

ஸ்பேடெக்ஸ் பரிசோதனையில் ஈடுபடும் SDX01 என்கிற துரத்து விண்கலமும் SDX02 என்கிற இலக்கு விண்கலமும் PSLV-C60 ஏவூர்தி மூலம் நேற்று இரவு விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. விண்வெளி விண்கல இணைப்பு பரிசோதனைதான் ஸ்பேடெக்ஸ் (SpaDeX -Space Docking Experiment).
மிகமிக உயரே உள்ள கம்பத்தில் கையால் பிடித்தபடி ஊஞ்சல் ஆடும் சர்க்கஸ் வீரர் திடீர் என்று தன் கைப்பிடியை விட்டு அந்தரத்தில் பல்டி அடித்து மற்றொரு வீரரின் கையைப் பிடித்து மாறுவது போல விண்வெளியில் இரண்டு விண்கலங்கள், ஒன்றை ஒன்று நெருங்கி இரண்டு ரயில் பெட்டிகள் இணைவது போல இணையும் பரிசோதனை அடுத்த சில நாட்களில் நடைபெற உள்ளது.
பல ரயில் பெட்டிகளை ஒன்றன் பின் ஒன்றாக இணைத்து ரயில் வண்டி தொடரை ஏற்படுத்தி இரண்டு பெட்டிகளுக்கு இடையே பாலம் போன்ற அமைப்பை உருவாக்கி, ஒரு பெட்டியிலிருந்து மறு பெட்டிக்கு செல்ல நடைபாதை வாயில் இருக்கும். இதேபோல விண்வெளியில் இரண்டு விண்கலங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து இரண்டுக்கும் நடுவே ஆட்கள் செல்வதற்கான பாதை ஏற்படுத்துவதுதான் விண்வெளி விண்கல இணைப்பு. ரயில் பெட்டியை இணைத்து பாதை ஏற்படுத்தும்போது கீழே விழுந்துவிடாமல் இருக்க உறுதியான பலகையும், மழை வெயில் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க சுற்றிலும் திரையும் போதும். ஆனால் விண்வெளியில் இணைப்பு ஏற்படுத்தும்போது இரண்டு விண்கலங்களில் இருந்தும் காற்று வெளியேற முடியாதபடிக்கு சீல் செய்த இணைப்பை ஏற்படுத்த வேண்டும்.
கப்பலை துறைமுகத்தில் நிறுத்துவதைப் போல, விண்வெளிக்குடிலில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்பு தளங்கள் இருக்கும். போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் தனது கலத்தை விண்வெளிக்குடிலின் நிறுத்து இணைப்பு தளத்தோடு பிணைத்து அதன் வழியே குடிலுக்குள் குடியேறினார். பூமிக்கு திரும்பும்போது இதேபோல இந்த இணைப்பு வழியே விண்கலத்தில் நுழைந்து, விண்கல இணைப்பைப் பிரித்து, வரும் 2025 பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்.
பேருந்துகள், ரயில்களில் ஆபத்துகால வாயில் உள்ளதுபோல மனித விண்வெளி பயணத்துக்கு விண்கலங்களில் இதுபோன்ற இணைப்பு தளம் அவசியம். ‘ககன்யான்’ திட்டத்தின் மூலம் இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சுமார் 470 கி.மீ. உயரத்தில் சில நொடி வித்தியாசத்தில் பூமியை சுற்ற ஏவப்படும் துரத்து விண்கலம்SDX01 -க்கும் SDX02 இலக்கு விண்கலத்துக்கும் இடையே பத்து நாட்களில் சுமார் ஐம்பது கி.மீ. இடைவெளி ஏற்பட்டுவிடும். நெடுஞ்சாலையில் நாம் நமது காரின் வேகத்தைக் கூட்டி நமக்கு முன்னே போகும் நண்பரின்
காரை எட்டிப் பிடித்துவிட முடியும். ஆனால் பூமியைச் சுற்றி வரும் விண்கலம் தனது வேகத்தைக் கூட்டினால் அதன் உயரம் கூடும்; வேகத்தைக் குறைத்துக்கொண்டால் உயரம் குறையும். எனவே துரத்து விண்கலம் வேகம் எடுத்து முன்னேறினால் அதன் உயரம் கூடி வேறு பாதையில் செல்லும். எனவே இரண்டும் இணையும் நிகழ்வு சிக்கல் மிகுந்தது.
ஐம்பது கிலோமீட்டர் இடைவெளியை முதலில் ஐந்து கி.மீ. இடைவெளியாகக் குறைப்பார்கள். துரத்து விண்கலம் வேகம் எடுத்து முன்னேறும்; அதன் பாதை சற்றே உயரும். அந்த நிலையில் இரண்டும் நெருங்கும் நேரத்தில் இலக்கு விண்கல மும் தன் வேகத்தைக் கூட்டி தனது உயரத்தை கூட்டிக்கொள்ளும். இதன் பிறகு இரண்டு விண்கலத்துக்கும் இடையே ஐந்து கி.மீ. இடைவெளி இருக்கும். மறுபடி மறுபடி துரத்து விண்கலம் முன்னேறும்; உயரம் சற்றே கூடும். அதற்கு ஈடு செய்யும் வகையில் இலக்கு விண்கலம் தன் உயரத்தைக் கூட்டி அதே பாதைக்கு வந்து சேரும். இந்த இரண்டாம் கட்டத்துக்கு பிறகு இரண்டுக்கும் இடையே இடைவெளி 1.5 கி.மீ. ஆகக் குறையும்.
இதேபோல இயக்கிப் படிப்படியாக 500 மீட்டர், 225 மீ, 15 மீ, 3 மீ என அடுத்தடுத்து இடைவெளியைக் குறைப்பார்கள். சிறு உந்து ராக்கெட்களை பயன்படுத்தி இறுதியில் இரண்டு விண்கலங்களும் ஜாடிக்கு ஏற்ற மூடிபோல நேர்க்கோட்டில் வந்து சேரும். நொடிக்கு ஒரு செ.மீ. வேகத்தில் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதும். மோதும்போது அதில் உள்ள இணைப்பான்கள் இயங்கி ஒன்றுடன் ஒன்று பிணைந்து இணைந்து கொள்ளும். சோவியத் யூனியன் அக்டோபர் 30, 1967 அன்று, காஸ்மோஸ் 186 விண்கலத்தை விண்வெளியில் காஸ்மோஸ் 188 விண்கலத்தோடு இணைத்து முதல் ஆளில்லா விண்வெளி விண்கல இணைப்பு சோதனையை மேற்கொண்டது.
பின்னர் விண்வெளி வீரர்கள் தாங்கிய சோவியத் யூனியனின் சோயுஸ் 4 விண்கலம் சோயுஸ் 5 விண்கலத்துடன் இணைந்து மனித விண்கல இணைப்பு சோதனையை 1969-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி நடத்தியது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு ஆளில்லா விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பி ஒன்றுடன் ஒன்றை இணைத்து ரயில் வண்டி தொடர்போல உலகின் முதன் முதல் விண்வெளி நிலையமான சல்யுட்டை ஏப்ரல் 19, 1971-ல் சோவியத் யூனியன் நிலை நிறுத்தியது. இதில் மூன்று பேர் கொண்ட குழுவினர் 24 நாள் விண்வெளியில் பயணித்து சாதனை செய்தனர்.
இதைத் தொடர்ந்து விரைவில் அமெரிக்காவும், பின்னர், 2011-ல் சீனாவும் வெற்றிகரமாக விண்வெளி இணைப்பு சாதனைகளை நிகழ்த்தின. நான்காவது நாடாக இந்தியா இந்த முயற்சியை மேற்கொண்ட போதிலும், இஸ்ரோ தயாரித்த புதுமுறை இணைப்பு தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்யப் போகிறார்கள் என்பதுதான் சிறப்பு. சர்வதேச விண்வெளி குடில் உட்பட மனிதர்களை ஏந்திச் செல்லும் விண்கலங்களில் எல்லாம் இதுபோன்ற இணைப்பான் வாசல் இருக்கும். தற்போது உள்ள இணைப்பான்கள் பெரும் எடை கொண்டவை, பல மோட்டர்கள் இயங்கிதான் பிணைப்பை உறுதிப்படுத்தும். எடை குறைவாகவும் ஒரே ஒரு மோட்டாரில் இயங்கும்படியும் புதிய வடிவ பிணைப்பு கொக்கிகளை வடிவமைத்தும் இஸ்ரோ புதிய தொழில்நுட்பத்தை தயாரித்துள்ளது. இதை இந்தப் பரிசோதனையில் சோதனை செய்வார்கள். மேலும் இரண்டு கலங்கள் விண்வெளியில் அடிமேல் அடி வைத்து ஒன்றை ஒன்று நெருங்க தேவையான செயற்கை நுண்ணறிவு அல்காரிதம்களை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இதையும் சோதனை செய்வார்கள்.
இஸ்ரோவின் எதிர்கால கனவுகளான மனித விண்வெளிப் பயணத்துக்கான இந்தியாவின் லட்சியங்கள், நிலவில் தரையிறங்கி கல் மண் மாதிரிகளை சேகரித்து அங்கிருந்து வேறு ஒரு ராக்கெட்டை இயக்கி விண்கலத்தில் இந்த மாதிரிகளை பூமிக்கு திரும்ப எடுத்துவரும் சந்திரயான்-4 திட்டம், இந்தியாவின் விண்வெளி நிலையமான பாரதீய அந்தரிக் ஷ் நிலைய கட்டுமானம் ஆகியவற்றுக்கு விண்வெளி விண்கல இணைப்பு தொழில் நுட்பம் அவசியமாகிறது.