

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் 55-வது கூட்டம் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் நடைபெற்றது. இதில் பாப்கார்னுக்கு வரி விதித்தது தொடர்பாக வெளியான அறிவிப்பு இணையச் சமூகத்தை கலங்க வைக்க, உடனே ‘பாப்கார்ன் மீம்ஸ்’ எனும் தலைப்பைக் கையில் எடுத்தனர் இணையவாசிகள்.
உப்பு, மசாலா சேர்த்து பேக் செய்யப்பட்டு லேபிள் இடப்படாத பாப்கார்ன்களுக்கு 5 சதவீதமும், பேக் செய்யப்பட்டு லேபிள் இடப்பட்டிருந்தால் அவற்றுக்கு 12 சதவீதமும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி காராமெல் பாப்கார்ன் போன்று சுவை சேர்க்கப்பட்ட பாப்கார்ன்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ’சால்டட் பாப்கார்னுக்கு ஒரு வரி, காரமெல் பாப்கார்னுக்கு ஒரு வரி, அப்போ சால்டட்-காரமெல் பாப்கார்னுக்கு எவ்வளவு வரி?’ என்கிற பதிவு வைரலானது. ‘ஏற்கெனவே மால் தியேட்டரில் பாப்கார்னின் விலை அதிகம், இனிமேல் பாப்கார்னை மறந்துட வேண்டியதுதான்’, ’மீமர்களே உஷார்! பாப்கார்ன் மீம்ஸ்க்கும் வரி வந்துடப் போகுது’ போன்ற பாப்கார்ன் தொடர்பான பதிவுகள் சமூக வலைதளங்களை வட்டமடிக்கின்றன. - மார்க்கி