கலப்பு திருமணம் செய்வோர் அரசின் நிதியுதவி பெறுவது எப்படி?

கலப்பு திருமணம் செய்வோர் அரசின் நிதியுதவி பெறுவது எப்படி?
Updated on
1 min read

மதம், ஜாதி மாறி திருமணம் செய்துகொள்வோர் மற்றும் மறுமணம் செய்துகொள்ளும் விதவைப் பெண்களுக்கு அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

மதம், ஜாதி மாறி கலப்புத் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறதா?

ஆம், கலப்புத் திருமண நிதியுதவி திட்டம் உள்ளது. திட்டம்-1, திட்டம்-2 என இரு வகைகளில் நிதியுதவி வழங்கப்படுகிறது. திட்டம் 1-ல் ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதில் ரூ.15 ஆயிரம் காசோலையாகவும், மீதமுள்ள ரூ.10 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படுகிறது. மேலும், 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ல் ரூ.50 ஆயிரம், 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. அதில் ரூ.30 ஆயிரம் காசோலையாகவும், ரூ.20 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும். திட்டம் 2-ல் பயன்பெற பட்டம், பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

கலப்பு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன்பெற நிபந்தனை என்ன?

இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற திருமணமாகி 2 ஆண்டுகளுக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும். வருமான, வயது உச்சவரம்பு எதுவும் இல்லை. திருமணத்தின்போது 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். திருமணப் பத்திரிக்கை அல்லது திருமண பதிவுச் சான்று, மணமகள் மற்றும் மணமகன் ஜாதிச் சான்று, வயதுச் சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும். இந்நிதியுதவி மணமகள், மணமகனிடம் நேரடியாக வழங்கப்படும். அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலரை அணுக வேண்டும்.

விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறதா?

ஆம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொண்டால் ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.10 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாகவும், ரூ.5 ஆயிரம் காசோலையாகவும் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற நிபந்தனைகள் என்ன?

வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை. திருமணம் முடிந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். திருமணத்தின்போது குறைந்தபட்ச வயது 20 ஆகவும், மணமகனின் வயது 40-க்குள்ளும் இருக்க வேண்டும். விதவைச் சான்று, மறுமண பத்திரிக்கை ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும். அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலரை அணுகலாம்.

( மீண்டும் நாளை சந்திப்போம்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in