Published : 29 Jun 2018 14:51 pm

Updated : 29 Jun 2018 14:51 pm

 

Published : 29 Jun 2018 02:51 PM
Last Updated : 29 Jun 2018 02:51 PM

சின்ன சின்ன வரலாறு – 12 அழிப்பானை மறவோம்!

12

'நம்ம தலைல பிரம்மா எழுதிட்டானே. இப்படி இப்படித்தான்னு! இதை மாத்த யாரால முடியும்?’ முடியாதுதான். ஆனால், நாமோ நம்மைச் சுற்றியுள்ளவர்களின் எழுத்துக்களை, கிறுக்கல்களை நிச்சயம் சரிசெய்துவிடமுடியும்.

ஞாபகம் இருக்குதானே அரை டிராயர் உருவங்களும் ரெட்டைஜடை முகங்களும்! அப்போது எழுதிக்கொண்டே வருகிற போது ஒரு சின்னத்தவறு நேர்ந்துவிட, அந்தத் தவறை சரிசெய்ய அந்தப் பொருளைத் தேடுவோம். ஆமாம்... ரப்பரின் கதைதான் இது! ரப்பருக்கு இன்னொரு பெயரும் உண்டு.

எரேஸர். கனடா, அமெரிக்கா முதலான நாடுகளில் எரேஸர் என்றும் யுனைடெட் கிங்டம், இந்தியா, அயர்லாந்து, கிழக்கு ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ரப்பர் என்றும் சொல்லப்படுகிறது. ரப்பரின் வரலாறைச் சொல்லும் அதேவேளையில் ஒரு மெல்லிய சோகம் எட்டிப்பார்க்கிறது. இது... இப்போது, பேப்பர்லெஸ் எகானமியை ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிற காலகட்டம். எழுதுவதும் குறைந்துவிட்டன. அப்படியே எழுதினாலும் கம்ப்யூட்டரில் எழுத ஆரம்பித்து, வருடங்கள் ஓடிவிட்டன.

 இங்கே அழிப்பான் என்பதோ ரப்பர் என்பதோ ஒரேயொரு பட்டன். டெலிட் பட்டன்! அவ்வளவுதான். சரி... ரப்பரின் சரித்திரம் பார்ப்போம். அழிப்பான் என்கிற ரப்பர் 1770ல் தான் கண்டுபிடிக்கப்பட்டது. ரப்பரின் அழிக்கும் குணத்தை, ஜோசப் ப்ரிஸ்ட்லி என்பவர் கண்டுபிடித்தார். இவரைப்பற்றிய மற்றுமொரு தகவல், ஆக்சிஜன் மற்றும் சோடா நீரைக் கண்டுபிடித்தவரும் இவர்தான்! ஆனால் இவர் இதைக் கண்டுபிடித்ததுடன் நின்று விட்டார்.

ஐரோப்பாவின் எட்வார்ட் நைர்னி என்பவர்தான் ரப்பர் என்பதை ஒரு பொருளாக உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இவருக்கும் ரப்பருக்குமான தொடர்பு சுவாரஸ்யமானது. ஒருநாள், காலை உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற போது, அழிப்பதற்கு பிரெட்டை எடுப்பதற்குப் பதிலாக வேறொரு பொருளை எடுத்துவிட்டார்.

ஆமாம், நன்றாக மொறுமொறுப்பு இல்லாத பிரெட்டுகள், அழிக்கப் பயன்படுத்தப்பட்டன. அப்படித் தவறுதலாக அவர் எடுத்த பொருள்தான் மிகச் சரியானது. ஆமாம்... அதுதான் ரப்பர்! 1770ல், ரப்பர் என்று பெயரிடப்பட்டு செடிகளிலிருந்து எடுக்கப்பட்ட இயற்கை ரப்பர்கள் உபயோகத்திற்கு வந்தன.

ஆனால் அதற்கு முன்பாகவே உருட்டப்பட்ட அல்லது தட்டப்பட்ட ரப்பர் அல்லது மெழுகு உருண்டைகள் "கம் இலாஸ்டிக்" அல்லது கெளட்சொவ் என்று வழக்கத்தில் இருந்தது. அழிப்பதற்கு என்பதாக ரப்பர் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை வெகு சீக்கிரமே நலிந்தும் மெலிந்தும் போயின.

அதனால், ரப்பரின் உபயோகம் மட்டுப்பட்டது. தவிர, இப்படி இயற்கையான பொருளை பதப்படுத்தாமல் உபயோகிப்பதால் ரப்பரால் அழிக்கப்பட்ட பக்கங்களில் துர்நாற்றம் வீசத்தொடங்கியது. இவற்றை மனதில் கொண்டு சார்ல்ஸ் குட்யியர் என்பவரால் 1839 ம் ஆண்டு ரப்பர் வல்கனைஸ் செய்யப்பட்டு நாம் உபயோகிக்கக்கூடிய வடிவம் பிறப்பெடுத்தது. இதன் பின் ரப்பரின் வளர்ச்சி அசுர வேகத்தில் நடந்தது.

புட்டி ரப்பர் அல்லது நீடட் ரப்பர் கரி மற்றும் க்ரபைட்டை ஒத்தி எடுப்பதற்கு, வினையில் ரப்பர்கள் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களை இலகுவாக அழிக்க, பென்சிலுடன் கூடிய காப் எரேசர், ஆர்ட்கம் எரேசர் என்று வித விதமாக வந்தன.

1932ல் ஆர்தர் டிரெமில் என்பவரால் எலெக்ட்ரிக் ரப்பர் கண்டுபிடிக்கப்பட்டது. மோட்டாரில் பதிக்கப்பட்டு பேப்பரின் மீது சுற்றிச்சுற்றி வந்து அழிக்கும் இது, மிகவும் அழுத்தம் கொடுக்காமல் அழிப்பதால் பேப்பர்கள் கிழியாமல் அழிக்க உதவியது. நாம் படித்த காலகட்டத்தில், செண்ட் ரப்பர் மற்றும் இங்க் ரப்பர்கள் இருந்ததெல்லாம் நினைவிற்கு வரலாம்.

இந்த நினைவே செண்ட் ரப்பரின் மணத்தை நாசிக்கு இன்றும் கொண்டு சேர்க்கின்றன. அதேபோல் இங்க் ரப்பரின் எந்தப் பாகம் பென்சில் மார்க்கை அழிப்பதற்கு, எது இங்க் எழுத்தை அழிப்பதற்கு என்று திகைத்து மாற்றி மாற்றி அழித்துப்பார்த்த நினைவுகளும் வருகின்றன.

தற்போது உபயோகத்திலிருக்கும் எரேசர்கள் இயற்கை அல்லது சிந்தெடிக் வகைப்படும். இயற்கை ரப்பர், ரப்பர் மரத்தின் லேடெக்ஸ்சிலிருந்தும், சிந்தெடிக் வகை ஸ்டெரீன் மற்றும் புடாடீன் எனும் கெமிக்கலில் இருந்தும் தயாரிக்கப்படுகிறது தட்டையாக அல்லது உருளை வடிவத்தில் நாம் பார்த்த எரேசர்கள் எடுத்துள்ள புதிய வடிவம் " எர்கோரேசர்".

ஒரு ஸ்பூன் வடிவில் அமைக்கப்பட இந்த எரேசரின் குழிவில், நம் கட்டைவிரல் கொண்டு அழுத்தம் கொடுக்க முடியும். பென்சிலுக்கும் ரப்பருக்கும் உள்ள தொடர்பு...நாம் அழிக்கும் வேகத்திலேயே புரிந்து விடுகிறது. சரி, இரண்டுக்குமான வேறுபாடு? பென்சில்கள் மேனுவலாக அதாவது கைமுறையாக செயல்படுகின்றன.

 எரேசர்கள் கெமிக்கல் முறையாகச் செயல்படுகின்றன. அதாவது, பென்சிலை நாம் பேப்பரில் அழுத்தும்போது பேப்பரில் உள்ள பைபர் தூள்களுடன் பென்சில் லெட்டின் கிரபைட் கலந்து விட்டு நமக்கு பளிச்சென்று தெரிகிறது.

இது மேனுவல். ஆனால் எரேசர்களின் பாலிமர் தூள்கள் பேப்பர் தூள்களை விட பிசுபிசுப்பு அதிகமாக உள்ளதால் அவை ஒரு காந்தம் போல் செயல்படுகிறது. இப்போது எரேசரைப் போலவே அதன் பயனைத் தருகிற பெலிக்கான்களும் வந்துவிட்டன.

ஜெர்மனியைச் சேர்ந்த பெலிக்கன் என்பவர், 1930களில், கண்டுபிடித்தார். அவர் தயாரித்த பொருளுக்கு பெலிக்கன் என்றே பெயர் அமைந்தது. ஏப்ரல் 15ம் தேதி, நேஷனல் ரப்பர் எரேசர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. சில விஷயங்களைச் சொல்லும் போது, ‘என்னய்யா... ரப்பராட்டம் இழுஇழுன்னு இழுக்கறாங்களே...’ என்று சொல்லுவோம்தானே. நீங்கள் அப்படியெல்லாம் சொல்லிவிடக்கூடாது என்று ரப்பர் மேட்டரை, இழுக்காமல் முடித்துக்கொள்கிறேன்.
ரப்பர்அழிப்பான்வரலாறு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x