Last Updated : 25 Jul, 2018 08:42 AM

 

Published : 25 Jul 2018 08:42 AM
Last Updated : 25 Jul 2018 08:42 AM

2 மினிட்ஸ் ஒன்லி 03: அன்பால் ஆன வேலி

ரயில்வே ஸ்டேஷன்ல நான் சந்தித்த அந்த அக்கா யார்?

அவங்க புகைப்படத்தை நீங்க பார்க்க முடியுமாங்கிற கேள்வியோட போன வாரம் முடித்திருந்தேன். அந்த ஒரு அக்கான்னு இல்ல. இந்தத் தொடர்ல இன்னும் நாம பார்க்கப்போகிற வெவ்வேறு மனிதர்கள் யாரோட முகத்தையும் நீங்க பார்க்கப் போறதில்ல. ஏன்னா, அவங்க நான் மட்டுமே பார்த்த ஆளுங்களும் கிடையாது. இவங்க எல்லாருமே தினம் தினம் நாம பார்க்குற ஆளுங்க.  ஒவ்வொருத்தரையும் நாம ஒவ்வொரு நாளைக்கு கடந்து போய்க்கிட்டுத்தான் இருக்கோம்.

இதுல, நான் சந்தித்த சிலரது புகைப்படம் என்கிட்ட இருந்தாலும்கூட அதுவும் இங்கே  இடம் பெறாது. காரணம், அவங்களுக்கு ஒரு முகம் மட்டும்னு இல்ல.

இன்னும் சொல்லணும்னா, நான் பார்த்த அந்த அக்காவை நீங்களும் பார்த்திருப்பீங்க. என்ன ஒண்ணு?  அந்த இடத்துல நின்னு எக்ஸ்ட்ராவா  நான் பேசின அந்த 2 நிமிஷத்தை நீங்க செலவிட்டிருக்க மாட்டீங்க.  புத்தகம் வாங்க டிபிஐ வளாகத்துல அன்றைக்கு நான் நின்ன அந்த வரிசையில நீங்களும் நின்றிருக்கலாம்.

அப்போ ஓடி வந்து ‘இங்கே என்ன பிரச்சினை?

ரொம்ப நேரமா க்யூவ் அப்படியே இருக்கே?’ன்னு நீங்க கேட்காம இருந்திருப்பீங்க. அவ்வளவுதான்.

தூக்கத்தை துரத்திய துயரம்

இதை திரும்பவும் பகிர்ந்துக்கணும்னு தோணுறதுக்கு இன்னொரு விஷயமும் காரணம். சமீபத்துல சென்னை, அயனாவரத்துல ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 12 வயது சிறுமியை 18-க்கும் மேற்பட்ட நபர்கள் மிரட்டி 7 மாதங்களாக பாலியல் தொந்தரவு செய்த கொடூரச் சம்பவம் தமிழ்நாட்டையே புரட்டிப்போட்டுச்சு. இந்த சம்பவத்தை அறிந்த எல்லோருக்கும் அன்றைக்கு இரவு எப்படி தூக்கம் வந்துச்சுன்னு தெரியல.

ஆனா, எனக்கு சுத்தமா  தூக்கம் வரலை. எனக்கும் 6 வயசுல, 2 வயசுலன்னு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. ‘வீட்டுல குழந்தைங்க இல்லை!’ன்னு சொல்ற பேச்சுலர்ஸ், காலேஜுக்குப் போகிற ஒரு பையன், வயதான ஒரு பெரியவர்னு சாதாரண மனிதர்களாக இருந்தாலும்கூட அன்றைக்கு இரவு தூக்கம் வந்திருக்காது. அவங்களுக்கும் பயமா இருந்திருக்கும்.

கொடுக்குத் தூக்கும் ஆயிரம் கேள்விகள்

இவங்க எல்லார்கிட்ட இருந்தும்,  ‘நாம என்ன மாதிரி ஒரு சமூகத்துல வாழ்ந்துக்கிட்டிருக்கோம்?’,

 ‘குற்றவாளிகளுக்கு உடனே உயர்ந்தபட்ச தண்டனை கொடுங்க?’,

 ‘தூக்கு தண்டனை கொடுங்க?’ன்னு கண்டனக் குரல்கள் எழுந்திருக்கும்.

அந்தக் கொடுமையை செஞ்சவங்களை கோர்ட் வளாகத்துல பார்க்கும்போது கோபம் வந்து அடிக்கவும் செய்திருப்பாங்க. அது வழியா அவங்களுக்கு ஒரு ஆத்ம திருப்தியை கொடுத்திருக்கும்.

ஆனா, வீட்டுல குழந்தைங்க இருக்குற அம்மா, அப்பாவோ, ‘அச்சச்சோ, நம்ம குழந்தைங்க என்ன மாதிரி ஒரு உலகத்துல வாழ்ந்துக்கிட்டிருக்காங்க?, இனி பசங்கள எப்படி ஸ்கூலுக்கு அனுப்புறது? ஸ்கூல் வேன்ல எப்படி அனுப்புறது? சாயங்காலம் ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வர்ற வரைக்கும் வீட்டுல இருக்குற வேலைக்கார அக்காவை நம்பி குழந்தையை  விட்டுட்டு போகலாமா?  அபார்ட்மென்ட்டுக்கு கீழே இருக்குற கிரவுண்ட்டுக்கு எப்படி விளையாட அனுப்புவது?  இப்படி ஆயிரம் கேள்விகள் உருவாகிட்டே இருக்கும். அது எல்லாத்துக்கும் உடனே பதில் தெரியுமான்னும் தெரியல.

அதேபோல, இப்போ நான் எழுத ஆரம்பித்துள்ள இந்தத் தொடருக்கும், நான் சொல்லிக்கிட்டிருக்கிற இந்த சம்பவத்துக்கும் பெருசா என்ன சம்பந்தம் இருக்கப்போகுதுன்னு நீங்க கேட்கலாம்.   மேலோட்டமா பார்த்தா இல்ல. அதுவே ஆழமா யோசித்துப் பார்த்தால் எல்லா வகையிலயும் சம்பந்தம் இருக்கு. இதுக்காகத்தான், போன வாரம் எழுதும்போது மத்தவங்க மேல ‘செகண்ட் லுக்’ செலுத்தணும்னு சொன்னேன்.

ஒருத்தருக்குமா தெரியல?

அடுக்குமாடி குடியிருப்புல வசிக்கிற ஒரு சிறுமிக்கு  பல  மாதங்களா இப்படி ஒரு தொந்தரவு இருந்திருக்குங்கிற விஷயம் அந்த குழந்தையோட அப்பா, அம்மாவுக்கு தெரியலைங்கிறது அது ஒரு பக்கம். அந்த ப்ளாட்ல இருக்குற ஒருத்தருக்குக் கூடவா தெரியல? அவங்கள்ல யாராவது ஒருத்தர் ‘ஏம்மா… உம்முன்னே இருக்கே. இப்படி உன்ன டல்லா பார்த்ததே இல்லையே?’ன்னு கேட்டிருக்கலாமே?

ஸ்கூல்ல, ஒரு வகுப்புல படிக்கிற குழந்தை ரொம்பவும் சோர்வா இருக்காங்க. இயல்பை விட வித்தியாசமா தெரியுறாங்கங்கிறது எப்படி ஆறேழு சப்ஜெக்ட் எடுக்குற ஆசிரியர்களுக்கு தெரியாம போச்சு? அதுவும் அங்கே கிளாஸ் டீச்சர்,  பி.டி. வாத்தியார், பிரின்சிபால்னு அவ்ளோ பேர் இருப்பாங்களே. ஆறு மாதத்துல அந்த குழந்தைகிட்ட தனியா ஒரு நாள்கூடவா பேச வாய்ப்பில்லாம இருந்திருப்பாங்க. ஏன் அவங்களுக்கு தெரியாமப் போச்சு?

இப்படி ஒரு சம்பவம் நடந்து முடிஞ்சுடுச்சு. இப்போ பெரிய பயத்தையும் உண்டாக்கிடுச்சு. இந்தச் சூழல்ல நம்ம குழந்தைகளையும் வளர்த்துக்கிட்டிருக்கோம். பயம் கொஞ்சம் கம்மியாகி, நம்ம குழந்தைங்க பாதுகாப்பா இருக்காங்கங்கிறத நம்பணும்னா  முதல்ல நம்ம மற்ற குழந்தைங்களுக்கு அப்பா, அம்மாவா இருக்கணும். அந்த ஒரு செகண்டுக்காக மாறணும்.

ஒரு அடி எக்ஸ்ட்ரா...

ஸ்கூல்ல இருக்குற டீச்சர்ஸ், ‘இயற்பியல், வேதியியல், கணக்குல என் பசங்கள 100 சதவீதம் மார்க்  வாங்க வைக்கிறேன்!’னு மட்டுமே இல்லாம, ஒரு குழந்தை எப்படி இருக்கு? அதோட இயல்பு குணநலன்ல ஏதாவது மாற்றம் இருக்கா? கரெக்டா பள்ளிக்கு வர்ற பையன் திடீர்னு ஏன் தாமதமா வர்றான்? கண் ஒரு பக்கம் செவந்திருக்கா? அப்போ ராத்திரி லேட்டா தூங்குறானா? அவங்க வீட்ல ஏதாவது பிரச்சினையா என ஒரு அடி எக்ஸ்ட்ராவா போய் விசாரிக்கலாம். இது ஆசிரியர்ல தொடங்கி பக்கத்து வீட்டு அக்காவா, அண்ணனா, அங்கிளா கூட இருக்கட்டுமே. இவங்க எல்லோருமே செய்யக்கூடிய, செய்ய முடியுற விஷயம் இது.

ஏற்கெனவே நான் சொன்ன மாதிரி இதுல பொதுநலத்தோட ஒரு சுயநலமும் இருக்கு. அது என்னென்னா, மத்தவங்க குழந்தையை நாம பார்த்துக்குறப்போ, நம்ம பசங்கள யாரோ ஒருத்தங்க பார்த்துப்பாங்க. இது நம்மால பண்ண முடியுமான்னு கேட்டா, கண்டிப்பா முடியும். இதை ஒரு விருப்பமாவே எடுத்துக்கிட்டு குழந்தைங்க மேல அக்கறை செலுத்துறோம்னா ஒரு சமூகமா இந்த மாதிரி விஷயங்களுக்கு செய்யக்கூடிய தீர்வா இருக்கும்.

நம்மைச் சுற்றி 4 பேர்

குற்றத்துக்கு அரசாங்கம் சீக்கிரமா ஆக்‌ஷன் எடுக்கணும். நீதிமன்றம்  தண்டனை கொடுக்கணும்கிறது ஒரு பக்கம். இதுமாதிரி இனி நடக்காம இருக்குறதுக்கான ஒரு வேலியை நம்மல சுற்றி நாமே ஒரு அரண் மாதிரி அமைச்சுக்கலாம். அந்த வேலி அன்பால ஆன வேலி. அக்கறையான ஒரு வேலி.

கணக்குல ‘வென் டயகிராம்’னு ஒண்ணு இருக்கே. எல்லாருக்குமே அதுதான் ஈஸியா வரும். ஒரு வட்டம் ஆரம்பித்து அந்த பாதியில இருந்து இன்னொரு வட்டம், அந்த ரெண்டையும் கவர் செய்து இன்னொரு வட்டம்னு போகும். அந்த மாதிரி நம்மல சுற்றி நாமே உருவாக்கிக்குற அரண் ஒரு சங்கிலித் தொடர் மாதிரி இருக்கணும்.

நாம ஒரு நபரால இந்தியாவை மாற்ற முடியாது. தமிழ்நாட்டை ஒரு நாள்ல வேறொரு மாநிலமா மாற்ற முடியாது. ஆனா, சுற்றி இருக்குற நாலு பேரோட சந்தோஷத்துக்கு, நாலு குழந்தைங்களோட பாதுகாப்புக்கு காரணமா இருக்க முடியும். இதுதான் நாம செய்ய வேண்டிய மாற்றம்.

‘ஐ  ஆம்  ரெஸ்பான்சிபில்  பாஃர் மை  பீப்புள்’னு ஆங்கிலத்தில் சொல்வோம். இங்கே ‘பீப்புள்’னு சொல்ற அந்த மக்கள் நம்ம வீட்டுல இருக்குற 4 பேர் மட்டும்னு நினைக்காம, நம்மைச் சுற்றி இருக்குற 4 பேர்னு நினைத்தால் போதும். அதுதான் இதோட முதல் வெற்றி.

அடுத்த வாரம் சந்திப்போம் நண்பர்களே…

- நிமிடங்கள் ஓடும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x