Published : 01 Oct 2018 11:03 AM
Last Updated : 01 Oct 2018 11:03 AM

கூகுள் கொண்டாடும் அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர்

அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர் ஜி.வெங்கடசாமி பிறந்து நூறாண்டுகள் ஆனதை ஒட்டி, கூகுள் அவரின் ஓவியத்தை டூடுள் வடிவத்தில் வெளியிட்டுக் கொண்டாடுகிறது.

இந்த டூடுள் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் தெரியும்.

ஏழைகளுக்கு இலவச காட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்வதில் புகழ்பெற்றவர் மருத்துவர் வெங்கடசாமி. இவர் எட்டையபுரம் அருகே உள்ள வடமலாபுரத்தில் விவசாயக் குடும்பத்தில் 1918-ம் ஆண்டு பிறந்தார். ஊரில் சரியான மருத்துவ வசதி இல்லாததால் நள்ளிரவில் அக்கம் பக்கத்து வீடுகளில் திடீர் திடீர் என்று இளம் தாய்மார்கள் பிரசவ நேரத்தில் எழுப்பும் மரண ஓலம் சிறுவனாக இருந்த அவரை உலுக்கி எடுத்தது. அதனாலேயே மகப்பேறு மருத்துவர் ஆனார். ராணுவத்தில் சிறப்பாகப் பணியாற்றினார்.

இடையில் முடக்குவாதம் தாக்கியதால், அவரது கைவிரல்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் கண் மருத்துவம் பயில முடிவு செய்தார். கண் மருத்துவத்தில் முதுகலை டிப்ளமோ மற்றும் எம்.எஸ். பட்டமும் பெற்றார். தானாகவே பிரத்யேகப் பயிற்சிகளை மேற்கொண்டு, திருகிக் கொண்டிருந்த விரல்களுக்குக் கடுமையான பயிற்சியளித்து, கண் அறுவை சிகிச்சை நுட்பங்களில் தன்னை மேம்படுத்திக் கொண்டார்.

வாழ்நாளில் ஒரு லட்சம் கண் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். பணி ஓய்வு பெற்ற பிறகு தன் ஆன்மிக குரு ஸ்ரீ அரவிந்தரின் பெயரில் 'அரவிந்த் ஐ கிளினி'க் என்ற 11 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையைத் தொடங்கினார். ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தார்.

தற்போது அரவிந்த் மருத்துவமனைகளில் ஆண்டுதோறும் 40 லட்சம் கண் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். ஆறு லட்சம் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. உலகில் தயாராகும் உள்விழி லென்ஸில் சுமார் 10 சதவீதத்தை ‘அரவிந்த் ஆரோ லேப்’ உற்பத்தி செய்கிறது. தினமும் பத்தாயிரத்துக்கும் அதிகமான நோயாளிகள் அரவிந்த் மருத்துவமனைகளைத் தேடி வருகின்றனர். உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை நியாயமான கட்டணத்திலும், இயலாதவர்களுக்குக் கட்டணமின்றியும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x