Last Updated : 18 Jul, 2018 10:05 AM

 

Published : 18 Jul 2018 10:05 AM
Last Updated : 18 Jul 2018 10:05 AM

2 மினிட்ஸ் ஒன்லி 02: செகண்ட் லுக்!

இப்போது எல்லாம் சாதாரணமாவே நாம இயந்திர வாழ்க்கைக்கு பழக ஆரம்பிச்சிட்டதாத்தான் தோணுது. திருவான்மியூர்ல இருக்கும் வீட்டில் இருந்து கிளம்பி பரபரப்போடு நுங்கம்பாக்கத்தில் இருக்குற ஆபீஸுக்குப் போறோம். இ்டையில் அடையார் மலர் ஆஸ்பத்திரி பாலத்துக்குக் கிழே பைக்ல போய்க்கிட்டிருந்த ஒருத்தருக்கு திடீர்னு விபத்து நடந்துடுது.

அந்த நேரத்துல கையில கட்டியிருக்குற வாட்ச்சை பார்த் துட்டு, ‘அச்சச்சோ ஆபீஸுக்கு நேரமாயிடுச்சே!’ன்னுதான் நினைக்கத் தோணுதே தவிர ‘கீழே விழுந்தவருக்கு என்ன ஆச்சோ! நம்ம வண்டியில இருக்குற வாட்டர் பாட்டிலை எடுத்து தண்ணி கொடுக்கலாமா? எந்த இடத்துல அடி பட்டுருக்குன்னு பார்த்து துடைச்சி விடலாமான்னு பதறி அடிச்சுக்கிட்டு ஓடி வர்றவங்களோட எண்ணிக்கைக் குறைய ஆரம்பிச்சுடுச்சு.

சரி, காலையில ஆபீஸ் போகும்போதுதான் அந்த மாதிரி விட்டுடுறோம். வீட்டுக்குத் திரும் பும்போதாவது உதவி செய்ற மனநிலை இருக்கான்னா… பயங்கர அசதியில் அப்படி ஒரு எண்ணம் வர்றதே இல்லை.

பைக், கார்ல போகுறப்போதான் இப்படி? பஸ்ல போகும்போது நமக்கு பிடிச்ச பாட்டுங்க, யூடியூப்ல நமக்கு பிடிச்ச வீடியோன்னு இயர் போனை எடுத்து காதுல மாட்டிக்கிட்டு பார்க்கவும், கேட்கவும் ஆரம்பிச் சுடுறோமே ஒழிய, பக்கத்துல இருக்குறவங்கக்கிட்ட 2 நிமிஷம் செலவிடுற பழக்கம் ஓய்ஞ்சு போச்சுன்னே நினைக்கிறேன்.

90-களில் வளர்ந்தவன்

90-கள்ல வளர்ந்ததாலேயோ என்னவோ என்னால அப்படி எல்லாம் யார்கிட்டயும் பேசாம, ஏதாவது ஒண்ணுன்னா அதை கண்டுக்காம இருக்குறதெல்லாம் முடியாமப் போச்சு.

ரெண்டு வருஷங்களுக்கு முன்ன என்னோட தங்கை 12-ம் வகுப்பு படிச்சிட்டிருந்தா. தம்பி அப்போ 10-ம் வகுப்பு படிச்சான். அது மே மாதம். பள்ளி திறக்க இன்னும் 10 நாட்கள் இருந்தது. தங்கச்சிக்கு 12-ம் வகுப்புக்கான புத்தகங்கள் வாங்குறதுக்காக நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்துல இருக்குற பாடநூல் கழக ஆபீஸுக்குப் போனேன். குறைஞ்சது நாற்பதிலேருந்து அம்பது பேருங்க வரிசையில நின்னுக்கிட்டிருந்தோம்.

கவுன்ட்டர்ல என்ட்ரி போட்டு புக்ஸ் கொடுக்குற ஆபீஸர்கிட்ட வரிசையில நிக்கிற ஒரு அக்கா வாக்குவாதம் செய்து கிட்டிருந்தாங்க. ‘என்னடா இது? எவ்ளோ நேரம் நிக்குறது’ன்னு அந்த அக்காகிட்ட போய், ‘என்னக்கா பிரச்சினை?’ன்னு கேட்டேன். ‘பையனுக்கு புக்ஸ் வாங்கிட்டேன் தம்பி. பொண்ணுக்கு இன்னும் வாங்கல. கையில சில்லறையா இருக்குற இந்த 140 ரூபா காசை கவுன்ட்டர்ல கொடுத்தேன். ‘இந்த சில்லறை காசை எண்ணிக்கிட்டிருந்தா மத்தவங்களுக்கு எப்போ புக்ஸ் கொடுக்குறது!’ன்னு சொல்லி வாங்க மாட்டேங்குறாங்க?’ன்னு அந்த அக்கா தன் கையில இருந்த காசு கவரை காட்டினாங்க.

‘சரி.. சரி விடுங்க. நான் அந்த பணத்தை தர்றேன்!’னு சொல்லிட்டு 140 ரூபா பணமா கொடுத்தேன். பணத்தை வாங்கி மகளுக்கு புக்ஸ் வாங்கினவங்க கையில இருந்த அந்த சில்லறை கவரை கொடுக்க வந்தாங்க. ‘இல்லக்கா வேணாம். என்னோட இன்னொரு தங்கச்சிக்கு புக்ஸ் வாங்கிக் கொடுத்ததா இருக்கட் டுமே’ன்னு சொல்லிட்டு அங்கே இருந்து கிளம்பிட்டேன்.

கலங்கி நின்றேன்

நாட்கள் ஓடுச்சு. அதே வருஷம், டிசம்பர் 31. அன்னைக்கு இரவு கோயம்புத்தூர்ல புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி யில கலந்துக்க வேண்டியிருந்தது. அந்த ஷோ-வுக்கு ஏற்கெனவே பணமும் வாங்கிட்டேன். ஃப்ரெண்ட்கிட்ட சொல்லி கோயம்புத்தூருக்கு இன்டர்சிட்டி ரயில்ல டிக்கெட் போட்டுட்டு, சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு போனேன்.

ரயில்ல ஏறி சீட்டை செக் பண்ணி பார்த்தா, அந்த நேரத்துல கோயம்புத்தூர்ல இருந்து சென்னை வர்ற இன்டர்சிட்டியில டிக்கெட்டை மாத்தி புக் பண்ணின விஷயம் தெரிய வந்தது. பயங்கர ஷாக். ஷோவுக்கான பணமும் என் அக்கவுண்ட்ல கிரெடிட் ஆயி டுச்சு. பெரிய தொகை. உடனே திரும் பவும் கொடுக்க முடியாத சூழல். என்ன செய்றதுன்னே தெரியாம படபடப்பும், ஆத்திரமுமா ரயில் படிக்கட்டுல நின் னுக்கிட்டிருந்தேன்.

அந்த நேரம், பின்னாடி தோள்பட்டையில யாரோ ஒருத்தர் கை வைத்து, ‘தம்பி என்னை தெரியுதா?’ன்னாங்க. நான் இருந்த டென்ஷன்ல, ‘இல்லீங்களே... தெரியலையே?’னு கோபமா சொன்னேன். அவங்களும் விடாம, ‘ஞாபகம் இல்லையா தம்பி? டிபிஐ ஆபீஸ்ல என்னோட பொண்ணுக்கு புக்ஸ் வாங்கி கொடுத்தீங்களே. சில்லறை காசா கொண்டு வந்திருந்தேனே… தம்பி!’ன்னு சொன்னாங்க. ‘அதுக்கு என்னங்க இப்போ? நானே டிரெயின் டிக்கெட்டை தப்பா புக் பண்ணிட்டு, டென் ஷன்ல நிக்கிறேன்’னு இன்னும் கோபமானேன்.

கொஞ்சம் கூட அதை பெருசா எடுத்துக்காம, ‘இப்போ நீங்க எங்க போகணும்?’னு கேட்டுட்டு, ‘ஒரு 15 நிமிஷம் இங்கேயே நில்லுங்க. ஓடி வந்துடுறேன்’னு சொல்லிட்டு திரும்பி வரும்போது செகண்ட் கிளாஸ் ஏ.சி-யில சென்னை டு கோயம்புத்தூருக்கு ஒரு டிக்கெட்டோட வந்தாங்க. எனக்கு பயங்கர ஆச்சர்யம்.

அந்த அக்கா ரயில்வே ஸ்டேஷன்ல ஸ்வீப்பரா இருக் காங்க. அந்த டிக்கெட்டை என் கையில வாங்குறப்போ கண்ணுல இருந்து தண்ணி வெளியில வர்றதுக்கு ஒரு ஸ்டெப் முன்னாடி என்ன மனநிலையில இருப்போமோ அந்த மாதிரி இருந்தேன்.

நல்லது செய்தா என்னைக்காவது ஒரு ரூபத்துல திரும்ப கிடைக்கும்னு படிச்சிருப்போம். அப்புறம் ‘கர்மா’னு சொல்வோம். பூர்வ ஜென்ம புண்ணியம்னு சொல்வோம். அதெல்லாம் அப்போ வரைக்கும் உணராத நான், அந்த டிக்கெட்டை வாங்கின அந்த நொடியில உணர்ந்தேன்.

யாரோ ஒருத்தர் கவுன்ட்டர்ல சண்டை போட்டுக்கிட்டிருக்காங்க. யாரோ ஒருத் தருக்கு புக்ஸ் வாங்க முடியல. அதனால நமக்கு என்ன இப்போன்னு இருந்துடாம நம்மால என்ன செய்ய முடியும்னு இறங்கி செய்ததுக்கு திரும்ப நடந்த விஷயம் ரொம்ப ரொம்ப பெருசு.

ஏதாவது நல்லது செய்தா எப்பவா வது அதுக்கு பலன் திரும்ப கிடைக்கும்னு இல்லாம, நல்லது செய்றதை சுயநல மாவே எடுத்துக்கிட்டு செய்யுங்கன்னு ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்வேன். அதே மாதிரி நல்லது செய்றதை பொது நலத் துலக்கூட சேர்க்க வேணாம்னும் சொல்வேன். ஆனா நாம செய்ற நல்லதுக்கு நிச்சயம் திரும்ப பலன் கிடைக்கும்.

எந்த ஒரு நல்லது நடக்குறதுக்கும் முதல் தொடக்கமே மற்ற மனுஷனைத் திரும்பி பார்க்குறதுதான். நம்ம போகுற பாதையில நிறைய பேர் கடந்து போவாங்க. அவங்க மேல ரெண்டாவது லுக் கொடுக்க மாட்டோம். ஆனா அதைத்தான் செய்யணும். சினிமாவுல பர்ஸ்ட் லுக் போஸ்டர்னு சொல்வோம். ஆனா வாழ்க்கையில ரொம்ப முக்கியம் அடுத்த மனுஷங்க மேல செலுத்துற செகண்ட் லுக். அதுதான் இங்கே பல நல்ல விஷயங்களுக்கு விதையா இருக்கும்.

முடிவா, நான் சந்தித்த அந்த அக்கா யார்? அவங்க போட்டோ இருக்கான்னுதானே நீங்க கேட்குறீங்க. அதை அடுத்த வாரம் சொல்றேன்.

- நிமிடங்கள் ஓடும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x