சின்ன சின்ன வரலாறு – 16 : பெல்ட்டின் கதை! 

சின்ன சின்ன வரலாறு – 16 : பெல்ட்டின் கதை! 
Updated on
2 min read

கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு உயர்த்தப்பட்ட ஒரு பொருளைப்பற்றிப் பார்க்கலாம். அதற்கு முதலில் அறணாள் என்று பெயர். பின்னர் நிலை உயர்ந்து பெல்ட் எனும் பெயர் பெற்றது. 

இந்த பெல்டின் வரலாறு தனித்தன்மை வாய்ந்தது. ஏதோ ஒரு தேவைக்காக உபயோகத்திற்கு வந்து பின் வெவ்வேறு தேவைகளான நிலை, இடம், பொருள் என்று அனைத்தும் உயர்ந்திருக்கிறது. கற்கால மனிதர்கள் தங்கள் அந்தரங்க பாகங்களை இலைகளால் மறைக்கத்தொடக்கிய காலத்தில், இதன் தேவையை உணரத்தொடங்கினான். தேவைக்காக ஒரு கயிறாக அடி வயிற்றில் கட்டிக்கொண்டான். அரசியல் மற்றும் சமுதாய அந்தஸ்தை வெளிக்காட்டக்கூடிய பொருளாகப் பதவி உயர்வு பெற்றபோது, பெல்ட்டின் அளவும் பெரிதாகி, அணியும் இடமும் உயர்த்தப்பட்டு இடுப்பில் வந்து குடி ஏறத் தொடங்கியது .

ஆக, தேவைப்பொருளாக இருந்த பெல்ட்டுகள் மெதுவாக ஆபரணமாகவும் ஃபேஷனாகவும் மாற்றம் கண்டது.ஃபேஷன் என்றான பின், பெண்களும் அதை அணியத்தொடங்கி , இன்று எல்லோர் இடுப்புக்களும் பெல்டால் அலங்கரிக்கப்படுகின்றன.

இதன் தேவை ஒவ்வோர் காலகட்டத்திலும் எவ்வாறு மாறுதல் அடைந்திருக்கிறது என்பது ஆச்சர்யமே. கற்கால மனிதன் முதலில் தன் லங்கோட்டியை இழுத்துக்கட்ட கயிற்றை உபயோகிக்கத்தொடங்கினான். இடுப்பில் அரணாளாக அறிமுகமானது இந்த பெல்ட். மனிதனின் உணவுத் தேவைக்கு ஏற்ப, அவன் வேட்டையாடக் கிளம்பியபோது, அவன் வேட்டை ஆயுதங்களை வைப்பதற்கு உடலில் ஒரு கருவி தேவைப்பட, பெல்ட் சற்றே அகலமாக்கப்பட்டு இடுப்பில் குடிபுகுந்தது. வெறும் நூலாக இருந்தது மெதுவாகத் துணி, பின் உலோகம் அதன் பின் தோல் என்று வகை வகையாக உருவாகின.

இதே காலகட்டத்தில் மதங்களும் உருவாகத் தொடங்க, பெல்ட் இவற்றின் மதத் தடயங்களாக மாறின. கெர்டில் எனப்பெயரிடப்பட்டு இந்த பெல்ட்டுகள் ஒரு பாதிரியின் உடையில் ஒரு பாகமாக்கப்பட்டன.

ரோமானியர்களின் சிப்பாய்கள் அவர்கள் ராணுவ முக்கியத்துவத்தை வித விதமான பெல்ட்டுக்கள் மூலம் காட்டினர். அடிமைகள் மட்டும்தான் பெல்ட் இல்லாத உடை அணிந்தனர்.

அதேபோல் ட்யூடானிக் படைவீரர்கள் தங்களை அடிமை வகுப்பினரிடமிருந்து தனிமைப் படுத்தி காட்ட, பளபளக்கும் கத்திகள் இணைந்த பெல்ட்டுகளை உபயோகப்படுத்தினர்

ஆனால் 15ம் நூற்றாண்டில் பெல்ட், ஒரு புதிய முகம் எடுத்தது. ஒரு மனிதனின் அன்றாட உடையின் ஒரு பங்காக அது மாற்றப்பட்டது. ஆனால் அப்போது அவை மிகவும் தளர்வாக இடுப்பில் இடப்பட்டு, ஒரு பெரிய வாலாக அதன் இரு பக்கமும் கால்களுக்கு இடையே தொங்கவிடப்பட்டன.

ரினைசான்ஸ் காலத்தில் பெண்களும் பெல்ட்டுகள் அணிந்தார்கள்.  காரணம் உடலோடு ஒட்டிய உடை என்பது மாறி , உடலைச்சுற்றித் தளர்வாக வழியும் உடைகள் நாகரீகச் சின்னமாக மாற, இந்த உடைகளை அழுத்திப்பிடிக்க இடுப்பு பெல்ட்டுகள் தேவைப்பட்டன.

பெண்களும் இதை அணியத்தொடங்கிய உடன், நாகரீக மதிப்பீட்டுச் சின்னமாகவே மாறியது. ஒருவிதத்தில் பார்த்தால், எப்படிப் போர் வீரர்களின் ராணுவ நிலையைக் காட்ட உபயோகப்படுத்தப்பட்டதோ, அதேபோல் இப்பொது சொல்லியும் சொல்லாமலும் ஒருவரின் பண நிலையைக் காட்டும் பொருளாக மாறி இருக்கிறது.

சமீபகாலத்தில் வந்த ஒரு செய்தி, போலீஸ்காரர்கள் தங்கள் வயிற்று அளவைக் குறைக்காவிட்டால், வேலை போய்விடும் என்ற அச்சுறுத்தல். இது புதிது அல்ல. முதல் உலக யுத்தத்தின் போது ரஷ்யா முதலான நாட்டு வீரர்களுக்கு மிகப் பெரிய அளவில் பட்டையான பெல்ட்டுகளும் அதை விட மகா பெரிய பக்கிள்களும் கொடுக்கப்பட்டன. இந்த பக்கிள்கள் வயிற்றை இறுக்கிப் பிடிப்பதோடு, வீரர்களை மிகவும் நேர்த்தியான உடலமைப்போடு காட்டியது

அமெரிக்காவைப் பொருத்தவரை, 1989க்குப் பிறகு இந்த இறுகிய பெல்ட் அணிவது லேசாக இளக்கப்பட்டு, மிலிட்டரி பெல்ட்டுகள் உடலை இறுக்கிபிடிக்காத வகையில் மாற்றி அமைக்கப்பட்டன. தவிர பெல்ட்டுகள் உடல்ரீதியான தண்டனைகள் கொடுப்பதற்கும் உபயோகப்படத் தொடங்கின.

இந்தியாவைப் பொருத்தவரை, அறணாள் கயிறாக உபயோகிக்கத் தொடங்கியது, பெண்களின் இடுப்பு அணியாக மாறி, தற்போது ஆண்களும் பெண்களும் தங்கள் உடையுடன் ஒரு பாகமாக உபயோகிக்கத் தொடங்கிவிட்டனர். நாலாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே இந்த வகை நகைகள் நம் முன்னோர் அணிந்திருக்கிறார்கள். அதுவே ஒட்டியாணம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in