

புதுடெல்லி: இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் தீபாவளித் திருவிழா கொண்டாடப்பட்டது. இதை அந்நகரில் உள்ள வட தமிழ் சங்கத்தின் தமிழர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தீபாவளி பண்டிகை முடிந்த பின்பும் அதன் மீதான விழாக்கள் முடிவதில்லை. தீபாவளியைத் தாமதமானாலும் ஒன்றுகூடிக் கொண்டாடுவது வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இடையே வழக்கமாக உள்ளது. இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் மிகச் சிறப்பான முறையில் தீபாவளி திருவிழா கடந்த சனிக்கிழமை அங்குள்ள வட தமிழ் சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் அந்நகரில் வாழும் தமிழர்கள் பெருந்திரளாக கூடிக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக பர்மிங்காம் நகரின் இந்திய தூதரக தலைமைச் செயலக அதிகாரி முனைவர் வெங்கடாசலம் முருகன் கலந்து கொண்டார். தமிழகத்தின் காங்கேயம் தமிழரான தூதரக அதிகாரி வெங்கடாசலம் தனது சிறப்புரையில், “இது போன்ற தரமான நிகழ்ச்சிகளுடன் தீபாவளி கொண்டாடுவது மகிழ்ச்சியானது. இந்த அளவு சிறப்புடன் வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களின் கலைநிகழ்ச்சிகளை காண்பது இதுவே முதல் முறை. இது போன்ற நிகழ்வுகளை வட தமிழ் சங்கம் தொடர்ந்து நடத்த வேண்டும். இதன்மூலம், தமிழர்களின் கலாச்சாரம் அயல்நாடுகளில் செழித்து வளரும்” எனத் தெரிவித்தார்.
வட தமிழ்ச் சங்கம் ஐக்கிய ராஜ்ஜியத்தில் கடந்த 38 ஆண்டுகளாக புலம் பெயர்ந்த தமிழ் மக்களால் துவங்கி நடத்தப்படுகிறது. வட தமிழ்ச் சங்கம் இங்கிலாந்து நாட்டின் தொண்டு நிறுவனங்களின் ஒழுங்குமுறை அமைப்பான சாரிடி கமிஷன் என்ற நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகும். இந்த சங்கத்தின் சார்பில் தமிழ் மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், மற்றும் தமிழர் வாழ்வியலை போற்றப்படுகிறது. இங்கிலாந்தில் பிறந்து வளரும் தங்கள் சந்ததியினரிடம் தமிழை கொண்டு சேர்க்கும் வகையிலும் செயல்பட்டு வருகிறது. முன்னதாக, இந்த ஆண்டின் தீபாவளி திருவிழாவில் ஐக்கிய ராஜ்ஜியத்தின் நடனம், நாட்டியம், பாடல், இசை, நாடகம் என பல போட்டிகளும் நடைபெற்றன.
இப்போட்டிகள், 10 மண்டலங்களுக்கு இடையேயான பல்வேறு பிரிவுகளின் கீழ் எல்லா வயதினருக்குமாக நடைபெற்றது. இப்போட்டிகளில் சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமாகப் பங்கேற்றனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளும் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து வெகு தூரம் தள்ளி வாழ்ந்தாலும் நம் தமிழர்கள் தங்கள் தமிழ் மொழி, பண்பாடு ஆகியவற்றை பாதுகாக்க உழைக்கின்றனர்.
தமிழ் மொழி உலகம் முழுதும் விரிந்து பரவும் என்பது இது போன்ற செயல்பாடுகளால் தெளிவாகிறது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வடதமிழ் சங்கத்தின் தலைவர் மதுசங்கர் பாலசுப்பிரமணியம், துணைத் தலைவர் ஜோ கருணா, செயலாளர் சுரேஷ் சண்முகசுந்தரம் உள்ளிட்ட விழா குழுவினர் வரவேற்று உபசரித்தனர்.
சுமார் 750 பேர் கலந்து கொண்ட இந்த விழாவில், அயலக தமிழர்களின் தமிழ்நாட்டு அரசின் பிரதிநிதியாக பைசல் கலந்து கொண்டார். கலை இலக்கியம் மட்டுமல்லாது ஐக்கிய ராஜ்ஜியத்தின் வட தமிழ் சங்கம் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகவும் விளங்குகிறது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் பல நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலமாக நிதி திரட்டப்படுகிறது. இந்த நிதியை, வறுமையில் வாடுபவர்கள் மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதும் நடைபெறுகிறது. இதுபோன்றவர்களுக்கு உதவ ஐக்கிய ராஜ்ஜியத் தமிழர்கள் நிதி மற்றும் பொருள் உதவிகளை தாராளமாக செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.