

இந்தியாவின் தடகள வீராங்கனை ஹிமா தாஸ் உலக தடகள ஜூனியர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருத்திருக்கிறார். உலக ஜூனியர் தடகளப் பிரிவில் இந்தியா பெறும் முதல் தங்கம் இதுவாகும்.
இதன் மூலம் இந்தியா முழுவதும் தங்க மங்கையாக தன்னை அடையாளம் காட்டியுள்ள ஹிமா தாஸ் பற்றிய 10 தகவல்கள்.
1. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமா தாஸ் ஜனவரி 9 ஆம் தேதி 2000 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். ஹிமாவின் குடும்பம் விவசாயப் பின்னணியைக் கொண்டது.
2. அசாம் தலைநகர் கஹாத்தியில் நடைபெற்ற முகாமில் ஹிமா தாஸ் பங்கேற்க வந்தபோது அவரது ஓட்டப் பந்தயத் திறனை நிபுண் தாஸ் என்ற பயிற்சியாளர் கண்டறிந்திருக்கிறார்.
3. அதனைத் தொடர்ந்து ஹிமாவின் குடும்பத்தினருடன் பேசி, ஹிமாவின் பயிற்சிக்கான செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக நிபுண் தாஸ் கூறி ஹிமாவுக்கு பயிற்சி அளித்திருக்கிறார்.
4. கால்பந்து வீராங்கனையாக வலம் வந்த ஹிமா தாஸ் பல போட்டிகளிலும் கலந்து கொண்டு விளையாடியிருக்கிறார்.
5. இரண்டு ஆண்டுகளுக்கும் முன்னர்தான் ஓட்டப் பந்தயம் தொடர்பான பயிற்சிகளை ஈடுபடத் தொடங்கி இருக்கிறார் ஹிமா, அதற்கு முக்கியக் காரணம் அவரது ஓட்டப் பந்தயத் திறனை கண்டறிந்த நிபுண் தாஸ்தான்.
6. ஹிமாவின் வேகமாக ஓடும் திறனைக் கண்ட நிபுண் அவரை ஒரு தடகள வீராங்கனையாக உருவாக்கப் பயிற்சி அளிக்கத் தொடங்கி இருக்கிறார்.
7. தொடக்கத்தில் 100 மீட்டர், 200 மீட்டர் என ஓடிக் கொண்டிருந்த ஹிமா தாஸின் கவனம் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் மீது சென்றது.
8. இந்தத் தொடர் பயிற்சிகளின் அடிப்படையில் காமன்வெல்த் போட்டியில் ஆறாவது இடத்தைப் பிடித்தார் ஹிமா தாஸ்
9. இதனைத் தொடர்ந்து தற்போது பின்லாந்தில் நடைபெற்ற உலக தடகளப் போட்டியில் தற்போது தங்கம் வென்ற இந்தியப் பெண் என்ற சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.
10. போட்டியின் ஆரம்ப கட்டத்தில் 5 -வது வீரராக வந்துகொண்டிருந்த ஹிமா 400 மீட்டர் தூரத்தை 51.46 விநாடிகளில் முதலிடத்தில் ஓடிக் கடந்து யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இந்தியாவுக்கான தங்கத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார்.
தங்கப்பதக்கம் பெற்றுள்ள ஹிமாவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராகுல் காந்தி, சினிமா நட்சத்திரங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய ஹிமா தாஸ் தனது ட்விட்டர் வீடியோ பதிவில், "இந்தியாவுக்கு தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், எதிர்காலத்தில் இன்னும் பல பதக்கங்களை வெல்வேன் "என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“என்னைவிட அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம்” - மாளவிகா