

சர்வதேச அளவில் பிரபலமான ஓவியங்களில் ஒன்று, மின்ஹ்வா. இந்த ஓவியங்கள் கொரிய நாட்டார் கலை படைப்பைச் சேர்ந்தவை. இந்த ஓவியங்களின் பிரம்மாண்டமான சர்வதேசக் கண்காட்சி தாய்லாந்தில் இந்த மாதம் நடந்துவருகிறது. மின்ஹ்வா என்றால் மக்களின் கலை எனப் பொருள். சோசான் அரச வம்சக் காலத்தில் பொதுஆண்டு 14ஆம் நூற்றாண்டில் இந்தக் கலை தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஓவியங்கள் கவிதைக்குரிய விநோதத்தையும் நமது கதை மரபின் மாயத்தன்மையையும் கொண்டுள்ளன. திரைச்சீலைகளில் இந்த ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பறக்கும் மீன்கள், புலியை வேட்டையாடும் முயல், மலர்கள், நதிப்படுகை எனப் பலவிதமான கருப்பொருளில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. புலி என்கிற அச்சம் தரும் விலங்கைச் சில ஓவியங்கள் நட்புக்கும் நகைப்புக்கும் உரியதாகச் சித்தரிக்கின்றன. இந்த ஓவியங்கள், தீமையை விரட்டி வீட்டில் நன்மையை மலரச் செய்யும் என்கிற அன்றைய காலக் கொரிய எளிய மக்களின் நம்பிக்கையை வெளிபடுத்துபவை.