செவித்திறன் பாதிக்கப்பட்டவர் பட்டப் படிப்பு படிக்க முடியுமா?

செவித்திறன் பாதிக்கப்பட்டவர் பட்டப் படிப்பு படிக்க முடியுமா?
Updated on
1 min read

பார்வையற்றவர்கள், செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறன் மாணவர்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்து மாற்றுத் திறனாளிகள் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், வாசிப்பாளர் உதவித் தொகை பெறுவதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை? இந்த உதவித் தொகையைப் பெற எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

பார்வையற்ற மாற்றுத் திறன் மாணவர்கள், வாசிப்பாளருக்கான உதவித் தொகையைப் பெற அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவன முதல்வரின் சான்று, தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, முந்தைய ஆண்டுத் தேர்வின் மதிப்பெண் பட்டியல் நகல்கள் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

வழக்கமான உதவித் தொகை தவிர, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் வாசிப்பாளர்களுக்கு தேர்வு எழுதுவதற்கென பிரத்தியேகமாக உதவித் தொகை ஏதேனும் வழங்கப்படுகிறதா?

வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகள் வாய் மூலம் அளிக்கும் பதிலுக்கு உதவியாளர்கள் தேர்வு எழுதுவர். அவர்களுக்கு தேர்வுத்தாள் ஒன்றுக்கு ரூ.50 வீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையைப் பெற சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.

செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவி அளிக்கப்படுகிறதா?

பிறவியிலேயே செவித்திறன் பாதிக்கப்பட்டவர்கள் பேச இயலாது. இதுபோன்ற மாற்றுதிறன் கொண்ட சிறுவர், சிறுமிகளுக்கு இலவச விடுதி, உணவு வசதியுடன் கூடிய முன்பருவக் கல்வி அளிக்கப்படுகிறது. 3 முதல் 5 வயது வரையிலான சிறுவர், சிறுமிகள் இதற்குத் தகுதியுடையவர்கள் ஆவர். இதற்கான விண்ணப்பத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும். தவிர, அனைத்து விதமான அரசு உதவிகளையும் பெறுவதற்கு அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் பட்டப்படிப்பு படிக்க முடியுமா?

செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநிலக் கல்லூரியில் 2007-08ம் கல்வியாண்டில் பி.காம்., பி.சி.ஏ. பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டன. பட்டப்படிப்பு படிக்க விரும்பும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறன் மாணவ, மாணவிகள் அங்கு படிக்கலாம்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in