Last Updated : 02 Jun, 2018 09:22 AM

 

Published : 02 Jun 2018 09:22 AM
Last Updated : 02 Jun 2018 09:22 AM

சின்ன சின்ன வரலாறு: 8: சொட்டுத்தேன்

"அவள் செந்தமிழ் தேன் மொழியாள்.. சிரிக்கும் மலர்க்கொடியாள்", இந்தப்பாடலைக் கேட்டவர் யாரும் மறந்திருக்கமுடியாது காரணம் தேன் போன்ற பாடல். தேன் போன்ற குரல் தேன் போன்ற இசை. அட, இன்னுமா புரியவில்லை. இப்போது நாம் பேசப்போவது தேன் பற்றிய வரலாறு என்று!

நம் விருந்திலும் சரி, மருந்திலும் சரி தேனுக்கு ஒரு தனி இடம் உண்டு. யோசித்துப்பார்த்தால் அப்படி என்ன தனி தன்மை இந்தத் தேனுக்கு, எப்படி இது நிறையச் சாப்பிடும் விருந்திலும் பங்கேற்கிறது, நிறையச் சாப்பிட்டு அஜீரணமாகும் போது மருந்தாகவும் கொடுக்கப்படுகிறது?

இதைப்பற்றி பார்ப்பதற்கு முன் தேன் வழியைத் தேடி ஒரு பயணம்.

எட்டாயிரம் வருடத்திற்கு முன் தேன் உபயோகத்தில் இருந்ததற்கான ஆதாரம் ஸ்பெயின் நாட்டில் இருக்கும் வலென்சியா நகரத்தில் உள்ள ஒரு குகை சித்திரத்தில் கைகளில் குடுவையோடு தேன் சேகரிப்பதற்காக மரம் ஏறும் ஒருவரின் சித்திரமும் சுற்றிப்பறக்கும் தேனீகளின் சித்திரமும் வரையப்பட்டுள்ளன.

தேனின் கடைசல்கள் 4700-5500 ஆண்டுகள் முன்பானது. ஜார்ஜியா நாட்டில் ஒரு சமாதியின் கீழ் தோண்டி எடுக்கப்பட மண் பண்டங்களின் அடிப் பாகத்தில் இருந்ததாக வரலாறு சொல்கிறது.

இதில் மற்றுமொரு ஆச்சர்யம், பல்வேறு விதமான வகை தேன்கள் இப்படி சமாதிகளை தோண்டும் போது கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கான காரணம் இறந்தவர்களுக்கு இது படையல் போல் செலுத்தப்பட்டிருக்கிறது.

ஆக, தேனின் தேவை இறப்பையும் தாண்டிய ஒன்று.

இதற்கான மற்றுமொரு காரணம் , எகிப்து நாட்டில் தேன் இறந்த உடலைப் பதப்படுத்த உபயோகப்படுத்தப்பட்டது.அவர்களின் ஃபெர்டிலிடி கடவுள் மின்னிற்குத் தேன் முக்கிய படையல். தேனிற்கு மனிதனின் உற்பத்தி விதைகளை வலுவாக்கும் திறனும் உண்டு.

தற்போது ஒரு நாட்டின் விரிவாக்கம் செய்யப்படும்போது, ஒரே வித உற்பத்தித்திறனை நாட்டின் ஒரே இடத்தில் வைக்காமல் தகுந்த உரிமம் வழங்குவதன் மூலம் பல பகுதிகளாகப் பிரிப்பது போல, தேன் 594 பிசியில் அப்படி ஒரு முக்கியத்துவம் கொண்ட செயல்பாடாக இருந்ததால், கிரேக்க நாட்டின் மன்னன் சலோன் ஒரு சட்டம் கொண்டுவந்தான் . அதாவது ஒரு தேன் கூட்டிற்கும் மற்ற ஒன்றிற்கும் குறைந்தது 300 அடி தொலைவு இருக்கவேண்டும் என்பதே.

ஆக பல்வேறு நாடுகளில் சர்க்கரை உபயோகத்திற்கு வருவதற்குப் பல வருடங்களுக்கு முன்பிருந்தே தேன் ஒரு இனிப்புவழங்கியாக உபயோகத்தில் இருந்திருக்கிறது.

இந்தியாவைப் பொருத்த வரையில் இதன் உபயோகம் நாலாயிரம் வருடமாக என்று சொல்லலாம். நம் வேதம் மற்றும் ஆயுர்வேத குறிப்புக்களில் , தேன் பற்றிய குறிப்பீடுகளை நிறையவே காணலாம்.

சீனாவில் இதன் உபயோகம் தொடங்கப்பட்ட காலத்தைப்பற்றிய வரலாறு இல்லாவிட்டாலும்கூட தூ சே காங்க் அவர்களால் எழுதப்பட்ட நூலில் தேனீ வளர்ப்பு ஒரு முக்கியமான வணிகத்தொழிலாக கூறப்பட்டிருக்கிறது.

மாயன் நாகரீகத்தில் கொடுக்கில்லாத தேனீக்களை சாப்பாட்டிற்கும் வேறு சில நாகரீகங்கள் தேனை தொண்டைக்கட்டு, தோல் மருந்து மற்றும் வாயு கோளாறுகளுக்கும் பயன்படுத்தியதாக குறிப்புக்கள் சொல்கின்றன.

யூதர்கள் புது வருடத்தைத் தேனில் தோய்த்தெடுத்த ஆப்பிள் துண்டுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு கொண்டாடுவார்கள். புத்தமதத்தில் கொண்டாடப்படும் மது பூர்ணிமா நாளில் தேனை காணிக்கையாகச் சாதுக்களுக்கு கொடுப்பது வழக்கம். இதன் காரணம் கவுதமர் தவம் இருந்தபோது ஒரு குரங்கு அவர் உண்ணத் தேன் கொண்டு வந்ததால்கப் புராணம். இஸ்லாமிய மதத்திலும் மெளகமத் தேனை ஒரு உடல் காக்கும் நிவாரணியாக தன் போதனைகளில் உறைத்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்துக்கள் கடவுள் சிலைக்குத் தேனை அபிஷேகம் செய்து அதற்கு புனிதத்தன்மை அடையாளமிடுகிறார்கள். ஆனால் இதே புனிதமான தேனிலிருந்து மியட் பியரான " பிரகாட்" டும் செய்யப்படுகிறது.

தேனைப்பற்றி நிறையப் பார்த்துவிட்டோம். அதைத் தயாரிக்கும் தேனீகள் பற்றியும் சில சுவாரஸ்யமான தகவல்களைப்பார்ப்போம்.

ஒரு தேனி கூட்டில் ஒரே ஒரு ராணி தேனி தான் இருக்கும். தவிர வேலை செய்வதற்கு நிறைய வேலைக்கார பெண் தேனீகளும் , ராணி தேனியின் கரு உற்பத்திக்காக டிரோன் எனச் சொல்லப்படும் ஆண் தேனீகளும் இருக்கும். பூக்களிலிருந்து எடுக்கப்படும் தேன் தேனிகளின் வயிற்றில் தேக்கப்பட்டு, ஒரு தேனியிடமிருந்து மற்றொன்று என்று பரப்பப்பட்டு கூட்டைச்சென்று அடையும் போது மிகவும் அற்புதமாகப் பதப்படுத்தப்பட்ட நிலையை அடைந்திருக்கும். தேனீகளின் கூடுகளில் அவை சேமிப்பிற்காக வைக்கப்பட்டு, கூடுகளும் மூடப்படும்.

மிகவும் ஆச்சர்யமான தகவல் ஒன்று உண்டு. இப்படிப் பதப்படுத்தப்பட்ட தேன் ஒரு மிதமான சூட்டிலேயே வைக்கப்படும். இதை தேனீகள் தங்கள் உடல் வெப்பத்தின் மூலம் சாத்தியப்படுத்துகின்றன. தவிரத் தேவைக்கு ஏற்ப தங்கள் இறக்கைகளை ஒரு மின்விசிறி போல் பயன்படுத்தி காற்று மண்டலத்தை ஏற்படுத்துகிறது.

தேன் எவ்வளவு நாட்கள் வைத்திருந்தாலும் கெட்டுப்போவதில்லை. காரணம் தேனீக்களின் வயிற்றில் இருக்கும் என்சைம்கள் தேனுடன் சேர்க்கப்படுவது. இந்தக் காரணத்தினாலேயே தேனை நாம் பதப்படுத்த தேவை இல்லை. ரூம் டெம்பரேசரிலேயே கெட்டுப்போகாமல் வருடக்கணக்கில் இருக்கும்.

தேன் போல் உங்கள் நினைவில் தேன் இருக்க நான் நினைத்தேன், ஆகவே இவற்றை உறைத்தேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x