புத்தருடன் ஒரு காலை நடை: 16- ஆன்மாவுக்கு எதிரானவர்

புத்தருடன் ஒரு காலை நடை: 16- ஆன்மாவுக்கு எதிரானவர்
Updated on
4 min read

புத்தர் ஒன்றும் கடவுள் கிடையாது!

புத்தர் உலகத்தில் பல பேர் நினைத்துக் கொண்டிருப்பது போல அவர் ஒன்றும் கடவுள் கிடையாது. இதை இங்கு நான் சொல்வதாக எடுத்துக்கொள்ளவே கூடாது. இப்படி  தன்னைத்தானே சொல்லிக்கொண்டவர் புத்தரேதான்.

தன்னை ஆற்றல்மிக்கதொரு கடவுள் என்று என்றைக்கும், எந்த இடத்திலும் சொல்லிக்கொண்டவரில்லை புத்தர். மற்ற எவரிடத்திலும் இல்லாதொரு சக்தி தன்னிடம் நிறைந்துள்ளதாக தனது எண்ணத்தாலோ, தனது செயலாலோ அடையாளப்படுத்திக் கொண்டவரில்லை.  என்னிடம் வாருங்கள் உங்களை நான் எனது வல்லமைமிக்க ஆற்றலால் உன்னதமானவர்களாக ஆக்குவேன் என்றெல்லாம்  சொல்லிக்கொண்டவர் இல்லை புத்தர். இன்னும் சொல்லப்போனால், தான் கடவுளுடைய தூதுவன் என்றோ; கடவுள் எனும் பரம்பொருளின் பிரதிநிதி என்றோ சொல்லிக்கொண்டு தனக்குத் தானே  ஒளி வட்டத்தை சுழற்றிக் கொண்டவரும் இல்லை. இத்தகைய சுய பிரகடனங்களைக் கடந்தவராக இருந்ததனால்தான் அற உலகமும் அறிவு உலகமும் கொண்டாடத்தக்கவராக புத்தரைக் கருதுகிறது. ஆம், புத்தரை மட்டுமே இவ்விதம் கருதுகிறது. இதுதான் புத்தருக்குரிய மாபெரும் சிறப்பாகும்.

தன்னுடைய வாழ்நாளின் நீண்ட பெரும்பாதைகளை  கால்நடையாகவே கடந்தவர் புத்தர். அப்படி அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவரை சந்திக்கும் மனிதர்கள் அவரைப் பார்த்து ‘மகான்’, ’கடவுளின் தூதர்,’ ‘இறைவனின் பிரதிநிதி’ என்றெல்லாம் சொல்வது உண்டு. அவர்களுக்கெல்லாம் ஒரு புன்னகையைப் பரிசளித்துவிட்டு அவர் அந்த இடத்தை விட்டு அகன்று சென்றுவிடுவது இல்லை.  அவ்வாறு தன்னைப் பார்த்து சொல்பவர்களிடத்தில்தான் அதிகமாக  உரையாடல் நிகழ்த்தினார்.  அவர்களிடத்தில் ‘பொதுவாகவே, ஆன்மிக உலகில்  கீழ்படிதல் என்கிற விஷயத் துக்கு மிகவும் முக்கியத்துவம் தருவார்கள். இதை சரணாகதித் தத்துவம், தன்னையே  ஒப்படைத்தல், தன்னை ஒப்புவித்தல் என்றெல்லாம் ஏதேதோ பெயரிட்டு அழைப்பார்கள். ஆனால், புத்தருக்கு கீழ்படிதல், சரணாகதி தத்துவம் போன்ற சக மனிதனை தனக்குக் கீழ் கொண்டுவரும் எந்தக் கருத்துருவாக்கத்தையும் துளியும் ஆதரிக்கவே இல்லை புத்தர். யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்பதில் தெளிவாக இருந்தார்.

புத்தர் வாழ்ந்த காலத்தில் சனாதனத்தை தலை மீது தூக்கி வைத்துக் கொண்டாடும் சனாதனிகள் எல்லா நாடுகளிலும் இருந்தனர். அவருடைய காலகட்டத்தில் அவரவர்களின் கருத்துருவாக்கத்தின் அடிப்படையில் எண்ணற்ற மதப் பிரிவுகளும் இருந்தன. அன்றைய மக்கள் நாடு சார்ந்து,  மொழி சார்ந்து, வகுப்பு சார்ந்து  தங்களுக்கான  ஆன்மிகத்தை தங்களுக்குள் உருவாக்கிக்கொண்டார்கள். இவை எல்லாமும் நம்பிக்கை சார்ந்த விஷயங்களாகவே இருந்தன. பாரம்பரிய சங்கிலித் தொடர்ச்சியாக இவை மனிதர்களின் மூளைக்குள் சுருட்டி உள்ளேற்றப்பட்டிருந்தன.

‘எவை எல்லாம் உங்களுக்குள் வெளிச்சமேற்றும் என்று நீங்கள் நம்பிக்கொண்டு வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்களோ, அவை அத்தனையும் இருட்டை முன்மொழியக் கூடியவையே. இருட்டை யாராவது வெளிச்சம் என்பார்களா?’ என்று கேள்விகளை விதைத்த புத்தர் எளிமையாகவே வாழ்ந்தார். எளிமைதான் என்னுடை செய்தி’ என்று சொல்லாமல் சொல்லி வாழ்ந்து காட்டினார்.

என்னுடைய கருத்துதான் உயர்வானது; அந்தக் கருத்துகளை எல்லோரும் பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்று என்றைக்கும் புத்தர்  சொல்லவே இல்லை.

*** *** ****

ஆன்மாவுக்கு எதிரானவர்!

ஆன்மா என்பதில் புத்தருக்கு துளியும் நம்பிக்கை இல்லை. தனது சிந்தனையின் எந்த இடத்திலும் ஆன்மாவுக்கு அவர் இடமளித்ததே கிடையாது. ஆன்மாவை நம்பவில்லை என்பதால், புத்தர் மறுபிறவி பற்றிய கருத்தாக்கத்துக்கும் எதிரானவராகவே இருந்தார். அதனால்தான் ஒருவருடைய மரணத்துக்குப் பிறகு வேறொருவரின் உடம்புக்குள் புகுந்துகொண்டு  அந்த ஆன்மா மறுபிறவி எடுக்கிறது என்பதை பொய் என்றார்.  அதைப்போலவே ஆன்மாவுக்கு அழிவே கிடையாது. அது தெய்வீகம் நிரம்பியது என்கிற கருத்துக்கும் முரண்பட்டவராகவே இருந்தார் புத்தர்.  ஒருவருடைய  மரணத்துக்குப் பிறகு அவருடைய உடல்தான் சடலமாகும். ஆனால், ஆன்மாவோ தனித்து வாழும் என்பதை அவர் அடியோடு மறுத்தார்.

*** ****

புத்தரின் வரலாறு!

கபிலவஸ்துவின் மண்ணுக்கு ஏற்ற வகையில்,  பழங்குடி இனத்தின் மாண்பைப் போற்றும் வகையில் ஒரு பெயரைக் கண்டுபிடித்துச் சொல்ல முடியை பிய்த்துக்கொண்டார்கள் 108 நித்திகர்களும். எந்த வகையான பெயரைச் சொல்லி... சுத்தோதனரை திருப்திப்படுத்துவது என்று தெரியாமால் அவர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

அவர்கள் குழப்பத்திலேயே தொடர்ந்து இருக்கட்டும், தாம் ஒரு பெயரைத் தெரிவு செய்வோம் என்று சுத்தோதனர் ஒரு பெயரைத் தெரிவு செய்தார்.  குழந்தை பிறந்து ஐந்தாவது நாள் ஊர் புகழக் கொண்டாடப்பட்ட பெயர் சூட்டும் விழாவில் அந்தப் பெயர் சூட்டப்பட்டது.  சுத்தோதனரால் தெரிவு செய்யப்பட்ட அந்தப் பெயர்,  சித்தார்த்தர் என்பதாகும். அத்துடன் அந்தப் பழங்குடிகளின் கவுதமர் என்கிற குடிபெயரையும் இணைத்து அவர் சித்தார்த்த கவுதமர் என்று  எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

கபிலவஸ்துவே மகிழ்ச்சியில் திளைத்திருந்த அந்நாட்களில் குழந்தை சித்தார்த்த கவுதமரைக் காண நாள்தோறும் விருந்தினர்களும், குடிமக்களும் வருவதும் போவதுமாக இருந்தனர். வீடு முழுக்க  விருந்தின் வாசனை. கூடம் முழுக்க அன்பின் நிழல் விரிப்பு.

நாட்கள் இப்படியாக மகிழ்வுடன் புத்தருடன் ஒரு காலை நடை : 15- தாவர சாவி உடலின் பாவங்கள் மூன்று, நாவின் பாவங்கள் நான்கு, உள்ளத்தின் பாவங்கள் மூன்று நகர்ந்துகொண்டிருக்கும் வேளையில்... சித்தார்த்தர் பிறந்து ஏழாவது நாள் அந்தத் துயரச் சம்பவம் நடந்தேறியது.

என்னவென்று எவராலும் சொல்லமுடியாத அளவுக்கு... சித் தார்த்தரின் தாய் மகாமாயாதேவியின் உடல்நலம்  பாதிக்கப்பட்டது. இயற்கை மருத்துவர்கள் அவரை குணப்படுத்த எல்லா வகையிலும் பெரிதும் முயற்சித்தனர். ஆனாலும் தான் இயற்கை எய்தப் போகிறோம் என்பது மகாமாயா தேவிக்கு தெரிந்துவிட்டது.

தன்னுடைய பெருவாழ்வு  முடிவை நோக்கி பயணிப்பதை உணர்ந்த மகாமாயா தேவி, தன் இனிய கணவர் சுத்தோதனரையும், தனது மூத்த தமக்கை பிரஜாபதியையும் தன்னருகே அழைத்துச் சொன்னார்:

‘’என் குழந்தை... என்னுடைய ஆசை மகன் தாயற்றவனாகப் போகிறான். என் குழந்தையின் எதிர்கால சாதனைகளைப் பார்ப்பதற்கு நான் உயிரோடு இருக்க மாட்டேனே என்கிற ஒரு கவலை மட்டும்தான் என்னை ஆட்டிப் படைக்கிறது. மற்றபடி, என் குழந்தை யாரும் கவனிப்பாரற்று வீதியில் விடப்படுவான் என்று நான் நினைக்கவில்லை. அருமை கணவரும் என் அருமை தமக்கையும் என் குழந்தையை... என் ஆசை புத்திரனை கண்ணுக்குள் வைத்து காத்தருள்வார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

அன்புத் தமக்கையே... என் மரணத்துக்குப் பிறகு நம் கணவர் சுத்தோதனருடன் இணைந்து என் புத்திரனைப் போற்றிப் பாதுகாப்பீர்கள். அந்தப் பெரும் நம்பிக்கையுடன் என் கண்களை நான் மூடுவேன்’’ என்றார் பிரஜாபதியைப் பார்த்து. அப்படி சொல்லிய மூன்றாவது நாள் மகாமாயா தேவி இயற்கை எய்தினார். கபில வஸ்துவை சோகம் சூழ்ந்தது.

'அன்புத் தமக்கையே உன்னிரு கரங்களில் என் இனிய குழந் தையை ஒப்படைக்கிறேன். என்னைவிட  அக்குழந்தைக்கு நிகரற்ற தாயாய் திகழ்வாய்'  என்கிற நம்பிக்கை மொழியுடன் கண் மூடிய, தனது தங்கையின் நம்பிக்கைக்கு நியாயம் கற்பிக்க வேண்டும் என்பதில் இறுதி வரையில் உறுதியாக இருந்தார் பிரஜாபதி.

தன்னுடைய தாயை மரணத்துக்குப் பரிசளித்துவிட்டு... அந்தக் குழந்தை தொட்டிலில் படுத்துறங்கியபோது, அந்தக் குழந்தை யின் வயது  7 நாட்கள்தான்.

பிரஜாபதியைக் கைப்பற்றிய நாளில் இருந்து... அவர் சுத்தோதனருக்கு நல்லதொரு இல்லாளாக இருந்தாரோ என்னவோ? ஆனால்,  தன் வயிற்றில் தான் ஈன்றெடுக்காத மகவாகவே அவர் சித்தார்த்தனைக் கருதினாள். கண் இமையைப் போல காத்தருளினார். பிரஜாபதியின் அன்பின் திருக்கரங்களில் சித்தார்த் தன் தொட்டில் நிலவானான். சித்தார்த்தன் வளர்ந்தான்.

இந்நிலையில் சுத்தோதனருக்கும் பிரஜாபதிக்கும் ஒரு ஆண் இருந்தது. அவன் பெயர் நந்தா. தன் உதிரத்தில் உதித்து, தனக்கென்றே பிறந்த தன் குழந்தையைவிட சித்தார்த்தனைப் போற்றி வளர்த்த தூய அன்னையானார் பிரஜாபதி. அன்புக்குச் சிறிதும் பஞ்சம் வைக்காத மூத்த அன்னையை தன்னைப் பெற்றெடுத்த தாயைவிட மேலாக நினைத்தான் சித்தார்த்தன்.

சித்தார்த்தனும் அவனது சகோதரன் நந்தாவும் அன்பில் திளைத்து நட்பில் கைகோத்து வளர்ந்துவந்த நிலையில்... சுத்தோதனரின்  சகோதரர் சுக்லோதனரின் புத்திரர்கள் மகா நா மன், அனுருத்தன் மற்றும் சுத்தோதனரின் மற்றொரு சகோதரரான அமிதோதனரின் மகன் ஆனந்தன், சுத்தோதனரின் சகோதரி அமிதையின் மகன் தேவதத்தன் ஆகியோரும் கபில வஸ்துவில் சித்தார்த்தனுடன்  சேர்ந்து வளர்ந்தனர்.     

அவர்கள் வாழ்வும் வளமும் மகிழ்வின் தேரோட்டமாக அமைந்திருந்தது. சித்தார்த்தருக்கு நான்கு வயது இருக்கும்போது, சாக்கியர் குல முதியோர்கள் எல்லோரும்  கூடினர். அவர்கள் சுத்தோதனரைச் சந்தித்து ‘’உங்கள் மகன் சித்தார்த்தனை, நமது பழங்குடி வழக்கப்படி, நம்முடைய கிராமத்துத் தேவதையான அப்யா ஆலயத்துச் சென்று வணங்கிவிட்டு வர வேண்டும்’’ என்று ஆலோசனை வழங்கினர். சாக்கியப் பழங்குடியைச் சேர்ந்த மூத்தோர் பேச்சுக்கு செவிசாய்த்த சுத்தோதனர், சித்தார்த்தனை அப்யா கோயிலுக்கு அழைத்துச் சென்றார். தனக்கென்று உணர்வுநிலையை அடையாத  குழந்தை சித்தார்த்தன், தந்தை அழைத்துச் சென்ற கோயிலுக்குச் சென்று வந்தார். அப்யா தெய்வத்தை  வணங்கினார்.

சித்தார்த்தனுக்கு  எட்டு வயதானபோது, அவருக்கு கல்வி புகட்ட வேண்டும் என்கிற ஆவல் பிறந்தது சுத்தோதனருக்கு. சித்தார்த்தனுக்குப் பெயர் சூட்ட சுத்தோதனர் நினைத்தபோது, சுத்தோதனரைத் தேடிவந்து... நாள், கிழமை, ராசிப்படியே குழந்தைக்குப் பெயர் சூட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்திய... அந்த எட்டு நித்திகர்களையே சித்தார்த்தனுக்கு கல்வி புகட்ட ஆசிரியர்களாக தேர்ந்தெடுத்தார் சுத்தோதனர்.

ஆம், அந்த எட்டு நித்திகர்கள்தான் சித்தார்த்த கவுதமரின் முதல் ஆசிரியர்கள் ஆவார்கள். அந்த எட்டு நித்திகர்களும் - தங்களுக்குத் தெரிந்த, தாங்கள்  அறிந்துவைத்துள்ள அனைத்து அறிவுக் கருத்துகளையும் சித்தார்த்தனுக்கு பயிற்றுவித்தனர்.  அந்த எட்டு நித்திகர்களிடம் சித்தார்த்தன் பெற்ற அறிவு மட்டுமே போதாது என்கிற எண்ணம் ஏற்பட்டது சுத்தோதனருக்கு. இன்னும் இன்னும் அறிவு நிலையில் உயர்ந்த இடத்தை தனது மகன் பெற வேண்டும் என்று பெற்ற மனம் பேராசைப்பட்டது.

எனவே சுத்தோதனர், அறிவின் உச்சநிலையை எட்டிப் பிடித்தவர் என்று தான் நம்பிய,  பெரும் கல்வியாளரான, பாலி மொழியின் பாண்டித்யம் பெற்றவருமான சப்பமித்தரை தனது இல்லத்துக்கு வரவழைத்தார். சுத்தோதனர் தன்னுடைய புத்திரன் சித்தார்த்தனை கல்வி கற்க  சப்பமித்தரரிடம் ஒப்படைத்தார்.

- இன்னும் நடப்போம்...

மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in