

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒரு முறை கூட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி கோப்பையை வென்றதில்லை. இதனால் மற்ற அணி ரசிகர்கள் ஆர்சிபி ரசிகர்களை அவ்வப்போது கேலி கிண்டல் செய்வது வழக்கம். ஆர்சிபி-யின் ‘ஈ சாலா கப் நமதே’ மந்திரமும் உலகப் பிரபலம். கோலி, கெயில், ஏபி டிவில்லியர்ஸ் போன்று நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றபோதும், கேப்டன்சி மாறியபோதும் பெங்களூரு அணியால் கோப்பையை எட்டிப்பிடிக்க முடியவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் போன்று தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் இந்த அணி, எப்படியாவது கோப்பையைக் கைப்பற்ற வேண்டுமென்பது ரசிகர்களின் நீண்ட நாள் கனவு.
இப்படி கோப்பையை எதிர்ப்பார்த்து தீவிர ரசிகர் ஒருவர் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஆர்சிபி அணியின் ஜெர்சியை புனித நீரில் வைத்து வழிபாடு செய்த சம்பவம் வைரலாகியுள்ளது. நெட்டிசன்கள் சிலர் இந்த வீடியோவுக்கு ‘ஹாஹா’ பதிவிட்டு கடந்தாலும், இன்னும் சிலர், ‘கும்பமேளா போன்ற நிகழ்வுகளில் இதுபோன்ற கவன ஈர்ப்பு செயல்களில் ஈடுபடக்கூடாது’ எனவும் கருத்துத் தெரிவித்துள்ளனர். - தீமா