

என்னதான் இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றாலும், செஸ் விளையாட்டில் கோப்பையைக் தூக்கினாலும் இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கு கிரிக்கெட்டின் மீது தனிப்பட்ட காதல் உண்டு. அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதைக் காண காலை 5 மணிக்கு அலாரம் வைத்து எழுகிறார்கள்! ஒரு கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வென்றாலும் தோற்றாலும் அதன் மவுசு குறையப்போவதில்லை.
இதைச் சுட்டிக்காட்டியுள்ள இந்திய பாரா-பாட்மிண்டன் வீராங்கனை மானசி ஜோஷி, “கிரிக்கெட் விளையாட்டைப் போல பாரா விளையாட்டுகளுக்காக அரசு நிதி ஒதுக்கினால் நாங்களும் வென்று காட்டுவோம், நல்ல முடிவுகளைப் பெற்றுத் தருவோம்” எனத் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது விவாதப் பொருளாகியுள்ளது.
சிலர் இவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, ‘கிரிக்கெட்டைப் போல மற்ற விளையாட்டுகளிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர், ‘இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை பிசிசிஐ எனும் தனி அமைப்புதான் நிர்வகிக்கிறது, அரசு அல்ல’ என்றும் ‘மற்ற விளையாட்டுகளைவிட கிரிக்கெட்டில் சுவாரசியம் அதிகம்’ என்றும் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். - வசி