

பெரியார் ஈ.வெ.ராமசாமியின் 51-வது நினைவு நாளையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர். சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலை, உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு இடங்களிலுள்ள பெரியார் சிலைகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். ஆனால், தவெக தலைவர் விஜய் பனையூரிலுள்ள தனது கட்சி அலுவலகத்தில் பெரியார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியது பேசு பொருளாகியுள்ளது.
அதோடு ‘எக்ஸ்’ தளத்தில் ‘சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார்...’ எனப் பதிவு ஒன்றையும் பகிர்ந்திருந்தார் விஜய். ஏற்கெனவே மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று நலம் விசாரிக்காமல் தனது கட்சி அலுவலகத்துக்கு அழைத்து விஜய் நிவாரண உதவி வழங்கியது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இதையடுத்து இப்போது, ‘தவெக-வின் கொள்கைத் தலைவர் பெரியார் என அறிவித்துவிட்டு இப்படி கட்சி அலுவலகத்தில் இருந்தே மரியாதை செலுத்தியிருப்பது சரிதானா?’ எனவும் ‘அரசியலுக்கு வந்துவிட்டு எப்போதுமே வொர்க் ஃப்ரம் ஹோம் செய்தால் எப்படி?’ எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விஜய்யை போலவே சசிகலாவும் தனது வீட்டிலேயே பெரியார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. - வசி