

பிரபல பின்னணிப் பாடகி கல்பனா ராகவேந்தர், ஹைதராபாத்தில் உள்ள தன் வீட்டினுள் மயக்கமடைந்த நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டதையடுத்து அவரைப் பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் இணையத்தில் வலம்வந்தன. குறிப்பாகப் பல யூடியூப் அலைவரிசைகளும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கற்பனைக் கதைகளைப் பதிவேற்றியிருந்தனர். குடும்பத் தகராறு காரணமாக கல்பனா தற்கொலைக்கு முயன்றதாகவும் வதந்தி பரப்பப்பட்டது.
தூக்கமின்மைக்கான மாத்திரைகளை அதிகமாகச் சப்பிட்டதால் தன் அம்மா மயங்கிவிட்டார் என்று கல்பனாவின் மகள் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பிறகும் வதந்திகள் தொடர்ந்தன. இணைய ஊடகத்தினர் சிலரது இந்தப் பொறுப்பற்ற, அநாகரிகமான செயல் குறித்துப் பாடகி கல்பனா பேட்டியளித்தார். பிரபலம் என்பதாலும் குறிப்பாகப் பெண் என்பதாலும் கீழ்த்தரமான கருத்துகளைப் பரப்புவோரைக் கண்டித்தார்.என்ன நடந்தது என்பது குறித்துத் தன்னிடம் எதையும் கேட்காமல் தாங்களாகவே கற்பனைக் கதைகளைக் கட்டும் செயலையும் அவர் விமர்சித்தார். “பரபரப்புக்காகவும், ‘லைக்ஸ்’ வாங்குவதற்காகவும் நீங்கள் பரப்பிய வதந்தியை லட்சக்கணக்கானோர் பார்த்திருக்கக்கூடும். ஆனால், அது உண்மையல்ல என்று நான் சொல்வதை எத்தனை பேர் பார்ப்பார்கள்?” என்கிற கல்பனாவின் கேள்வி, பெண்கள் எந்த நிலைக்கு உயர்ந்தாலும், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பும் ஒவ்வொருவருக்குமானது.
பட்ஜெட்டில் பெண்கள்
தமிழக அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பெண்கள் நலன் சார்ந்து வெளியான அறிவிப்புகள்:
l வெளியூரில் தங்கும் பெண்களுக்காக ஏற்கெனவே 13 ‘தோழி’ மகளிர் தங்கும் விடுதிகள் செயல்பட்டுவரும் நிலையில் தற்போது மேலும் 10 விடுதிகள் அமைக்க ரூ.77 கோடி ஒதுக்கீடு.
l பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் பதிவுக் கட்டணத்தில் 1% குறைக்கப்படும். ரூ.10 லட்சம் வரை மதிப்பிலான வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து வகையான அசையாச் சொத்துகளின் பத்திரப் பதிவுக்கும் இது பொருந்தும்.
l மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்தும் பயனாளர் பட்டியலில் இணையாத தகுதியுள்ள மகளிர் அந்தத் திட்டத்தின்கீழ் விரைவில் இணைக்கப்படுவர்.
l கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசியான ஹெச்.பி.வி. தடுப்பூசியை 14 வயதுடைய அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாகச் செலுத்த ரூ.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.