   அவ்வளவுதான். புத்தர் சொன்ன உண்மைகளுக்கு சித்தாந்தம், தத்துவ மரபு என்கிற  பெயர்களைச் சூட்டி, மக்களுக்கு  மிக மிக அருகில் நெருக்கமாக இருந்தவரை... மக்களிடம் இருந்து தூரத்துக்கு கொண்டு சென்றுவிடக் கூடாது.

தன்னை ஒரு குரு என்று அவர் சொல்லிக் கொண்டதில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயமல்ல; தன்னை எவரும் குரு என்று சொல்லிவிடக் கூடாது என்பதில் அக்கறை கொண்டிருந்தார் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

எப்போதும் எல்லோரிடத்தும் புத்தர் சொல்லும் செய்தி என்னவெனில், ''உங்களின் உணர்வுகளுடைய ஆழத்தில் உங்களைப் பாருங்கள்'' என்பதுதான். சாதாரண நிலையில் மேலோட்டமான எண்ணங்கள், தகவல்கள், நடவடிக்கைகளில் உங்களை நீங்கள் அடையாளம் காண முடியாது. அப்படி காண முயற்சிப்பதும், அவ்வாறு அடையாளம் கண்டதாக ஏதோ ஒன்றை குறிப்பிட்டுக் காட்டுவதும் தவறான முடிவாகவே இருக்கும் என்றார் புத்தர்.

ஒரு மனிதனுக்கு ஒரே ஒரு வாழ்க்கைதான். அதாவது ஒரு பிறப்பு, ஒரு இறப்பு. அவ்வளவுதான் ஒரு மனிதனின் ஆதியும் அந்தமும். ஒரு முடிவுக்குப் பிறகு இன்னொரு தொடக்கம் என்பது மனிதனின் வாழ்வில் கிடையவே கிடையாது. மறு உலகம்,  இன்னொரு உலகம் என்பதெல்லாம் மாய நம்பிக்கை. தவறான மதிப்பீட்டின் பொய் கணிப்புகள். மனித வாழ்க்கைக்கு இரண்டாவது வால்யூம் (Second volume) இல்லை.

புத்தரின் அணுகுமுறை வித்தியாசமானது. இம்மை மறுமை இன்பம் என்கிற கருத்தாக்கத்தைக் கொண்ட ‘இகபரசுகம்’ (Happiness in this world and the next; earthly and heavenly bliss) என்பதை துளியும்  ஆதரிக்கவில்லை புத்தர். இகபரசுகம் என்பதை கற்பனா வாதம் என்கிற புத்தர் எப்படி அதனை ஆதரிப்பார்? 

இந்த உலகில் புனிதமானது என்றோ, இது புனிதமற்றது என்றோ எதுவுமில்லை என்ற புத்தர் சொன்னார்: ''நீங்கள் எதை புனிதமற்றது என்று கருதினீர்களோ, அதையே நீங்கள் உணர்வோடு வாழ்கிறபோது   புனிதமாகக் கருதுவீர்கள். நேற்று புனிதமாக இருந்தது இன்று இந்தக் கணத்தில் எப்படி புனிதமாக மாறியது என்று யோசியுங்கள். அப்போது புனிதம், புனிதமற்றது என்பதெல்லாம் உங்கள் மனம் எழுதும் விடையின் வெளிச்சம் என்பது புரியும்'' என்கிறார் புத்தர்.

*** **** ****

ஒரு  மனிதன் எந்த அளவுக்கு  உணர்வோடு இருக்கிறானோ... அந்த அளவுக்கு அவனது வாழ்க்கையிலும் தீவிரத் தன்மை இருக்கும். எந்தவொரு கருத்தையும், நடவடிக்கையையும் அவன் விளையாட்டுத்தனமாக, மேம்போக்காக கடந்து போக மாட்டான். முழுமையான உணர்வுதான் முழுமையான உண்மையாக வெளிப்படும் என்பதில் புத்தர் திடமான நம்பிக்கை  மிகுந்தவராக இருந்தார். அதனால்தான் அவர் மனித மனங்களில் விழிப்புணர்வு நிலைக்கு முக்கியத்துவம் அளித்தார்.

- இன்னும் நடப்போம்...

மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x