Published : 07 Jul 2018 02:51 PM
Last Updated : 07 Jul 2018 02:51 PM

சின்ன சின்ன வரலாறு 13 : பொம்மைக் கதை!

நீயும் பொம்மை நானும் பொம்மை...நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை...

இப்படி எல்லாமுமாக இருக்கும் பொம்மையைப்பற்றி கொஞ்சம் ஆராய்ந்தால் என்ன? இந்தச் சிந்தனையின் தொடர்ச்சியே இந்தப் பொம்மைகளின் வரலாறு.

மற்ற வரலாறுகளில் இருந்து இது ஒரு விதத்தில் தனிமைப்பட்டுத் தெரிகிறது. காரணம் பொம்மைக்கான வரலாறு இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் அவரவர் நினைவில் அவரின் சிறியவயதுடன் சம்பந்தப்பட்ட ஒரு பொம்மையின் தனி வரலாறு நிச்சயம் இருக்கும். பொது வரலாறைச்சொல்லி உங்கள் தனி வரலாற்றுச் சிந்தனையை தூண்டுவதே கட்டுரையின் நோக்கம்.

கி.பி.2000ல் எகிப்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மரத்தினால் ஆன பாடில் பொம்மைகள், பழமையானவை. இவை எகிப்தின் கல்லறைகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன. கை காலகளைப் பிரித்துப் பொருத்தக்கூடிய வகை பொம்மைகளை வைத்துக்கொண்டு கிரேக்க குழந்தைகள் விளையாடியதாக எழுதப்பட்ட வரலாற்றுச் சான்றிதழ்களும் உள்ளன.

ருமேனியர்கள் களிமண், கட்டை , தந்தம் மற்றும் குப்பைகளால் பொம்மைகள் செய்தார்களாம்.இவை குழந்தைகள் புதைக்கப் படும்போது அவர்களுடன் மரணம் நிகழ்ந்த தருணத்தில் பிரபலமான உடைகளைக்கொண்டு மூடப்பட்டு கல்லறைகளில் இருந்து கிடைத்துள்ளன. அதேபோல் புதிதாகக் கல்யாணம் முடித்த ரோம் மற்றும் கிரேக்க நாட்டுப்பெண்களுக்கும், கடவுளுக்குக் காணிக்கையாக பொம்மைகளைச் செலுத்தும் வழக்கமும் இருந்திருக்கிறது.

ஆக, பொம்மைகள் குழந்தைகளின் விளையாட்டுப்பொருளாக மட்டுமல்லாமல், இறைவனுக்கு காணிக்கைப்பொருளாகவும் கருதப்பட்டிருக்கிறது. சில காலகட்டத்தில் குழந்தைகளின் படிப்பிற்கு உதவும் வகையிலும் அவை உபயோகப்படுத்தப் பட்டிருக்கின்றன.

இதில் ஆச்சர்யமான ஒரு விஷயம். குழந்தைளுடன் சம்பந்தப்படுத்தி பார்க்கப்படும் பொம்மைகள், குழந்தைகள் கைகளில் கிடைக்கவிடாமலும் பாதுகாக்கப்பட்டன. அட, விலை அதிகமாக இருந்திருக்கும் அதனால்தான் என்று தோன்றினால் , ஒரு விதத்தில் இதுவும் சரிதான். இந்தப் பொம்மைகளின் விலை ஓர் உயிர். அதாவது ப்ளாக் மாஜிக் என்று சொல்லப்படும் மாந்திரீக த்தில் உபயோகப்படுத்தும் பொம்மைகள் இவை. பேய் பொம்மைகளாகவும் ஏவல் போன்ற முறைகளுக்கும் ஏவப்பட்ட பொம்மைகள். இவை மந்திர சக்திகள் கொண்ட வகையாக கருதப்பட்டதால் குழந்தைகள் இவற்றின் அருகே செல்லவிடாமல் பாதுகாக்கப்பட்டனர்.

வூடூ போன்ற ப்ளாக் மாஜிக் சமாச்சாரங்களுக்கு ஆப்பிரிக்க நாடுகளில் உபயோகப்படுத்தப்பட்ட இந்தப் பொம்மைகள் மிக ஆச்சர்யமாகக் கடவுளின் பிரதிநிதிகளாகவும் பார்க்கப்பட்டன. சடங்குகளில் பொம்மைகள் பிரதான பங்கும் வகித்தன. கல்வி முறைகளுக்கு இவை உபயோகப்படுத்தப்பட்டன.

இந்த வூடூ சமாச்சாரங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமின்றி ஜப்பான், ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகளிலும் கருப்பு மாஜிக்கிற்கு பொம்மைகள் உபயோகத்தில் இருந்தன. யுரோபியன் பப்பட், நக்சி, போக்கியோ போன்ற பொம்மைகள் இந்த வகைப்படும். இதில் வடக்கு ஐரோப்பாவின் கிட்சன் விச், அதிர்ஷ்ட தேவதையாகவே உணரப்பட்டது. ஆப்பிரிக்க நாடுகளில் வூடூ பொம்மைகள் கெடுதலையும், ஹோபி கசீனா பொம்மைகள் அதிர்ஷ்டம் கொடுக்கும் பொம்மைகளாகவும் கருதப்பட்டன.

சில பொம்மைகள் அவற்றின் பிரத்தியேக பேருடன் வரலாற்றில் இணைந்துவிடுகின்றன. இதில் வகை சார்ந்த பெயரும் உண்டு. ஒரு பொம்மைக்கான பிரத்தியேக பெயரும் உண்டு. இனியூட் பொம்மைகள் சோப்ஸ்டோன் அல்லது எலும்பினால் செய்யப்பட்டு கம்பளியால் மூடப்பட்டவை.

வடக்கு அமெரிக்காவின் ஆப்பிள் பொம்மைகள் உலர்ந்த ஆப்பிளைத் தலையாக வைத்துச் செய்யப்பட்டவை.

சோளக்கொல்லை பொம்மைகள் பற்றி நான் தனியே சொல்லத் தேவை இல்லை. நம் சினிமாக்களில் மிக அடிக்கடி காட்டப்படுபவை அவை.

பென்னிவூட்ஸ் பொம்மைகள் மரம் இழைத்துச் செய்யப்படுபவை. நம் மரப்பாச்சி பொம்மைகள் போல.

ரஷ்யாவின் மட்ரயோஷ்கா பொம்மைகள் 1890ல் வடிவமைக்கப்பட்டவை. ரஷ்யத் தலைவர்களின் மற்றும் ரஷ்ய கற்பனைக் கதைகளின் பாத்திரங்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்டவை இவை. ஒன்றினுள் ஒன்று செல்லும் விதமாக இவை இருக்கும். உதாரணத்திற்கு மிகவும் பெரிய மட்ரயோஷ்கா பொம்மை ஒரு பெண்ணாகவும் மிகவும் சிறியது ஒரு கைக்குழந்தையாகவும் இருக்கும்.

களிமண் பொம்மைகள் ஜெர்மனியில் 13ம் நூற்றாண்டிலும், மர பொம்மைகள் 15ம் நூற்றாண்டிலும் பழக்கத்தில் இருந்தது. பெக் மர பொம்மைகளும் இங்கேயும் நெதர்லாண்டிலும் மெதுவாக தலைக்காட்டத்தொடங்கின.

சரி இந்தப் பொம்மைகளின் கண்களுக்கு வருவோம். விக்டோரியா மகாராணி காலத்தில் அவர் விருப்பத்திற்கு ஏற்ப நீல வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டன. அதற்கு முன்பு, அதாவது 19ம் நூற்றாண்டிற்கு முன்பு வரை பொம்மைகள் ப்ரெளன் நிறத்தில் கண்சிமிட்டின.

தொழில் மயமாக்குதல் தொடங்கிய உடன், போர்சலீனில் தலை மற்றும் மரம் அல்லது துணி, மரம் என்று ஏதோ ஒன்றில் உடல் செய்யப்பட்டது. பேப்பர் மேஷ் பொம்மைகளும் தனியே நடனமாடத்தொடங்கின.

குழந்தைகளுக்கு இன்றும் என்றும் விருப்பமான டெடிபேர் பொம்மைகள் 1902ல் கண்ணாடி ஷெல்புகளை அலங்கரிக்கத்தொடங்கின. ப்ளாக் டால்ஸ் கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு ஆசாமிகளுக்காக வெளிவரத்தொடங்கின.

வித வித உடை, நடை ஆவனையோடு உலா வரும் பார்பீ பொம்மைகள் 1959 லும், ஆக்‌ஷன் பொம்மைகளான ஹீ மேன் சூப்பர்மேன் வகை பொம்மைகள் 1964ல் களத்தில் குதித்தன.

இந்தப் பொம்மைகளைப்பொறுத்தவரையில், இவை நமக்கு ஒரு கிக் கொடுப்பதால் என்னவோ , வைன் பானத்தைப்போலவே நாளாக ஆக மதிப்பு கூடிக்கொண்டே போகிறது. உதாரணத்திற்கு ப்ரான்ஸ் நாட்டின் 19ம் நூற்றாண்டின் பிஸ்க்யூ பொம்மைகளின் இன்றைய மதிப்பு குறைந்தது இரண்டாயிரம் டாலர்ஸ்.

சரி, இந்தப் பொம்மைகளுக்கு உடம்பு சரி இல்லாமல் போனால்...அட இருக்கவே இருக்கிறது டால் ஹாஸ்பிடல் . சிரிக்க வேண்டாம். லிஸ்பனில் 1830ல் முதல் முறையாகத் தொடங்கப்பட்டது. ஆஸ்ட்ரேலியா, பாரிஸ் போன்ற நகரங்களிலும் இவை தொடங்கப்பட்டன.

காதைக் கொண்டுவாருங்கள், இங்கே பொம்மைகளை கொண்டு வருவது குழந்தைகளல்ல, அறுபது வயதைக்கடந்த பெரியவர்களே. 43 வருடமாக பாரீசில் இப்படி ஒரு பொம்மை டாக்டர் இதுவரை 30000 பொம்மைகளை சர்வீஸ் செய்திருக்கிறாராம். அட, நம்ம ஊர் பொய் டாக்டர்கள் இதைவிட நிறைய நோயாளிகளைப் பொம்மைகளாக்கி சிகிச்சை கொடுத்து ரெகார்ட் ப்ரேக் பண்ணியிருக்கிறார்கள்!

சரி நம் நாட்டுப் பொம்மைகளைப்பற்றியும் ஒரு சின்னப்பார்வை பார்த்துவிடலாம். சமீபகாலமாக இறக்குமதியான சீன பொம்மைகளும், பார்பி மற்றும் ஜியஜோ பொம்மைகளைத்தான் இந்தத்தலைமுறை அறிந்தாலும், மரத்தினால் ஆன சொப்பு பொம்மைகள், களிமண் செட்டியார் பொம்மை, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, மாக்கல் சமையல் செட்டு, மரபாச்சு பொம்மைகள்...இவற்றை நாம் மறக்கமுடியாது மறக்கவும் கூடாது. பிறந்த குழந்தைக்கு மரப்பாச்சுவை இழைத்து தாய்ப்பாலுடன் கொடுத்தது ஒரு காலம். வீட்டில் இந்தப் பொம்மை ஒன்றை வைத்தால் தீமை நெருங்காது என்றும் நம்பிக்கை. நம்பிக்கைகள் இன்றும் இருக்கின்றன....என்ன நம் நாட்டுப் பொம்மையை விட்டு சிரிக்கும் புத்தாவிற்கு மாறிவிட்டோம்.

மொகஞ்சதாரோ, ஹரப்பா காலத்திலேயே இருந்த மரம் மற்றும் உலோக பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் பொம்மைகளுக்கு புகழ்பெற்ற மாநிலம்.ஜெய்ப்பூரின் துணி பொம்மைகளுக்கும் தனி இடம் உண்டு. உதய்பூரின் மர பொம்மைகள், சிட்டோகர்க் டிஸ்ட்ரிக்டில் உள்ள பாஸி, க்வாலியரின் பாடோ பாய் பொம்மை, ஆந்திராவின் கொண்டப்பள்ளி பொம்மைகள், ஹரியானாவின் பொம்மை உருவங்கள், தஞ்சாவூரின் தலையாட்டி பொம்மைகள், திருச்சானூரில் தயாரிக்கப்படும் திருப்பதி பொம்மைகள், விசாகப்பட்டினத்தின் அரக்கு பொம்மைகள்...

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். எனக்கு வேலை இருக்கிறது. சின்ன வயதில் விளையாடிய கரடி பொம்மையைத் தேடப்போகவேண்டும்!

நீங்களுமா?

லதா ரகுநாதன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x