Last Updated : 28 Sep, 2014 12:37 PM

 

Published : 28 Sep 2014 12:37 PM
Last Updated : 28 Sep 2014 12:37 PM

பொற்காலத்தின் பொம்மைகள்

பால பருவத்தில் நவராத்திரி என்றாலே விசேஷம்தான். ஒன்பது நாள் விடுமுறைக் கொண்டாட்டமாயிற்றே! நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று விதவிதமாகக் கொலு அமைக்க வேலை பார்ப்பேன். மணல், மண் கலந்து பரப்பிக் கடுகு தூவி தண்ணீர் தெளித்தால் புல் புல்லாகச் செடிகள் துளிர் விடும். அந்தத் தோட்டத்தில் பினாகா பற்பசையுடன் இலவச இணைப்பாகக் கிடைக்கும் குரங்கு, புலி, கரடி, மான் பொம்மைகள் மற்றும் ரப்பர் பாம்பு, பூரான், தேள், பல்லி எல்லாம் சேர்ந்து வரிசையாக நடப்பட்ட தீக்குச்சி வேலிக்குள் அட்டகாசமான ‘ஆஃப்ரிக்கன் சஃபாரி’யாகச் சுதந்திரமாக உலா வரும். இந்த இயற்கைத் தோட்டத்திலேயே இன்னொரு தீக்குச்சி வேலி அடைப்புக்குள் மரச் சறுக்கு மரம், சீசாப் பலகை, ஊஞ்சல் ஆகியவை நிறைந்த விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் விளையாடுவார்கள்.

பளபள கோயில்

சரிவாக மண்மேடு அமைத்து உச்சியில் அருகருகே இரு குன்றுகளை உருவாக்கி அதன் ஒரு பக்கம் ஓடைக்கான குழிவுப் பாதை. உயரத்தில் திரைமறைவில் தகர வாளியிலிருந்து ரப்பர் குழாய் வழியாக ஓடையில் சலசலவென்று நீர். அதற்கு அருகிலேயே மலைப் பாதை. மனித பொம்மைகள் மேலேறும். உச்சிக் குன்றுகளுக்கு இடையில் காவிப் பட்டையும் வெள்ளைப் பட்டையும் அடிக்கப்பட்ட மதிலுடன் கூடிய பளபள கோயில்.

அடுத்த நாள் மாப்பிள்ளை காரைத் தூக்கிவிட்டு அங்கே பல்லக்கை வைத்து விட்டால் சுவாமி திருவீதி உலா. அதற்கும் அடுத்த நாள் பல்லக்குக்குப் பதிலாக வடம் பிடித்து இழுக்கும் மனிதர்களுடன் தேரை வைத்தால் தேர்த் திருவிழா. கலைடாஸ்கோப் காட்சிபோல் இந்த பொம்மைக் குழு தினம் தினம் உருமாறும்.

செட்டியார் பொம்மையும் செந்தேளும்

சின்ன வயதில் வறுமை. அதனால் வீட்டில் கொலு இல்லை. ஒவ்வொரு நவராத்திரியின் போதும் ஊரிலிருந்து பெரியம்மா பெண், சித்தி பெண் என்று யாராவது ஒரு டிக்கெட் ஆஜராகும். மாலையானவுடன் அந்த ‘அக்கா'வைச் சீவிச் சிங்காரித்து ‘போய் வெத்தலை பாக்கு வாங்கிட்டு வா...' என்று அனுப்புவார்கள். துணைக்கு, சாணளவு ஆண்களான நான், சித்தி பையன் ராஜூ, அத்தை பையன் சத்யா.

தெருவில் காலை வைக்கும்முன் எங்கள் கைகளில் ஆளுக்கொரு மஞ்சப்பை தொங்க விடப்படும். புதுத்தெரு, நடுத்தெரு, கடலங்குடி தெரு என்று ஒவ்வொரு தெருவாக, ஒவ்வொரு வீடாகச் சென்று, அப்போது பிரபலமான ‘புன்னகை மன்னன் பூ விழிக் கண்ணன் ருக்மணிக்காக' கொலுப் பாட்டைத் தேய் தேய் என்று தேய்த்துக் காகிதச் சுண்டல் பொட்டலங்களை மஞ்சப்பைகளில் சேகரித்து வருவோம்.

ஒரு நவராத்திரியின்போது மூன்று வயதுப் பெண் குழந்தை ஒன்றை அவ்வாறு மணையில் உட்கார வைத்து இந்தச் சடங்குகளையெல்லாம் செய்தார்கள். அதற்குச் சடங்குகளில் எல்லாம் பிரியம் இல்லை. கொலுவில் வைத்திருந்த செட்டியார் பொம்மை மீதே கண்ணாக இருந்தது. “மாமி இந்தப் பொம்மையை நானே வச்சிக்கவா?” என்று கேட்டுக்கொண்டே பொம்மையைக் கையில் எடுத்துவிட்டது. அந்த செட்டியார் பொம்மையின் அடிப்பாகத்தில் ஒற்றை ரூபாய் நாணயம் அளவுக்கு ஓட்டை. குழந்தை பொம்மையைக் கையில் எடுத்தவுடன் ஓட்டையிலிருந்து ஒரு ஜீவராசி தலை நீட்டியது. தொப்பென்று கீழே குதித்தது.

கொடுக்கை உயரத் தூக்கியபடி விரல் நீளத்துக்கு ஒரு செந்தேள். முன்னே பின்னே அந்தக் குழந்தை தேளைப் பார்த்ததில்லையாதலால், அதற்கு அந்தத் தேள் ஒரு காட்சிப் பொருளாகத் தோன்றியது. என்னவோ விளையாட்டுப் பொம்மை என்று தனது சின்ன உள்ளங்கையை அதன் மேல் வைக்கப் போக, சுற்றி நின்று பார்த்துப் பதைத்துக்கொண்டிருந்தவர்களெல்லாம் ‘ஐயோ' என்று அலற, தேளோ பரபரவென்று அங்கே இருந்த சரஸ்வதி பொம்மையைச் சுற்றிவிட்டு வாசலைத் தாண்டி தெருவில் இறங்கி ஓடி மறைந்தது.

“மஹா பெரியவா சொன்னார்ங்கறதுக்காக நாங்க இந்த மாதிரி செய்ய ஆரம்பிச்சோம். இப்பவும் அவர்தான் கொழந்தையையும் தேளையும் காப்பாத்தியிருக்கார்...” என்று அந்த வீட்டு மாமி குரல் தழுதழுக்கக் கூறிவிட்டுக் குழந்தையை வாரி அணைத்துக்கொண்ட காட்சியை மறக்க முடியுமா?

துக்கத்தை மாற்றிய கொலு

ஒவ்வொரு கொலுவுக்கும் அய்யம்பேட்டையில் ஒரு ஜமீன்தார் வீட்டின் கிரிக்கெட் மைதானம் போன்ற முன் கூடத்தில் படிகள் அமைத்து முழுக்க பொம்மைகளாக அடுக்கி வைத்திருப்பார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். கொலுவை வேடிக்கை பார்க்க வீட்டின் உள்ளே நுழைவதற்கு எங்களுக்குத் தைரியம் பத்தாது. அதனால் திண்ணையில் இருக்கும் ஜன்னல் வழியாகப் பத்துப் பதினைந்து பேர் முட்டி, மோதிக்கொண்டு வேடிக்கை பார்ப்போம். அங்கே நின்று வேடிக்கை பார்க்கும் ஐந்து, பத்து நிமிடங்களும் சொர்க்கம்!

அப்படி எதிர்பார்த்துதான் அந்த வருஷமும் திண்ணை ஏறினோம். ஜன்னல் வழியே தெரிந்த கூடம் வெறிச்சோடி இருந்தது. ஏமாற்றமென்றால் ஏமாற்றம் ஜமீன்தார் வெளியே வந்தார்.

“வளர்ந்த பையனைப் பறிகொடுத்துட்டு பரிதவிக்கிற வீட்ல கொலுவாவது இன்னொண்ணாவது. போங்கடா.. போங்க’’ என்று எங்களைப் பார்த்து தொண்டை அடைக்கக் கூறினார். எங்களில் ஒரு பையன் தைரியமாக அவர் முன்னால் சென்றான். “உங்க பையன் சாமிகிட்டத்தானே போயிருக்கான்? சாமி பொம்மைக்குப் பக்கத்திலேயே உங்க பையனோட பொம்மையையும் வெச்சுக் கொலு வைக்கலாம் இல்ல..?” என்று துடுக்குத்தனமாகக் கேட்டான். ஜமீன்தார் அவனை ஆழமாகப் பார்த்தார். சில விநாடிகள் தர்மசங்கடமான மவுனம். பின் அவரே மவுனத்தை உடைத்து, “அப்படியாடா… அப்ப நீங்க எல்லாம் நாளைக்கு வாங்க. தவறாம வரணும், என்ன?” என்றார்.

மறுநாள் ஜமீன்தார் வாசலிலேயே நின்றிருந்தார். எங்களைக் கைப்பிடித்து உள்ளே கூட்டிச் சென்றார். கூடத்தில் அமர்க்களமாகக் கொலு பொம்மைகள். கலர் கலராக சீரியல் பல்புகள் மின்னி மின்னி ஒளிர்ந்தன. அமர்க்களமான கொலு. படிகளின் நட்ட நடுவே, சாமி பொம்மைகளுக்கு இடையில் எங்கள் வயதொத்த ஒரு சிறுவனின் புகைப்படம் வைக்கப்பட்டு அதற்கு பொட்டு, மாலை அலங்காரம். எங்கள் எல்லோருக்கும் அன்றிரவு வயிறாரச் சாப்பாடு. அப்போது குஷியாக இருந்தது. இப்போது நெகிழ்வாக இருக்கிறது. மறக்க முடியுமா?

-சுபா, எழுத்தாளர், தொடர்புக்கு: dsuresh.subha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x