Last Updated : 27 Jul, 2018 12:01 PM

 

Published : 27 Jul 2018 12:01 PM
Last Updated : 27 Jul 2018 12:01 PM

சின்னச்சின்ன வரலாறு! – 15 : பிரெட் வின்னர்

சிலதினங்களுக்கு முன் பேப்பரில் வந்த செய்திதான், இந்தக் கட்டுரையை எழுதவைத்திருக்கிறது. 14,500 வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட ரொட்டித் துண்டுகள், அதாவது பிரெட் துண்டுகள், ஜோர்டான் நாட்டில் ஒரு கல் நெருப்பிடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவ்வளவு பழமை வாய்ந்த ஒரு உணவுப்பொருள் அன்றிலிருந்து இன்றுவரை தன் மவுசு குறையாமல் இருப்பதென்றால், இதன் வரலாறு என்னவாக இருக்கும்?

எகிப்தியன் அருங்காட்சியகம் ஒன்றில் 2543 முதல் 2435 பி.சியின் அரசர் லிட்ஜெரின் கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல் சித்திரத்தில் , அரசர் ஒரு டேபிளில் அமர்ந்து எதிரே உள்ள ப்ரெட் துண்டுகளைச் சாப்பிடுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இந்த ரொட்டித்துண்டுகள் நாடோடிகள் ஒரு சமூகமாக செயல்படத்தொடங்குவதற்குக் காரணியாக இருந்திருக்கின்றன.ஆசியாவின் மேற்க்குப்பகுதியிலிருந்து தொடங்கப்பட்டு வடக்கு மற்றும் மேற்கு திசைகளுக்கு ஊடுருவி, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டங்களுக்குள் சென்று சமூக வளர்ச்சிக்கு இவை துணையிருந்தன. இதேபோல் கிழக்கு ஆசியா அரிசியிலும், அமெரிக்கா சோளம் மூலமாகச் சமூக நிலைகளைக்காணத்தொடங்கின.

நியோலிதிக் காலத்தில் , அதாவது 14600 முதல் 11600 வருடங்களுக்கு முன்பிருந்தே ரொட்டித்துண்டுகளை சாப்பிடும் பழக்கம் இருந்திருக்கிறது. இது எதைச்சொல்கிறது? நாம் நாடோடிகளாகக் கருதிய சமுதாயம் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறது. ஆக, அந்தக் காலகட்டத்திலேயே நாம் சமூகமாக வாழத்தொடங்கிவிட்டோம் .

எகிப்திய நாட்டுக் கல்லறைகளில் , இறந்தவருக்குக்காணிக்கையாகக் கூம்பு வடிவிலான ரொட்டித்துண்டுகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.முதல் முதலாக , ப்ரெட்டை ஓவனில் வைத்து எடுக்கும் பழக்கமும் கிரேக்க நாட்டில் தான் ஆரம்பமாயிற்று.

தற்போது நாம் பல தானியங்களால் செய்யப்பட்ட ரொட்டித்துண்டுகளை விரும்பத் தொடங்கி இருக்கிறோம். ஆனால் வரலாறு படி , மிக அதிக வருங்களுக்கு வெள்ளை நிற ரொட்டித்துண்டுகள் பிரபுக்களின் உணவாகவும், கருப்பு நிற பல தானிய துண்டுகள் ஏழைகளின் உணவாகவும் பார்க்கப்பட்டு வந்தது. இருபதாம் நூற்றாண்டின் முடிவில் தான் நாம் தற்போது பார்க்கும் இந்த மாறுதல் ஏற்படத்தொடங்கியது.பலதானிய ரொட்டிகளின் முன்மாதிரிகள் நிறைய இருந்திருக்கின்றன.

கிரேக்கர்கள் பார்லியில் செய்யத்தொடங்கி பின் கோதுமைக்கு மாறினார்கள்.

பிரிட்டனில் ரொட்டி வகைகள் ஆசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. பிரிட்டன் ஒரு வகையில் இந்த ரொட்டி இறக்குமதியை அதன் ஆட்சியின் கீழே இருந்த காலனிகளை அதன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதற்கும் உபயோகப்படுத்திக்கொண்டது .

ஒரு விதத்தில் பார்த்தால், ப்ரெட் அதாவது ரொட்டி நாம் அன்றாடும் உபயோகிக்கும் பல உவமானங்களில் தனி இடம் பெற்றிருக்கிறது. வீட்டில் சம்பாதிப்பவரை ப்ரெட் வின்னர் என்றும், பைபிளில் இயேசுவிடம் அன்றாட பிரெட்டைத் தருவதற்கான பிரார்த்தனையும், நம்மை ஏமாற்றுபவரை, என் வாயிலிருந்த ரொட்டியைப் பிடுங்கிவிட்டான் என்று கூறுவதும்... ஆக நம் அன்றாட உணவுத் தேவையை ரொட்டி மூலமாக நம்மால் கூற முடிகிறது. மற்றும் ஒரு சுவாரஸ்யமான செய்தி.

நாம் நம் தோழரை கம்பேனியன் என்றும் கூறுவோம் ஆங்கிலத்தில். இந்த வார்த்தையின் மூலம், காம் என்றால் லித்தியன் மொழியில் கூட அதேபோல் பானிஸ் என்றால் பிரெட். ஆக நம் உடன் நம் ஆகாரமான பிரெட் உணவைப் பகிர்ந்து உண்பவர் கம்பேனியன்.

அன்றாட உணவாக வீடுகளில் செய்யப்பட்ட இந்த பிரெட், வர்த்தக முறையில் தொடங்கப்பட்டது, வடக்கு இத்தாலி நாட்டில்தான். பதினைந்தாம் நூற்றாண்டில் முதல் ரொட்டிக்கடை "டாக்யூனம் சைண்டாடிஸ்" இங்கே தொடங்கப்பட்டது. முழுவதும் இயந்திர மயமாக்கப்பட்ட வணிக உற்பத்தி 1961ல் தொடங்கப்பட்டது. இதை சார்லிவூட் பிரெட் ப்ராசஸ் என்று பெயரிடப்பட்டு, மிகவும் குறைந்த விலையில் மிகவும் குறைந்த நேரத்தில் பிரட் செய்யும் முறை கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்காவில் 1777ல் முதல் கோதுமை உற்பத்தி ஒரு பொழுதுபோக்காகத்தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அங்கே இருந்த ஏர்ல் ஆஃப் சாண்ட்விச் என்பவர் இரண்டு ரொட்டித்துண்டுகளுக்குள் மாமிசத்தை வைத்து அதற்கு தன் பெயரான சாண்ட்விச்சை சூட்டினார். இன்று வரை நாம் அவரைத்தான் கடித்து குதறிக்கொண்டிருக்கிறோம். 

அவ்வளவு நாடுகளும் இந்த ரொட்டியை தங்கள் பிரதான உணவாகக் கொண்டாடுவதற்கு காரணம் ஒன்று நிச்சயமாக இருக்கவேண்டும் அல்லவா. அந்தக்காரணம் , பிரெட்டில் கார்போஹைட்ரேட், மக்னீசியம், இரும்புச்சத்து ,செலினியம், விட்டமின் பி, ஃபைபர் என்று அனைத்தும் உள்ளது.

உணவாக மட்டுமின்றி பல நாட்டுப் பாரம்பர்யத்திலும் இந்த ரொட்டிக்குத் தனி இடமுண்டு. கிறித்துவர்கள் நற்கருணை கூட்டத்தில் வைன் மற்றும் ரொட்டித்துண்டை பயன்படுத்துவார்கள். யூதர்கள் சபத் அன்று சாலாக் என்ற ரொட்டி வகையை உபயோகப்படுத்துவார்கள். இவை விடுமுறைகளின் போது இஸ்ரேலியர்களின் பன்னிரெண்டு பழங்குடியினரை நினைவில் கொள்ளும் விதமாக பண்ணிரெண்டு பின்னல்களிட்ட ரொட்டி வகையை உபயோகிப்பார்கள். சில நேரங்களில், இவற்றின் மேலே ஒரு ஏணியும் வைக்கப்படும். இது இறைவனடியைச் சென்று அடையும் பாதையாக கொள்வார்கள்

நாம் தற்போது மிக அதிகம் விரும்பி உண்ணும் க்ரொய்சோண்ட் வகை ரொட்டிக்கான வரலாறு மிக அற்புதம். வியன்னா நாட்டை துருக்கியர்கள் 1683ல் முற்றுகை இட வந்தபோது, ஒரு ரொட்டி தயாரிப்பவர் தான் எச்சரிக்கை கொடுத்து வியன்னாவைக் காப்பாற்றினாராம். துருக்கியர்களை வென்ற வியன்னா நாட்டவர், துருக்கி நாட்டின் சின்னமான க்ரெசண்டை சித்தரிக்க முதல் முதலாக க்ரொய்சோண்ட் செய்யத்தொடங்கினார்களாம்.

எகிப்து நாட்டில் பல வருடங்களுக்கு முன் ப்ரெட் என்று ஒரு நாணயமும் இருந்தது.

மற்றும் ஒரு விசித்திரக்குறிப்பு. அந்தக்கால பேக்கர்களின் பேக்கர்ஸ் டசன் என்பது, பன்னிரண்டு பிரெட் துண்டுகளைக்குறிக்காதாம். அந்தக்கணக்கில் டஃஜன் என்பது பதிமூன்றாம்.என்னவோ நாம் வாங்கும் போது கொசுறாக ஒரு கை போடும் நம் நாட்டுப் பழக்கம் போலத்தான்!!!

நம் இந்திய வரலாற்றுக்கு வருவோம். மிக நிறையக் கதைகள் இதன் வரலாறை ஒட்டிச்சொல்லப்படுகிறது. பெர்ஷியாவிலிருந்து கெட்டி மைதா ரொட்டியாக அறிமுகமானதாக, மற்றும் அன்றைய ஆவாத் மாநிலத்தின் கோதுமை ரொட்டியாக வந்ததாக, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் தங்கள் பயணிகள் மூலம் நம் நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதாக....இப்படி நிறையக் கதைகள். இதில் சுவாரஸ்யம்... குருநானக், மணிகரன் என்ற இடத்திற்குச் சென்றபோது அவர் சீடர் மார்தனா சாப்பாடில்லாமல் வாடுவது கண்டு ஒரு பெரிய கல்லைத் தூக்கிப் பார்க்கச்சொல்ல, அதன் அடியில் கொதிக்கும் நீரூற்றைப் பார்த்தார்களாம். அதில் சப்பாத்தியை நனைக்கப்போன மார்தனா, கை தவறுதலாக அதை உள்ளே போட, அது நன்றாகப் பொரிந்து மேலே வர, அட நமது பூரி அப்போதுதான் பிறந்ததாம்.

கதைகள் உண்மையாக இல்லாதிருந்தாலும், சுவாரஸ்யமானவையே.

ஆக, சப்பாத்தி பிரெட்டின் இந்திய வடிவம். கதைகளை விடுத்து, 1857 சுதந்திரப்போராட்டத்தின் போது சிப்பாய் கலகத்தில் இந்த ரொட்டி மிக முக்கிய பங்கு வகுத்தது. சப்பாத்தி மூவ்மெண்ட் என்று கூறப்படும் இந்தக் கலகம் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை நன்றாக அசைத்துப்பார்த்தது. இண்டோரில் காலரா நோய் பரவ ஆரம்பிக்க, சப்பாத்தி நாட்கள் மற்றும் கடுமையான வானிலையைத்தாங்கக்கூடிய உணவானதால், பசியோடு இருந்த போராட்ட வீரர்களுக்குச் சப்பாத்தி வளையம் மூலம் செய்திகள் அனுப்பப்பட்டன. மெளலாவி அஹமதுல்லா இந்தச் சப்பாத்தி வளையத்தின் திறனை நன்கு அறிந்து கொண்டார். ரன்னர்ஸ் என்று சொல்லப்படும் நபர்களால் ரொட்டிகள் வீடுகளுக்கு அனுப்பப்படும். அதைப்பெற்றுக்கொண்ட வீடுகள் அதே ரன்னர் மூலம் வேறு சில ரொட்டிகளை கொடுக்க, ரன்னர்ஸ் அதை ஒரு தொடராக எடுத்துச்செல்வர். நடுவில் பிடிபட்டாலும் ஆங்கிலேயர்களால் இந்த ரொட்டிகளிலிருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியாது. இப்படி ரொட்டியைச் சுமந்து செல்பவர்கள் அதற்கான காரணம் பற்றி அறியமாட்டார்கள். ஆக ரொட்டி ஒரு தேசிய ஒருமைப்பாட்டின் சின்னமாக மாற்றப்பட்டது.

தற்போது இந்தியாவில் மிக அதிகமாக டயாபடிக் நோய் காணப்படுகிறது. ஒரு குழுவைச் சேர்ந்த சிலர், கோதுமை உணவால் இது நிகழ்வதாகவும், அதனால் நம் உணவுப் பழக்கத்திலிருந்து கோதுமையைத் தள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

ஆக, ரொட்டியின் வருங்காலம் எப்படி இருக்கும்....உள்ளேயா வெளியேயா...? காலம்தான் சொல்ல வேண்டும். காலமே சொல்லும்!

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x