விமானத்தில் பயணித்த ஆசிரியரைக் கவுரவித்த விமானி; கண்ணீர் விட்ட ஆசிரியர்: நெகிழ்ச்சி சம்பவம்

விமானத்தில் பயணித்த ஆசிரியரைக் கவுரவித்த விமானி; கண்ணீர் விட்ட ஆசிரியர்: நெகிழ்ச்சி சம்பவம்
Updated on
1 min read

விமானத்தில் பயணித்த முன்னாள் ஆசிரியருக்கு இதயத்தை உருக்கும் வகையில் நன்றி சொல்லி, அவரிடம் படித்த விமானி கவுரவித்துள்ளார். இந்த நெகிழ்ச்சி சம்பவம் துருக்கியில் நடந்துள்ளது.

இதுதொடர்பாக துருக்கி பத்திரிகையாளர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், துருக்கி ஏர்லைன்ஸ் விமானி மித்தாட் ஓகன் ஒனான் விமானத்தை ஓட்ட எத்தனிக்கிறார். அப்போது யதேச்சையாக விமானத்தில் தனது ஆசிரியர் பயணிப்பதைக் கவனிக்கிறார். உடனே மைக்ரோஃபோன் மூலம் ஆசிரியருக்கு நன்றி சொல்கிறார்.

உணர்வுப்பூர்வமாக மித்தாட் பேசப் பேச, அதைக் கேட்கும் ஆசிரியரின் கண்கள் உணர்ச்சிப் பெருக்கில் குளமாகின்றன. அத்துடன் ஆசிரியரை நோக்கி வரும் விமானக் குழுவினர், அவருக்கு பொக்கே அளித்துப் பெருமைப்படுத்துகின்றனர். மரியாதையுடன் அவரின் கைகளில் முத்தமிடுகின்றனர்.

இறுதியாக விமானியும் ஆசிரியரிடம் வந்து ஆசி பெறுகிறார். இதயத்தை உருக்கும் இந்த சம்பவத்தைப் பார்த்த ஏராளமான சக பயணிகள், கண்ணீர் விட்டு நெகிழ்ந்தனர்.

வீடியோவைக் காண

கல்வியின் மூலம் ஒருவரின் வாழ்க்கையைச் செதுக்கும் ஆசிரியருக்கு இதைவிடச் சிறந்த கைமாறு ஒன்றை யாரும் செய்துவிட முடியாது என்று விமானியை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in