

இன்று உலக புத்தக தினம். எல்லா வேறுபாடுகளையும் கடந்த ஒரு திருநாளாக புத்தக தினம் பிறக்கிறது. உலக வாசகர்களின் பிறந்த நாள் இது. பெரிய பெரிய படங்களைக் கொண்ட பல வண்ண புத்தகத்தை ஒய்யாரமாகக் கொண்டாடிப் படித்துக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறுமியும், முகத்தருகே புத்தகத்தை வைத்துக் கண்களை இடுக்கியவாறு படித்துப் பெருமிதம் கொள்ளும் மூத்த குடிமகனும் ஒரு சேர பூரிப்பு கொள்ளும் அற்புத தினம் அல்லவா இந்த நாள்!
திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டாலும் என்னைக் கிறங்கடிக்கும் செய்தியாக இருப்பது, ஸ்பெயின் தேசத்தின் கேட்டலோனியா நகரத்தில் இந்த நாளைக் காதலர் தினம் போலக் கொண்டாடும் விதம்தான்! ஆடவர்கள் தமது மனம் கவர்ந்த நங்கையர்க்கு ரோஜா மலர்களைப் பரிசாக அளித்து மகிழ்வார்களாம். பதிலுக்கு, அந்தப் பெண்கள் புத்தகங்களை வழங்குவார்களாம். இந்த நாளில் 4 மில்லியன் மலர்களும், 8 லட்சம் நூல்களும் கை மாறும் என்று தெரி விக்கிறது இணையதள குறிப்பு ஒன்று. ஆண்டு முழுவதும் நடக்கும் புத்தக விற்பனையில் சரிபாதி இந்த ஒரு நாளில் விற்றுவிடுமாம்.
அவரவர் கற்பனைக்கு ஏற்ப, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் முன்பின்னாகக் கூடக் காட்சிகளை இயக்கும் திரையரங்கமாக இருக்கிறது ஒரு புத்தகம். ஒளியுமிழும் அதன் திரைச்சீலை, படத்தைப் பார்ப்பவர் ஏரிக்கரையில் அமர்ந்தாலும், பயணத்தின் ஊடே வருகை புரிந்தாலும், சமையல் அறை வேலைகளின் இடைவெளியில் எட்டிப் பார்த்தாலும் அதே மதிப்போடும், பொறுப்போடும் தனது திரையிடலை அன்போடு நிகழ்த்துகிறது. பழைய படங்களின் புதிய காப்பிக்காக ஏங்காத வாசகர் உண்டா! எத்தனை எத்தனை கிளர்ச்சியை உருவாக்குகிறது இந்த வாசிப்பு!
இந்த ஏப்ரல் 14, அம்பேத்கர் பிறந்த நாள் அன்று, வாசிப்பு குறித்த எனது அனுபவங்களை எல்லாம் புரட்டிப் போட்டாள் ஓர் ஒன்பது வயது சிறுமி. திருவான்மியூர் பனுவல் அமைப்பின் சமூக நீதி மாத நிகழ்வுகளில் அன்று பீமாயணா என்ற படக் கதை வடிவிலான அம்பேத்கர் வரலாறு புத்தகத்தை அறிமுகப் படுத்திப் பேசிய அந்தக் குழந்தையின் பெயர் சைதன்யா. கையில் எந்தக் குறிப்பும் அற்று, ஒரு பிசிறு இல்லாமல், சுமார் இருபது நிமிடங்கள்போல அத்தியாயம் அத்தியாயமாக அவள், அம்பேத்கரின் ஆளுமை குறித்து தான் அடைந்த வியப்பின் பிரதிபலிப்பை எடுத்து உரையாற்றிய விதம் பார்வையாளரை அசத்தியது. வண்டிக்காரர் இளக்காரமாகப் பார்த்தார் என்ற வாக்கியமும், பின்னர் வேறு ஒரு விஷயத்தைச் சொல்கையில், அதிலும் அம்பேத்கருக்கு ஒரு நன்மை இருந்தது. தீண்டாமை குறித்துப் புரிந்து கொள்ளவும் போராடவும் அவருக்கு அது உதவியது என்ற சொல்லாடலும் நுட்பமாக இருக்கும் அவரது வாசிப்பை உணர்த்தியது. ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ திரைப்படத்தில் நடித்திருக்கும் இந்தச் சுட்டிப் பெண், ஏற்கெனவே எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களது குழந்தைகளுக்கான கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விருது வாங்கி இருப்பவர். வலைப்பூவில், கவிதைகளை எழுதித் தள்ளுபவர். இந்தக் குட்டிப் பெண் தான், இணையதள சாட்டில் பதில் போடத் தவறியபோது என்னை இறந்து விட்டீர்களா என்று கேட்ட தேவதை.
வாசிப்பு இறக்காதவரை மனிதர்கள் பெரு வாழ்வு வாழ்வார்கள் என்றே தோன்று கிறது. வில்லியம் ஷேக்ஸ்பியரின் நினைவு நாளான பிறந்த இந்த நாள், உண்மை யில் வாசகர்களின் பிறந்த நாள்! உலகம் முழுக்க பிறந்த நாள் கொண்டாடும் வாசகர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.