

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மாடலான ரினி குஜூரின் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
ரினீ குஜூர் பிரபல கரீபியன் பாடகி ரிகானாவின் தோற்றத்தை ஒத்திருப்பதுதான் அதற்கான காரணம். கடந்த 24 மணிநேரமாக ரினியின் புகைப்படத்துடன், ரிகானாவின் புகைப்படத்தை ஒப்பிட்டு பலரும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.
பல வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களும் ரினியை இந்தியாவின் ரிகானா என்று அவரது புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக ரினி தற்போது உலக ஆளவில் பிரபலம் ஆகியிருக்கிறார்.
மாடலிங் உலகில் தனது நிறம் காரணமாக தான் எவ்வாறு ஒதுக்கப்பட்டேன் என்பதைச் செய்தி நிறுவனங்களிடம் பகிர்ந்திருக்கிறார் ரினி .
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் ரினி கூறுகையில், "நான் கருப்பாக இருந்ததால் எனக்கு மாடலிங் துறையில் பல வாய்ப்புகள் பறிக்கப்பட்டன. நான் வெள்ளையாக இல்லை. ஈர்க்கப்படும் வகையில் இல்லை என்று என்னை ஒதுக்கியவர்கள் எல்லாம் தற்போது அவர்களது வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புகைப்படக் கலைஞர்கள் நான் ரிகானாவைப் போல் உள்ளதாகக் கூறுவார்கள். ரிகானா அழகானவர் என்பதை மறுக்க முடியாது. அவரைச் சந்திக்க ஆவலாக இருக்கிறேன். அவரை ஆச்சரியப்படுத்த வேண்டும். நன்றி கூற வேண்டும்" என்று ரினி தெரிவித்துள்ளார்