

நோயின் கோரமுகம்!
ஆயிரக் கணக்கானோரைக் கொன்றுகொண்டிருக்கும் எபோலா நோயின் கோரமுகம் வேறு வகையில் வெளிப்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்க நாடான கினியில் எபோலா நோய்க்கு மருத்துவம் அளிக்கும் குழுவினர் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. வெளிநாட்டு நிபுணர்களையும் அரசையும் நம்ப மறுக்கின்றனர் உள்ளூர் மக்கள். எபோலா நோயை வேண்டுமென்றே பரப்பி, சிகிச்சை என்ற பெயரில் உடல் பாகங்களைத் திருட வெளிநாட்டு நிபுணர்கள் முயல்வதாக அவர்கள் சந்தேகிக்கின்றனர். சமீபத்திய அதிர்ச்சி, மருத்துவக் குழுவைச் சேர்ந்த 8 பேர் கொலைசெய்யப்பட்டதுதான். இது தொடர்பாக 27 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். ஒரு பீதி இன்னொரு பீதியைக் கொண்டுவருமாம்!
ஸ்காட்லாந்துக்குப் புதிய பிரதமர்!
பிரிட்டனிலிருந்து பிரிந்துசெல்ல விரும்பவில்லை என்று, சமீபத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஸ்காட்லாந்து மக்கள் முடிவெடுத்துவிட்டதால் அதிர்ச்சியடைந்த ஸ்காட்லாந்து பிரதமர் அலெக்ஸ் சால்மண்ட், பதவிவிலகுவதாக அறிவித்தார். கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்தும் அவர் விலகுகிறார். இந்நிலையில், அவரது இடத்தை நிரப்பத் தயாராக இருப்பதாக, துணைப் பிரதமர் நிகோலா ஸ்டர்ஜியான் தெரிவித்திருக்கிறார். ஸ்காட்லாந்தின் ஏஞ்சலா மெர்க்கல் என்று அழைக்கப்படும் நிகோலாவே அடுத்த வாக்கெடுப்புக்கு இன்னும் சில காலத்துக்கு வாய்ப்பே இல்லை என்று கூறி 45 சதவீதத்தின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறார்.
சீனப் பெருந்தவறு
சிறுபான்மை இஸ்லாமிய உய்கர் சமூகத்தின் அறிஞர் இலாம் தோட்டிக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கிறது சீனாவின் ஜின்ஜியாங் நீதிமன்றம். பீஜிங்கில் உள்ள மின்சு பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை பேராசிரியராக அவர் பணியாற்றிவந்தார். சீன அரசின் கொள்கைகள் குறித்து விமர்சனம் செய்துவந்தார். பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர்மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவரது சொத்துகளையும் சீன அரசு பறிமுதல் செய்திருக்கிறது. உய்கர் சமூகத்தின் மீது சீனாவின் தொடர் அடக்குமுறைகளுக்கு மட்டுமல்ல, கருத்துச் சுதந்திரத்துக்குச் சீனா கொடுத்திருக்கும் இடத்துக்கும் மற்றுமொரு உதாரணமாகியிருக்கிறது இது. இந்நிகழ்வு ஒபாமா வரைக்குச் சென்றிருந்தாலும் அசைந்துகொடுப்பதாக இல்லை சீனா.
உண்டி கெடுத்தோர்
உணவுப் பொருள்களை முழுமையாகச் சாப்பிடாமல் குப்பைத் தொட்டியில் போட்டால் அபராதம் விதிக்க அமெரிக்காவின் சியாட்டில் நகராட்சி மன்றம் தீர்மானித்திருக்கிறது. உணவை வீணாக்குவது வீடுகள் என்றால், வீட்டுக்கு ஒரு டாலர் (சுமார் 60 ரூபாய்) அபராதம் விதிக்கப்படும். தொழில், வர்த்தக நிறுவனங்கள், அடுக்ககங்கள் என்றால் 50 டாலர். 2015 ஜனவரியிலிருந்து இதற்கான எச்சரிக்கை அந்த நகர மக்களுக்கு அளிக்கப்பட்டு, 2015 ஜூலை முதல் அபராதம் விதிப்பது நடைமுறைக்கு வரும். இந்த விஷயத்தில் சியாட்டிலுக்கு முன்னோடி சான் பிரான்சிஸ்கோதான். உலகின் உணவுத் தேவையையும் வறுமை நிலையையும் பற்றி அமெரிக்கர்களுக்கு எந்தவிதப் பிரக்ஞையும் இல்லாத சூழலில் இது உண்மையிலே அற்புதமான நடவடிக்கை. தங்கள் நாட்டு உணவுப் பொருள்களில் 40% வீணடிக்கும் அமெரிக்கா முழுவதும் இந்தச் சட்டத்தை விரிவுபடுத்தினால் நன்றாகத்தான் இருக்கும். ஆண்டுதோறும் மொத்த ஆப்பிரிக்க நாடுகளும் உற்பத்தி செய்யும் உணவுப் பொருளின் அளவையும் (23.4 கோடி டன்), அமெரிக்கா உள்ளிட்ட முன்னேறிய நாடுகள் வீணடிக்கும் உணவின் அளவையும் (22.2 கோடி டன்) ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும் எவ்வளவு அவசியமான சட்டம் இதுவென்று. வளர்ந்த நாடுகளுக்கு உணவின் அவசியம் தெரியாததுகூட பரவாயில்லை. இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் இதே நிலைதான். மாற்றத்தின் நாயகர் மோடிக்கே வெளிச்சம்!
குடியுரிமையின் பின்னணி!
ஆஸ்திரேலியாவில் குடியுரிமைக்காகக் காத்திருக்கும் 30,000 அகதிகளுக்கு நல்ல செய்தி! ஆம், அவர்களுக்குத் தற்காலிக விசா தர அரசு முடிவு செய்திருக்கிறது. பிரதமர் டோனி அபாட், அகதிகளிடம் கடுமையாக நடந்துகொள்வேன் என்று பிரச்சாரம் செய்துதான் ஆட்சிக்கு வந்தார். ஆனால், ஆஸ்திரேலியர்களின் பெரிய பண்ணைகளிலும் ஆலைகளி லும் குறைந்த கூலிக்கு வேலைசெய்ய ஆட்களுக்கு எங்கே போவார்கள்! எனவேதான் இந்த முடிவு. இந்த நடைமுறையை முன்னாள் பிரதமர் ஜான் ஹோவார்ட் 2008-ல் ரத்து செய்திருந்தார். தங்களுக்குத் தேவை என்றால் மட்டும் அகதிகள் ஞாபகம் ஆஸ்திரேலியர்களுக்கு வரும்போலும்!