மாற்றுத் திறன் குழந்தைகளை எப்படி அடையாளம் காண்பது?

மாற்றுத் திறன் குழந்தைகளை எப்படி அடையாளம் காண்பது?
Updated on
1 min read

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கிவரும் நிதியுதவிகள், சலுகைத் திட்டங்கள், தொழிற்பயிற்சிகள் குறித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு கூட்டுறவு வங்கியில் தொழிற் கடன் வழங்கப்படுகிறதா?

18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் தொழில்முனைவோராக இருந்தால் அரசு சார்பு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் 5 முதல் 7 சதவீத வட்டிக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. ரூ.25 ஆயிரம் வரை கடனுதவி பெற சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் அல்லது நகர்ப்புற கூட்டுறவு வங்கி உறுப்பினர் உத்தரவாதம் அளிக்கவேண்டும். ரூ.50 ஆயிரம் வரை கடனுதவி பெற இருவரது உத்தரவாதம் வேண்டும். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கடனுதவி பெற சொத்துப் பிணையம் வழங்கவேண்டும்.

காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில் பயணத்தில் கட்டணச் சலுகை எவ்வளவு வழங்கப்படுகிறது?

கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள் 75 சதவீத கட்டணச் சலுகையில் ரயிலில் பயணம் செய்யலாம். அவர்களுக்கு மட்டுமின்றி, உடன் செல்லும் உதவியாளர்களுக்கும் கட்டணச் சலுகை உண்டு. தவிர, 50 சதவீத கட்டணத்தில் சீசன் டிக்கெட் எடுத்துக்கொண்டும் ரயிலில் பயணம் செய்யலாம். ஆனால், இதில் காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமே சலுகை வழங்கப்படுகிறது. அவர்களது உதவியாளருக்கு கட்டணச் சலுகை கிடையாது.

13 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் உதவிகள் வழங்கப்படுகிறதா?

13 வயதுக்கு உட்பட்ட கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் அறுவை சிகிச்சை செய்துகொள்ள உதவி வழங்கப்படுகிறது. ஏனெனில் அப்போதுதான் அதில் முன்னேற்றம் கிடைக்கும். 13 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் அறுவை சிகிச்சை தேவைப்பட்டால், மாற்றுத் திறனாளிகள் துறையை அணுகினால் வழிகாட்டப்படும்.

மாற்றுத் திறன் குழந்தைகள் எப்படி அடையாளம் காணப்படுகின்றன?

குழந்தைகள் இயல்பு நிலையில் உள்ளதா அல்லது குறைபாடுடன் இருக்கின்றனரா என்பதை தாய்மார்கள் அறிந்துகொள்ளும் வகையில் கிராமங்களில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் முகாம் அனைத்து மாவட்டங்களிலும் வட்டார அளவில் (ஊராட்சி ஒன்றியம்) நடத்தப்படுகிறது. அந்த முகாம்களுக்கு பெற்றோர் தங்களது குழந்தைகளை எடுத்துவந்தால், குறைபாடுகள் குறித்து பரிசோதனை செய்யப்படும். மாற்றுத் திறன் குழந்தை என்றால் அடையாள அட்டை வழங்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in